நவம்பர் 18, 2007 அன்று, வளைகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ·ப்ரீமாண்ட் கோவில் சரஸ்வதி அரங்கில் தீபாவளித் திருவிழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கற்பகம் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தனது வரவேற்புரையில் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். சௌந்தர்யலஹரி குழுவினர் தமிழில் இயற்றப்பட்ட சௌந்தர்யலஹரி பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். தொடர்ந்து செல்வி கீர்த்தனாவின் வாய்ப்பாட்டு, அக்ஷய் நரேஷ் குழுவினரின் புல்லாங்குழல், அஜிதா இயக்கத்தில் 'வெற்றி எட்டுத் திக்கும்' என்ற பாரதி பாட்டுக்கு பரத நாட்டியம் ஆகியவை நடைபெற்றன.
கலவை வெங்கட் அவர்கள் 'அமெரிக்காவில் தமிழ் கலாசாரம்-இன்றும் என்றென்றும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ராகவேந்திரன் கலி·போர்னியா பாடத்திட்ட பிரச்சினைகள் குறித்தும், வழக்கின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். திவ்யா மோகனின் வயலின், பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல், தீபா மகாதேவன் குழுவினரின் நடனம், நித்யவதி குழுவினரின் நாட்டியம் ஆகிய சிறுவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தவிர, ராமாயணத்திலிருந்து சித்ரா கருணாகரன் ஒருங்கமைத்த பாதுகைப் படல நாடகமும், லதா ஸ்ரீநிவாசன் குழுவினரின் 'சிந்துநதியின் மிசை' என்னும் கலாசார நடனமும், கௌரி சேஷாத்ரி குழுவினரின் குறு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சிறுவர்களுக்கான ஓவியப் போட்டியிலும் பெரியவர்களுக்கான ரங்கோலிப் போட்டியிலும் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன.
ச. திருமலைராஜன் |