பெர்க்கலியில் கலிபோர்னியா பல்கலை தமிழ்ப்பீடத்தின் பத்தாம் ஆண்டு விழா
அமெரிக்காவிலேயே பெர்க்கலியில் உள்ள கலி·போர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் தமிழுக்கென்று ஒரு பீடம் (Tamil Chair) நிறுவப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவின் வளைகுடாப் பகுதித் தமிழர்களின் முயற்சியால் நிறுவப்பட்ட இதற்கு அமெரிக்கா எங்கிலுமிருந்து தமிழர்கள் நிதி உதவி செய்து சாத்தியமாக்கினார்கள். இந்தப் பெருமைமிகு தமிழ்ப்பீடம் பத்தாண்டுகள் கண்டுவிட்டது. இந்தப் பீடத்தை அலங்கரிப்பவர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள். இத்துறையில் இவரோடு பணிசெய்கிறார் பேரா. கௌசல்யா ஹார்ட்.

'400,000 டாலர் நிதியில் தொடங்கப்பட்ட இந்தத் தமிழ்ப்பீட நிதி இப்போது ஒரு மில்லியன் டாலரை எட்டிவிட்டது. சுமார் 3-4 சதவீதம் இதிலிருந்து வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் யார் இப்பீடத்தின் பேராசிரியர் என்பதை பெர்க்கலி பல்கலை தீர்மானிக்கிறது. அந்தப் பேராசிரியர் இந்த வருவாயைத் தமிழ்க் கல்விக்கு எப்படிச் செலவிடலாம் என்பதைத் தீர்மானிக்கிறார்' என்று விளக்குகிறார் பேரா. ஹார்ட். தமிழ் மாநாடு, பட்டப்படிப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை, தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்களைத் தருவித்தல் போன்றவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படுகிறது.

##Caption##பெர்க்கலி பல்கலையின் தெற்காசிய, தென்கிழக்காசிய மொழிகள் துறையின் ஒரு பகுதியே தமிழ்ப்பீடம் ஆகும். இந்தத் துறை தற்போது 12 மொழிகளைப் பயிற்றுவிக்கிறது. 'ஒரு முழுநேரப் பேராசிரியரும் ஒரு பகுதிநேரப் பேராசிரியரும் மட்டுமே இப்போது தமிழுக்கு இருக்கிறார்கள். தற்போதைய நிதி நிலையில் பேராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சாத்தியமில்லை' என்கிறார் ஹார்ட். அடிப்படைத் தமிழைக் கற்க 12 மாணவர்களும், மேல்நிலையில் 12 மாணவர்களும் இருக்கிறார்கள். 'சமீபத்திய முனைவர் பட்ட மாணவர்கள் உட்பட என்னிடம் 10 ஆய்வு மாணவர்கள் உள்ளனர். இது மிகப் பெரிய எண்ணிக்கை. சங்க இலக்கியம், சித்தர் நூல்கள், வைணவம், திருமந்திரம் என்று மிகப்பல தலைப்புகளில் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்' என்று கூறும் பேராசிரியரின் குரலில் பெருமிதம் தெரிகிறது.

பட்டப்படிப்பு நிலையில் பெரும்பாலும் தமிழ்ப் பெற்றோரைக் கொண்டவர்களே பயில வருகிறார்கள். ஆனால், அதற்கு மேலே படிப்பவர்களில் இந்தியர்கள், காக்கேசியர்கள், ஜப்பானிய அமெரிக்கர்கள், தமிழ்-சீனர்கள், நிகராகுவர்கள் என்று பல பின்புலங்களைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

'தமிழ்க் கல்விக்குத் தொடர்ந்து நிதி ஆதாரம் கிட்டுவது மிக அவசியம். தமிழ் இங்கே தொடர்ந்து கற்பிக்கப்பட, நான் ஓய்வு பெற்றால் அடுத்த பேராசிரியரை பெர்க்கலி பல்கலை நியமிக்க, நிதி இருந்தால் அது காரணமாக அமையும்' என்கிறார் ஹார்ட். பேராசிரியர் இன்னும் 4 ஆண்டுகளில் ஓய்வுபெற இருக்கிறார்.

'மிகப் பழைய பாரம்பரியம் கொண்ட தமிழ்மொழியை அதிகப் பல்கலைகள் கற்பிப்பதில்லை. ஏன், பிற இந்தியர்களுக்கே அதன் வளம் தெரியவில்லை. சிகாகோ, பென்சில்வேனியா, டெக்ஸாஸ், ஹார்வர்ட், யேல் ஆகிய பல்கலைகளில் தமிழ் சிறிய அளவில் கற்பிக்கப் படுகிறது. 3 லட்சம் ஸ்ரீலங்கன் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவில் தமிழுக்கு ஒரு பேராசிரியர் பதவி இல்லை என்பது ஆச்சரியம். ஒவ்வொருவரும் 10-20 டாலர் கொடுத்தாலும் இந்தத் துறையை உண்டாக்கிவிடலாமே!' என்று சுட்டிக் காட்டுகிறார் ஹார்ட்.

'இங்கிருக்கும் கல்வி ஐரோப்பாவைப் பிரதானமாகக் காட்டுவது. இங்கு வரும் தெற்காசிய மாணவர்களும் மேற்கத்திய இலக்கியத்தையும் கலாசாரத்தையுமே கற்கிறார்கள். தமது பாரம்பரியம் இதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதை இங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் அறிய வேண்டும்.' தமிழர்கள் கம்பராமாயணம், சங்க இலக்கியங்கள் போன்ற தமது பாரம்பரியச் செல்வமான நூல்களை வீடுகளில் வாங்கி வைப்பதன் மூலம் இளைய தலைமுறைக்கு இவற்றை எடுத்துச் செல்லலாம் என்கிறார் பேராசிரியர் ஹார்ட். 'கம்பன் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை நல்ல கம்பராமாயணப் பதிப்புகளைக் கொண்டுவந்திருப்பது எத்தனை தமிழருக்குத் தெரியும்? இவற்றை வாங்கி வைத்துத் தினமும் இவற்றைப் படிக்க வேண்டும். ஓரிரு செய்யுள்களை உரக்கப் படிக்கவும் மனப்பாடம் செய்யவும் வேண்டும். இளைஞரின் செவிகளில் இவை விழும்போது பெரும் மாற்றம் ஏற்படுத்தும் என்னும் இவரது அறிவுரை சிந்திக்கவும் செயல்படுத்தவும் தக்கது.

பெர்க்கலி தமிழ்ப் பீடத்தின் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் எழுத்துக்களிலிருந்து தெரிந்தெடுத்த ஒரு தொகுதியை வெளியிடவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

© TamilOnline.com