டிசம்பர் 2007 : வாசகர் கடிதம்
சிறுகதை மலர் கதைகள் நன்றாக இருந்தன. 'சினிமா, சினிமா' தீபாவளி படங்கள் மிகவும் சூப்பர். குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இளந் தென்றல் கணிதப் புதிர்கள் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமுடன் கண்டுபிடிக்கும் வகையில் அமைந்திருந்தது.

சித்ரா வைத்தீஸ்வரனின் பதில்கள் எதார்த்தமாகவும், சொல்ல வரும் கருத்தினை மயிலிறகு வருடுவது போல மிகவும் ஆழமாகவும், அதே சமயம் பின்பற்றும் வகை யிலும் எடுத்து கூறி வருகிறார். இனிதே தொடரட்டும் அவரது இந்த அன்புள்ள சிநேகிதியே பகுதி.

அ. அறிவுச்சுடர், பிலிப்பைன்ஸ்

******


'தீபாவளி வெளியீடுகள்' பற்றி கேடிஸ்ரீயின் கட்டுரையும், படங்களும் மட்டுமே தீபாவளிக்கென அமைந்திருந்தன. பாராட்டுக்கள்.

மாயாபஜாரில் விதவிதமான ஸ்வீட், கார வகைகளை பற்றி வெளியிட்டுக் கலக்குவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தால், கஷாயம் செய்வதை போட்டு விட்டீர்கள். ஏமாற்றம்...

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலைப் பற்றிய கட்டுரையும், படங்களும் திகட்டாத தேன் போன்றிருந்தன. அஞ்சலியில் லா.ச.ரா வை நினைவுகூர்ந்தது தமிழுக்குப் பெருமை.

அலுமேலு மணி அவர்கள் 'காந்தி தந்த பாடம்' கதையை மிக அருமையாக வடித்திருந்தார். பாராட்டுக்கள். கதை என்று சொல்வதைக் காட்டிலும் இன்றைய நிதர்சனம் என்றே கூறலாம். இன்றைய இளைஞர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை.

பா. தமிழ்வேந்தன்

******


டாக்டர் சுதா சேஷய்யனின் நேர்காணலைப் படித்தேன். 1987-88ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரிடம் உடற்கூறியல் கற்றவன் நான். 16-17 வயதுச் சிறாரைப் பொறுப்பும் மனிதத்துவமும் நிறைந்த மருத்துவர் களாக்குவது கடினமான காரியம். அதன் முதல் படியான உடற்கூறியல் உண்டு/இல்லை என்று ஆக்கிவிடும் கடினமான பகுதி. சென்னை மருத்துவக் கல்லூரியில் இத் துறையை மருத்துவத்தின் செங்கோட்டை (MMC's Red Fort) என்று அழைப்பதுண்டு.

டாக்டர் சுதா சேஷய்யன் குறிப்பிட்டுள்ள தைப் போல ஆன்மீகமும் இலக்கியமும் மருத்துவத்துக்கு நிகர். அதைக் கற்பிப்பதும் குருகுலப் பயிற்சி போன்றதுதான். பேராசிரியர் (அப்போது அவர் டியூட்டர்) சுதா சேஷய்யன், பேரா. ந.சுப்ரமணியம் போன்றோரை ஆசான்களாக அடைந்ததில் நானும், என்னுடன் தற்போது பணிபுரியும் இன்னும் இரண்டு மருத்துவர்களும் பெருமையடைகிறோம். டாக்டர் சுதா அவர்களைத் தேடிப்பிடித்து, கலந்துரையாடல் செய்து எம்மைச் சிலிர்க்கச் செய்த தென்றலுக்கும் அரவிந்த் சுவாமிநாதனுக்கும் எமது நன்றி.

மு.மா. இராசன், MD., PhD., ஹார்வர்டு பல்கலைக்கழகம், பாஸ்டன்.

******


எழுத்தில் பன்முக வல்லமை பெற்ற எஸ்.பொ. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை அவர்களைப் பற்றி மதுசூதனன் எழுதியது நன்றாக இருந்தது. 'கடன்' சிறுகதை படித்ததில், எஸ்.பொ.வின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

மாயா பஜாரில் தீபாவளிக்கான பட்சணங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் கஷாயங்களை போட்டுக் காரம் ஏற்றி விட்டீர்கள்.

டாக்டர் சுதா சேஷய்யனின் நேர்காணல் அமைந்திருந்த விதம் சிறப்பு. சிறந்த கேள்விகள். பேட்டி கண்ட அரவிந்த் சுவாமிநாதனுக்கு பாராட்டுக்கள்.

சினிமா, சினிமாவில் 'தீபாவளி வெளியீடுகள்' வெளியிட்டு அசத்தி விட்டார் கேடிஸ்ரீ. படங்களும் அசத்தலோ அசத்தல்.

சண்முகி, மலேசியா

******


தென்றல் தமிழகத்தில் இருந்து வெளிவருகிறது என நினைத்துப் படித்துப் பார்த்தால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகை எனத் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தரமான படங்களுடன் ஆழமிக்க கருத்துக்களுடன் கட்டுரைகளும், கதைகளும் அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள்! சிரிக்க சிரிக்க படித்ததும் சிரிப்பு வரவில்லை.

திரு

******


தென்றலில் எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தது. படிக்கத் தவற மாட்டேன். எழுத்தாளர்களைப் படத்துடன் வெளியிட்டுக் கதையையும் வெளியிடுவது சிறப்பானது. மாயாபஜார் சமையல் பகுதி அறிந்து கொள்ள வேண்டிய, படித்து செய்து, பயனடைய வேண்டிய பகுதி.

இளந்தென்றலை இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாமே. சிறுவர்களுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கும் வகையில் ஏதாவது செய்திட்டால் ஏராளமானோர் பயனடைவர். வாசகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது தென்றலில் தெரிகிறது.

கோமேதகவல்லி, சிங்கப்பூர்

******

© TamilOnline.com