கார் வாகனப்போட்டிகள்
சிறுவயதில் சமையல் அறைக்கும், படுக்கை அறைக்கும் இடையே 'வ்ரூம், வ்ரூம்' என்று ஒலியெழுப்பியபடி கற்பனைக் கார் ஓட்டிய துண்டா? பெண்ணின் இடுப்பழகைவிட பளபளக்கும் காரின் வளைவுகளைக் காதலுடன் நோக்கியதுண்டா? ·பெராரி, கோர்வெட் போன்ற வாகனங்களைக் கண்டதும் அருகில் போய், இடம் காலம் மறந்து ரசித்ததுண்டா? அப்படியென்றால் நாம் இப்போது பேசப்போகும் விஷயம் உங்களுக்கு மிகவும் பிடித்ததுதான்.

அமெரிக்காவில் தேசியக் கால்பந்து விளையாட்டுகளுக்கு (NFL – National Football League) அடுத்தபடியாகப் பார்வை யாளர்களிடையே பிரசித்தமாக இருக்கும் விளையாட்டு (spectator sports) காரோட்டப் போட்டிகள்தாம் (automobile races). சக்கரம் உள்ள எந்த வாகனமாயிருந்தாலும், அவற்றிற்கிடையே போட்டி இல்லாமலா? ஒரே சக்கரத்தோடும், அல்லது சக்கரமே இல்லாமலும் போட்டிகளில் வெற்றிபெறும் கதாநாயகர்களை எத்தனை தமிழ் சினிமாக் களில் பார்த்திருக்கிறோம்!

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெட் ரோலை எரிபொருளாகக் கொண்ட எஞ்சின்கள் கண்டுபிடிக்கப்பட்டு தானியங்கி வாகனங்கள் உருவாயின. 1890களில் ·பிரான்ஸ் நாட்டில் இரண்டு நகரங்களுக் கிடையே காரோட்டப் போட்டிகள் நடத்தப் பட்டன. இவை 20-ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து கிராண்ட் ப்ரி (Grand Prix) போட்டிகள் என்று அழைக்கப் படுகின்றன. இப்போது பல ரகமான காரோட்டப் போட்டிகள் இருந்தாலும், இரண்டு முக்கியமான பிரிவுகள் மிகவும் பிரசித்தம். அவை ·பார்முலா-1 (Formula-1), மற்றும் நாஸ்கார் (NASCAR - National Association of Stock Car Auto Racing) என்பவை.

·பார்முலா-1 (அல்லது F1) என்பது ஒருவர் மட்டுமே அமரக்கூடிய, போட்டிக்காகவே தயாரிக்கப் படும் கார்களைப் பயன்படுத்தும் போட்டிகள். இவை ஐரோப்பாவில் துவங்கிய கிராண்ட் ப்ரி போட்டி வகையைச் சேர்ந்தவை. இவை திறந்த சக்கரப் போட்டிகள் (open wheel car races) என்றும் அழைக்கப் படுகின்றன. ·பார்முலா என்பது எந்தவித இயந்திரங்கள், காரின் பாகங்கள் பயன்படுத்தலாம் என்பது குறித்த விதி முறைகள். ·பார்முலா-3, ·பார்முலா-500, ·பார்முலா-·போர்ட், ·பார்முலா-மாஸ்டா என்று பலவகை ·பார்முலாக்கள் இருந்தாலும், ·பார்முலா-1 தலையானதாகக் கருதப்படுகிறது. இண்டியானா போலிஸில் நடக்கும் இண்டி-500 (Indy-500) போட்டி இத்தகைய கிராண்ட் ப்ரி வகையைச் சேர்ந்தது. ஆனாலும், இதன் விதி முறைகள் F1 போட்டிகளிலிருந்து சிறிது மாறி அமைந்திருப்பதால் F1 போட்டி யாளர்கள் இதில் அதிகமாகக் கலந்து கொள்வதில்லை. அதனால் இண்டி ரேசிங் லீக் (IRL – Indy Racing League) என்று ஒரு பிரிவும் இருக்கிறது.

இந்தப் போட்டிகளில் ஓட்டுபவரின் திறமை மட்டுமின்றிப் பல பாகங்களைக் கொண்டு போட்டியிடும் காரை உருவாக்கும் பொறி யாளர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் குழுக்கள் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்வரை காருக்காகச் செலவிடுகிறார்கள். காரின் வேகம் காற்றைக் கிழித்துச் செல்லும்போது எவ்வாறெல்லாம் பாதிக்கப் படுகிறது என்று ஆராய்ந்து காரின் பாகங்களை அமைப்பார்கள். உதாரணமாக, திறந்த சக்கர வண்டிகளில் 200 மைல் வேகத்தில் செல்லும்போது, சக்கரத்தைச் சுற்றியிருக்கும் காற்றின் அழுத்தம் வேறு படுவதால் கார் ஒரு புறமாகத் தள்ளப்படும். இதை drag என்று அழைப்பார்கள். காரை உருவாக்கும்போது இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சரிக்கட்டும் விதத்தில் உருவாக்குவார்கள். ஆக, இந்தப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் திறமையாகக் காரோட்டுவதோடு மட்டு மில்லாமல், சிறந்த பொறியாளர்களாகவும், காரைப் பற்றிய பல நுணுக்கங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும்.

·பார்முலா-1 போட்டிப் பருவம் (season) பல போட்டிகள் அடங்கியது. தனித்தனிப் போட்டிகளின் முடிவுகள் மொத்தமாகச் சேர்க்கப்பட்டு வருடத்திற்கு இரண்டு உலகக் கோப்பைகள் கொடுக்கப்படுகின்றன. இதில் ஒரு கோப்பை சிறந்த ஓட்டுனருக்கும், ஒரு கோப்பை சிறந்த காரை அமைத்த பொறி யாளருக்கும் தரப்படுகிறது. இந்தப் போட்டி கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் நடந்து வந்தன. ஆனால் இப்போது சீனா, பஹரைன், மலேஷியா, துருக்கி உட்படப் பல நாடுகளில் நடக்கின்றன. F1 தொடரில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 17 அல்லது 18 போட்டிகள் நடக்கின்றன.

ஐரோப்பாவிலும் உலகின் மற்ற பகுதி களிலும் F1 போட்டிகள் பிரபலமாக இருக்க, அமெரிக்காவில் மிகவும் பிரசித்தமானது நாஸ்கார் போட்டிகள். 1948-ல் துவங்கிய நாஸ்கார் போட்டிகள் F1 போட்டிகளி லிருந்து முற்றிலும் மாறுபட்டவை. Stock car என்றால் மாற்றங்கள் எதுவும் செய்யாத வாகனம் என்று பொருள். இந்தப் போட்டி தோன்றிய ஆரம்ப காலத்தில் போட்டி யாளர்கள் தாங்கள் ஓட்டி வந்த சொந்தக் காரையே போட்டியிலும் பயன்படுத்தினர். ·போர்ட், கிரைஸ்லர், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களுக்கிடையே சிறந்த காரை உருவாக்குவதற்கு பலத்த போட்டி இருந்தது. போட்டியில் வென்ற கார் அதிகமாக விற்பனையானது இதற்கு ஒரு காரணம். ஆனால் தற்போது போட்டிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போட்டிக் காகக் காரில் சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். ஆனாலும், காரின் வெளிப் பாகம் (chassis) எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. நாஸ்கார் போட்டிகளில் கலந்துகொள்ளும் கார்களின் தோற்றம் நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் கார்கள் போலவே இருக்கும்.

·பிளாரிடா மாநிலத்தில் இருக்கும் டேடோனா பீச் (Daytona Beach) நாஸ்கார் போட்டிகள் துவங்கிய இடம். வருடத்திற்கு கிட்டத்தட்ட 1500 போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ தேசங்களில் நடக் கின்றன. நாஸ்கார் சின்னம் பொறித்த பொருட்கள் வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகின்றன. அதனால் பல நிறுவனங்கள் இந்தப் போட்டிகளில் விளம்பரத்திற்காகப் பணத்தைக் கொட்டிக் குவிக்கின்றன.

நாஸ்கார் போட்டிகளில் தலையானது நெக்ஸ்டெல் கோப்பைத் தொடர் (Nextel cup series). இந்த வருடம் இந்தத் தொடரில் 36 போட்டிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் பரிசுத்தொகை 4 மில்லியன் டாலர். 26 போட்டிகள் முடிந்த பிறகு கடைசி 10 போட்டிகள் play off அல்லது கோப்பை யைத் துரத்துதல் (chase for the cup) என்று அழைக்கப் படுகின்றன. கடைசி 10 போட்டிகளில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஓட்டுனர்கள் பங்கெடுத்துக் கொள்வர். ஆனால் மற்ற ஓட்டுனர்களும் பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஒரு குழப்பமான கணித முறையில் புள்ளிகள் சேர்க்கப் படுகின்றன. இதனால் தொடரின் வெற்றியாளர், தொடர் முடிவதற்கு முன்னரே முடிவெடுக்கப்படலாம். இந்த முறையில் பலருக்கும் அதிருப்தி இருந்தாலும், இதற்குத் தொலைக்காட்சி ரசிகர்களிடையே வர வேற்பு இருக்கிறது. தொடரில் வெற்றிபெற வாய்ப்பு இல்லாவிட்டாலும், பல ஓட்டுனர் கள் கடைசிவரை போட்டியில் கலந்து கொள்கின்றனர். கடைசிப் போட்டியில் 11வதாக வரும் ஓட்டுனருக்குக்கூட ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை காத்திருப் பதே அதற்குக் காரணம்.

கோடிக்கணக்கில் பணம் புழங்கினாலும், இந்தப் போட்டிகள் பணக்கார நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருக்கிறது. இந்த விளையாட்டில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து எவரும் கலந்து கொள்வது அரிய விஷயம். அத்தகைய அரிய சாதனையைச் செய்திருப்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாராயண் கார்த்திகேயன். 29 வயது இளைஞரான இவர் 1994-ல் இருந்து பல ·பார்முலா போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். 1996-ல் ·பார்முலா ஆசியா தொடரைக் கைப்பற்றினார். 2005-ல் F1 கிராண்ட் ப்ரி தொடரில் முதன் முறையாகப் பங்கேற்று பல வெற்றிகளைக் குவித்து 18வது இடத்தைக் கைப்பற்றினார். தற்போது F1 உலகக் கோப்பையை 9 முறை கைப்பற்றி இருக்கும் வில்லியம்ஸ் குழுவில் இணைந் திருக்கிறார்.

இந்தப் போட்டிகளில் இருக்கும் நுணுக் கங்கள் கணக்கில் அடங்காதவை. இங்கு கொடுத்துள்ள அறிமுகத்தை வைத்துக் கொண்டு இந்தப் போட்டிகளை கவனித்து வந்தால் பல நுணுக்கங்களைக் கற்று ரசிக்க முடியும். மீண்டும் இந்தத் தலைப்பை வரும் மாதங்களில் நாம் அலசும் வரை Happy racing!

கேசி

© TamilOnline.com