வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படங்களை எடுப்பவர் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான். தமிழக அரசால் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற அவருடைய நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக வெளிவருகிறது. இந்நூல் பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம் பெற்றிருப்பதுடன், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றுள்ள அந்நூல் இதுவரை ஒன்பது பதிப்புகள் கண்டுள்ளது.
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சத்யராஜ், தான் இதுவரை நடித்த படங்களிலேயே இது மிகவும் முக்கியமான மாறுபட்ட கதாபாத்திரம் என்று குறிப்பிடுகிறார். ஏழை விவசாயியாக நடித்திருக்கும் சத்யராஜ், சில காட்சிகளில் கோவணம் அணிந்து நடித்திருக்கிறார். கமலுக்கு அடுத்துக் கோவணம் அணிந்து நடித்துள்ள நடிகர் இவர் மட்டும்தான். சத்யராஜுக்கு ஜோடியாக நடிப்பது பல்வேறு தேசிய விருதுகள் பெற்ற நடிகை அர்ச்சனா. நாசர், ரோகிணி எனப் பலர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
நிதீஷ்குமார், இன்பநிலா என்ற புதுமுகங்கள் இப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். மூன்று காலகட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதை, தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை சொல்லப்படாத கதையாம். பாடல்கள் வைரமுத்து. இசை பரத்வாஜ். இதுநாள் வரை படத்தொகுப்பிலிருந்து ஒதுங்கியே இருந்த பி. லெனின் இதைத் தொகுத்துள்ளார். 'மன்மதராசா' பாடல் புகழ் சிவசங்கர், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பு இந்தியன் சினிமா கம்பெனி என்ற புதிய நிறுவனம். படத்தில் தங்கர்பச்சான் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த் |