திக்குத் தெரியாத நாட்டில்
அனந்தராமனுக்குத் திகைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பேருந்து வசதிகூட இல்லாத கிராமத்தில் நான்கு சகோதரிகளுடன் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையும் சமூகமும் விரட்டி விரட்டித் துரத்திய அந்த நாட்களை மனது அசை போட்டது. ஜாதி வேறுபாடில்லாத நண்பர் களும், நல்ல உள்ளங்களும் உதவி செய்ததால் பொறியியல் கல்லூரியில் நுழைந்து பட்டத்துடன் வெளியேறி, இன்று பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் கடல் கடந்து இதோ இந்த திருநாட்டில் பணிக்கு வந்து ஒரு வருஷம் ஓடிவிட்டது. ஊரில் ஆறு ஏழை ஜீவன்களும், பக்கத்துத் தெருவில் மாடசாமி, மூக்கன், ராசய்யா என்ற பல்வேறு நண்பர்களும் நடத்தும் வாசகசாலையும் இவன் அனுப்பும் டாலரை நம்பியுள்ளன. வ.உ.சி., வீர பாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வீரவாஞ்சிநாதன் பிறந்து வாழ்ந்த நெல்லை மண்ணுக்குச் சொந்தக்காரன் இவன்.

'டேய் அனந்து! பாரதியாரின் மனைவி செல்லம்மா கடையத்தில் நமக்கு தூரத்து வழி சொந்தம்டா' என்று இவனது பாட்டி அடிக்கடி கூறுவாள். எனவே தேசப்பற்று இவனது உயிர்மூச்சில் கலந்து உறவாடுவதில் ஆச்சரிய மில்லை. மனிதநேயமும் ஜாதி வேறுபாடில்லா மல் பிறகுக்கு உதவும் பண்பும் இவனுக்கு இயல்பாக வாய்த்தன.

விதி எவ்வாறு விளையாடும் என்பது விதிக்கு மட்டுமே தெரியும். அன்று சனிக் கிழமை ஓய்வுநாளில், சமையலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு உணவு விடுதிக்குச் சென்றான் அனந்து. நான்கு கழுகுக் கண்கள் தன்னை நோட்டமிடுவதைத் தாமதமாகவே உணர்ந்து திடுக்குற்றான். அவசரமாக வெளியே வந்தவனைத் தொடர்ந்தன நான்கு கால்கள். தயங்கியவனை நெருங்கிய ஒருவன், முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் 'தம்பி இந்த முகவரி எங்குள்ளது' என வினவினான். எனக்குத் தெரியவில்லையே! என்றவனிடம், 'நீ தமிழ்நாடா?' என்று மற்றவன் கேட்டான். சற்றுத் தெம்புடன் 'ஆமாம்' என்றான். 'உன்னைப் பார்த்தது நல்லதாய் போச்சு தம்பி' என்று பேச்சுக் கொடுத்தவாறு இவன் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வரை வந்துவிட்டனர். தயக்கத்துடன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே சென்றதும் இருவரும் பிஸ்டலைக் காட்டி மிரட்டி அனந்தராமனின் ஊர், குடும்பம், பின்னணி எல்லாவற்றைப் பற்றியும் அவன் வாயிலிருந்தே வரவழைத்தனர்.

கரடுமுரடான தாடியுடனிருந்தவன், 'தம்பி உன்னைப் பற்றி எங்களது ஆட்கள் ஏற்கனவே கொஞ்சம் சொல்லி இருக்காங்க. உன்னைப் போல உயர்ந்த குணம் உள்ள ஆள்தான் எங்கள் வேலைக்குத் தேவை. சமீபகாலமாக எங்களை எல்லோரும் அடையாளம் தெரிந்து வைத்துள்ளார்கள். எனவே நாங்கள் நேரடியாக எதிலும் ஈடுபட முடியாது. உன்னைப் போன்றவர்களுக்குப் பின்னால் இருந்துதான் எங்கள் திட்டத்தை நிறைவேற்றணும்' என்றான்.

##Caption##'எங்களோடு ஒத்துழைக்கவில்லை யென்றா லோ, எங்களை காட்டிக் கொடுத்தாலோ ஊரில் உன் குடும்பத்தை ஒரே நிமிடத்தில் ஒழித்துக் காட்டுமாறு எங்கள் ஆட்களிடம் சொல்லிவிடுவோம். நாங்கள் இங்கே ஒரு மாதம் உன் வீட்டில்தான் தங்கப்போகிறோம்' என்றான்.

வலையில் அகப்பட்ட மான்போல மிரண்ட அனந்தராமன் அவர்கள் சொன்னதற் கெல்லாம் தலையாட்டினான். அவர்கள் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஏராளமான சிடி, கேசட், புத்தகங்கள் சகிதமாக தீவிரவாத வேலைக்கான ஏற்பாடுகளைத் தொடங்க லாயினர். இவனது செல்போன், ஈமெயில் ஐடியையும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அன்று இரவு அனந்தராமன் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். ஆண்கள் பெரும்பாலும் அழ மாட்டர்கள் என்று யார் சொன்னது? அவன் மெளனமாக அழுது விசும்பினான். அடுத்த அறையில் இரண்டு சண்டாளர்களும் எதையோ எழுதிக் கொண்டு விழித் திருந்தனர். தென்றல் இதழில் வெளியான 'தூங்காத கண்ணென்று ஒன்று' என்ற கட்டுரையைப் புரட்டிக் கொண்டே அனந்த ராமன் தூங்க முயற்சி செய்தான். அதில் குறிப்பிட்டிருந்த மனக்கவலை, அழுத்தம், மனத்தவிப்பு என்ற எல்லாமும் அவனைப் புரட்டி எடுத்தன.

பிறந்த நாடு மட்டும்தான் நம் நாடா? வாழும் நாடும் நமக்கு வாழ்வளிக்கும் நாடும் தாய்நாடுதான். பெண்கள் பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் இரு கண்களாக மதிக்கும் பெருமை வாய்ந்த நாடல்லவா எனது நாடு! பெற்ற தாயை மட்டுமா அம்மா என்று அழைக்கிறாள் பெண். புகுந்த வீட்டிலும் மாமியாரை அம்மா என்றும், மாமனாரை அப்பாவென்றும் அழைத்து அந்தக் குடும்பத் துடன் ஒன்றிவிடவில்லையா அவள்! நாற்றங்காலிலிருந்து பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் நாற்று அந்த மண்ணிலேயே வளர்வதில்லையா? அதுபோலவே எனது பிறந்த தேசமும், இதோ இங்கு நான் வாழும் புகுந்த தேசமும் எனக்கு ஒன்றுதான். சாதி பார்க்காது என் திறமையைப் பாராட்டி எனக்கு வேலை கொடுத்தது இந்த நாடு. எனது வருமானத்தின் ஒரு பகுதியைச் சாதிவேறுபாடில்லாத எனது ஊரில் ஏழைச் சிறுவர்களது கல்விக்காக அனுப்புகிறேனே, அதனை இந்த நாடுதானே எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டிற்காக நான் ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்று ஒரு முடிவோடு பின்னிரவில் தூக்கத்தைத் தழுவினான்.

விடிந்தது பொழுது. தெளிந்தது மனது. தெளிவு பிறந்த அவன் உள்ளத்துக்குத் தெம்பும் கூடவே வந்தது. அந்த நாட்டு உளவுத்துறை அதிகாரியிடம் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தெரிவிக்க முடிவு செய்தான் அனந்தராமன். அது தீவிரவாதி களின் சதிச் செயல்களையும், பின்னணி யையும் தெரிந்து அவர்களை வேரோடு அழிக்க உதவியாக இருக்கும். எனது உயிரும் எனது குடும்பமும் முக்கியம்தான். ஆனால் நான் வாழும் நாடு அதைவிட உயர்வானது. இந்தச் சதிகாரர் களைப் பற்றி நான் துப்புக் கொடுத்தால், என்னையும், ஊரில் எனது சகோதரிகள், கண் தெரியாத எனது தாய் தந்தையையும் சதிகாரர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். பரவாயில்லை. நான் அழிந்தால் எனது குடும்பத்தை நாடு காப்பாற்றும். நானும் எனது குடும்பமும் அழிந்தால் ஒன்றும் நஷ்டமில்லை. என்னை வாழவைத்த இந்த நாடு காப்பாற்ற பட்டதே அது போதும் எனக்கு. எனக்குள்ள ஒரே கவலை பட்டிக்காடான எனது கிராமத்தில் நண்பர்கள் நடத்தும் வாசக சாலையைப் பற்றிதான்.

சரி! அனந்தராமன் போனால் என்ன? ஒரு இசக்கியோ, அழகேசனோ படித்து வந்து தொடரட்டும் அந்தப் பணியை...

பாலமுரளி, சாமர்செட், நியூஜெர்சி

© TamilOnline.com