மானுடம் வாழுதிங்கே
மதுராந்தகமெல்லாம் இறங்குங்க'. நடத்துனரின் குரலுக்குக் கீழ்ப்படிந்த ரங்கன் வேர்க்கும் முகத்தைத் துண்டால் அழுத்தித் துடைத்தவாறு சிறு தோள் பையுடன் இறங்கினான். அனந்தமங்கலம் பேருந்து வர இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது. ஏரி காத்த ராமர் கோயிலைப் பார்க்க நடையைக் கட்டினான். தரிசனம் முடிந்து பேருந்து நிலையத்துக்கு வரவும் 'மாருதி விரைவூர்தி' தயாராக நின்றிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பரிவாதி மங்கலம் வந்துவிடும்.

ஆண்டுக்கு இருமுறை இந்தப் பயணம் அவனுக்கு வாய்த்துவிடும். அவன் தாய் அலமேலுவுக்குத் தாய்வழியில் வந்த நிலம் அரைக்காணி இந்த ஊரில் உள்ளது. அதில் வாரம் பயிரிடும் கோயிந்து (கணக்கய்யா மூலம்) ஒரு கடிதம் போட்டுவிடுவான். அம்மா இவனுக்குத் தார்க்குச்சி போட்டு விரட்டி விடுவாள். ஒப்படி முடித்து ஒரு மூட்டையோ, அரை மூட்டையோ நெல்லைக் கட்டிப் போட்டு விட்டு அடுத்த அறுப்புக்குப் போகும் போது பழைய நெல்லைக் குத்தி எடுத்து வருவான். பட்டணத்தில் கிலோ இருபது, இருபத்திரண்டென்று அரிசி வாங்கும் பணம் சில மாதங்களுக்கு மிச்சமாகும். வீட்டு அரிசியின் மணம் உபரியாகக் கிடைக்கும்.

அரசமரம் நிறுத்தத்தில் இறங்கியதுமே தலையில் கட்டிய முண்டாசை அவிழ்த்து உதறிக்கொண்டு ஓடி வந்தான் கோயிந்து. 'அய்யா வர நேரமாயிடுச்சா, மன்னியம்மா கழனிக்கு வந்தாங்க; களத்துமேட்டுக்குக் கட்டு கொணர்ந்தாச்சுங்க' என்று செய்தி வாசித்தான். யார் வந்தாலும் வராவிட்டாலும் மன்னி முன்னின்று முடித்துவிடுவாள் என்பது நிச்சயம். நேராக கோயிலடித் தெருவுக்கு விரைந்தான்.

மன்னி! யாருக்கு மன்னி என்பது யாருக்கும் தெரியாது. ஏன், மன்னியின் கணவர் சாரநாதனும் அவளை மன்னியென்றே அழைக்கிறார். உழைத்து உரமேறிய திடமான சரீரம். அவள் வயது அறுபதா, எழுபதா ஏதும் தெரியாது. 'யாரும் வகுத்தற் கரிய பிராயத்தள்'! 'வாடாப்பா, ராத்திரியே வந்திருக்கக் கூடாதா? வெயில் ஏறுமுன்னே களம் சேர்த்துடலாம்னு தான் நானே உன் அதிகாரத்தைக் கையிலெடுத்துண்டேன். உடைமைஸ் தனாச்சே, பவர் கொடுப்ப யோல்லியோ?' என்று பாதி கேலியும் பாதி உண்மையுமாக நிலவரத்தை விளக்கினாள்.

தோட்டத்தில் போய் கால் அலம்பிக் கொண்டு வருமுன்னே இலை போட்டு, உணவு பரிமாறத் தயார் செய்திருந்தாள். கைதேர்ந்த தையற்காரனைப் போல் சீராக அடுக்கித் தைக்கப்பட்டிருந்த இலையைப் பார்த்தபோது 'சாப்பிட்டுவிட்டு இதை எறிய வேண்டுமே' எனத் தோன்றியது. 'சற்றுக் கட்டையைக் கிடத்திவிட்டுக் காபி ஆனதும் களத்து மேட்டுக்குப் போகலாம்' என்று ஒரு கட்டு விடுதி இலைகளைத் தைக்க உட்கார்ந்து விட்டாள். அவனும் ரேழித் திண்ணையில் படுத்தான்.

##Caption##கண் விழித்தபொழுது மன்னியைக் காணவில்லை. மாமா 'படி தாண்டாப் பதி'. அவருண்டு பிரபந்தப் புத்தகமுண்டு என்றிருக்கும் அப்பாவி. 'மன்னி களத்து மேட்டுக்குப் போயிட்டா. சொம்பில் காபியிருக்கு. குடித்துவிட்டு வரச் சொன்னாள்' என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். குற்ற உணர்வுடன் களத்து மேட்டுக்கு விரைந்தான் ரங்கன். அங்கே மன்னியின் தர்பார் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்தது. 'இந்த முப்பது கட்டைச் சூடடிக்க நாலு கன்னுக்குட்டி போதாதா? எட்டைக் கொணர்ந்து விட்டு வாரம் அளக்கும்போது தனி மனுக் கொடுப்பே. ஏண்டியம்மா, சொக்கி, அறுத்ததில் பாதி நெல்லை முறத்தாலேயே ஒதுக்கிடுவே போலிருக்கே. இப்படி ஓட்டம் காட்டினா ரங்கன் ஊருக்கு கைக்குட்டையி லேயே நெல்லை எடுத்துப் போயிடலாம்' என்று கோயிந்துவுக்கும் தூற்றிக் கொண்டிருந்த அவன் மனைவிக்கும் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. ஒப்படி முடிந்து நெல் அளக்கும் பொழுது 'ஆட்டுக் கிடை மடக்க இந்த வாட்டி நிறையக் கொடுக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட அளவுங்கய்யா' என்றான் கோயிந்து. 'எல்லாத்துக்குமாதான் நாலு வாரம் அளக்கிறானே. விட்டால் கழனியையே எழுதி வாங்கிண்டுடுவே' என்று அதட்டல் போட்டதுடன், ஓட்டம் கட்டியிருந்த நெல்லையும் புடைக்கச்சொல்லி கிட்டத்தட்ட முக்கால் மரக்கால் தேற்றிவிட்டாள் மன்னி. டீக்காசு என்று தலையைச் சொறிந்தனர் வேலையாட்கள். பையில் கைவிடப்போன ரங்கனை அடக்கி (காசு எங்கே போகும்னு எனக்குத் தெரியும்) வீட்டிலிருந்து உப்பு, பச்சைமிளகாய், பெருங்காயம் மணக்கும் மோரும், வெள்ளரிக்காய் துண்டங்களும் கொணர்ந்து விநியோகித்தாள். முணு முணுத்துக்கொண்டே மூட்டைகளைக் கட்டி வீட்டில் சேர்த்துவிட்டுப் புறப்பட்டனர் வேலையாட்கள்.

அருமையான அந்தி மாலையை ரசித்தபடி ஏரிக்கரையோரம் சுற்றி விட்டு திரெளபதி யம்மன் கோயில் தெருவுக்குள் நுழைந்தான். வாரக்கார கோயிந்துவின் வீட்டின் முன் ஒரே கூட்டம். அவனுடைய மூன்று வயதுப் பையன் வலிப்பு வந்து கை கால்களை உதைத்துக் கொண்டு கிடக்க, குய்யோ முறையோ எனக் கதறிக் கொண்டிருந்தனர் அவன் மனைவியும், தாயும். சுற்றியிருந்தவர்கள் அவரவருக்குத் தெரிந்த வைத்தியத்தைச் சொல்லிக் கொண்டிருக்க 'காலம் கெட்டுக் கிடக்கு. பிரச்னை பெரிசாகு முன்னே அச்சரப்பாக்கம் ஆசுபத்திரிக்கு எடுத்துப் போங்கப்பா. பிரசிடெண்ட் ஐயா வீட்டுல டிராக்டர் வண்டி கேட்கலாம் வா' என்று விவரமாகப் பேசி வண்டியும் கொணர்ந்துவிட்டான் மூலைக் கடை சின்னய்யன்.

அரைமணியில் அச்சிறுபாக்கம்; அரசு மருத்துவமனையின் சம்பிரதாயங்கள், முதற்கட்ட சோதனைகள் எல்லாம் முடிந்த பின் மூளைக்கட்டி என்று கூறினர். அறுவை சிகிச்சைக்கு அங்கு போதிய வசதியில்லாத தால் செங்கல்பட்டுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றார்கள். 'காசுக்குப் பால்மாறாதே கோயிந்து, இங்கேயே டாக்டர் மந்திரமூர்த்தி நன்றாகப் பார்க்கிறார். வசதியில்லைனு சொன்னா பணம் அதிகம் கேட்பதில்லை. ஒரு வாரம், பத்து நாள் செங்கல்பட்டுக்கும் ஊருக்கும் அலையும் செலவையும், பாட்டையும் கணக்குப் போட்டா இதே தேவலாம்' என்று ஓரிருவர் கூற, பையன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டான். டாக்டர் நல்லவர்தான். அவர் கேட்ட தொகையும் நியாயமானது தான். ஆனாலும் 'கொட்டாங்கச்சி ஜலமும் கட்டெறும்புக்கு சமுத்திரம்'தானே. செலவை நினைத்துக் கலங்கியவாறே முன்பணம் என்று கொஞ்சம் கட்டிவிட்டுக் கவலையுடன் ஊர் திரும்பினான் கோயிந்து.

விவரங்களைக் கேட்டறிந்த மன்னி 'பாவம், ரொம்ப காலம் வேண்டிப் பிறந்த பிள்ளை. போதாத காலம் இப்படி வந்துட்டுதே. நீ சொல்வதைப் பார்த்தால் ஆயிரக்கணக்கில் ஆயிடும்போலிருக்கே. அன்றாடங்காய்ச்சிக் குடும்பங்களில் உடனடியாப் பணம் புரட்டுவது கஷ்டமாச்சே. நாம்தான் புரட்டிக் குடுக்கணும்' எனச் சற்று யோசித்துவிட்டு, 'போன அறுப்பு நெல் உன் பங்கு விற்றால் கொஞ்சம் தேறும்; அடுத்த நாலு மாசத்துக் குன்னு வெச்சிருக்கிற என் நெல்லையும் போட்டுடலாம்; இந்த ஒப்படி கார்நெல்லைப் புழுக்குவதற்கு ஹோட்டல்காரரிடம் நல்ல விலை பேசலாம். எப்படிப் பார்த்தாலும் பணம் குறையறதே' எனக் கணக்குப் போடலானாள்.

##Caption##பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தது போல் மன்னி தெரிந்த இடங்களெல்லாம் அலைந்து, நாலு பேரிடம் பேரம் பேசி நெல்லையெல்லாம் விற்று ஒரு தொகை தேற்றிவிட்டாள். ரங்கன் கையில் கிடைத்த பணத்துடன் கோயிந்துவை அழைத்துக்கொண்டு அச்சிறுபாக்கம் சென்றான். மருத்துவமனையில் குழந்தைக்குச் சிகிச்சை ஆரம்பித்திருந்தது. கோயிந்துவின் மனைவி 'பன்னெண்டு மணிக்குள்ள பணம் பூரா கட்டணுமாம். மருந்துச் சீட்டு வேற குடுத்திருக்காங்க. போய் வாங்கியாரணும்' என்று கவலையுடன் கூறினாள். உடனடியாக மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பிய ரங்கன் அங்கு மன்னியைக் கண்டு வியப்பிலாழ்ந்தான். 'பூஜையை முடிச்சுட்டு, பெருமாள் உண்டியலைத் திறந்து எடுத்து வந்தேன். மாமா சதாபிஷேகத்துக்கு ஆகும்னு பத்து வருஷமாச் சேர்த்தது சமயத்துக்கு உதவியாச்சு' என்றபடி சில்லறையும் நோட்டுகளுமாக ஐயாயிரத்துக்கும் மேல் கொடுத்தாள். 'மன்னியம்மா, மன்னியம்மா' என வார்த்தைகள் வராமல் நெகிழ்ந்து நின்றான் கோயிந்து. 'நெல்லையெல்லாம் போட்டுட்டீங்கன்னு அய்யா சொன்னாரு. எள் ஒப்படிக்குக் கூட இன்னும் ரெண்டு மாசம் இருக்கே; சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்கம்மா? இப்ப பணமும் குடுக்கிறீங்களே. பெரியய்யாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்திலே எம்பது கல்யாணம் வருதுங்களே. அதுக்கு வேணாமா?' என ஆதங்கத்துடன் கேட்டான்.

'இதெல்லாம் பெரிய விஷயமாப்பா? எங்க ரெண்டு ஜீவனுக்கென்ன? பிடித்துச் சாப்பிடுவதைக் கரைத்துச் சாப்பிட்டா ஆச்சு. எம்பது மட்டும் என்ன, ஊரைக்கூட்டி செஞ்சாதானா? ஒரு அபிஷேகம், அர்ச்சனைன்னு சுருக்கமா முடிச்சால் போச்சு. பிள்ளை வைத்தியத்தை விடவா அது முக்கியம்?' என்று அலட்டிக் கொள்ளாமல் பதிலுரைத்தாள் மன்னி. அரை மரக்கால் நெல்லுக்காக த்வஜம் கட்டிக் கொண்டு சண்டையிடும் மன்னியுள் மறைந்திருக்கும் மனிதநேயம் கண்டு பிரமித்தான் ரங்கன்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே

© TamilOnline.com