திருவாரூரில் ஆழித்தேரோட்டம்
தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புடைய திருவிழாக்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் ஆழித்தேரோட்டம். இது முப்பதாண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்றது.

சமயக் குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற சிறப்புடையது தியாகராஜ சுவாமி திருக்கோவில். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் திருத்தலம். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய தேர் என்பதால் 'ஆழித்தேர்' என அப்பர் சுவாமிகளால் நாமம் சூட்டப்பட்டது. கோவிலின் புகழுக்கு இத்தேர் சிகரமாய் விளங்குவதால் தியாகராஜசுவாமி ஆழித்தேர் வித்தகர் என போற்றப்படுகிறார்.

போழொத்த வெண்மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள் தான் வெருவ
ஊழித்தீ அன்னானை ஓங்கொலிமாப் பூண்டது ஓர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.
(திருநாவுக்கரசர் தேவாரம்: 19: 7)

முன்னொரு காலத்தில் தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணாசுரன் என்ற மூன்று அசுரர்கள் வானில் பறக்கும் கோட்டைகளை (முப்புரம்) அமைத்து தேவர், முனிவர், மனிதர் எல்லோரையும் துன்புறுத்தி வந்தனர். சிவபெருமான் அசுரர்களின் கர்வத்தை அடக்க, பூமியைத் தேராகவும் வேதங்களைக் குதிரைகளாகவும் சந்திர சூரியர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும் மின்னலை வஜ்ராயுதமாகவும் பிரம்மாவைத் தேரோட்டியாகவும் ஆதிசேடனை நாணாகவும் மேருவை வில்லாகவும் அக்னியை அம்பாகவும் கொண்டு அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றதன் ஐதிகமே இந்தத் தேர்த் திருவிழா.

கோயிலைப் போன்ற வடிவமைப்புடன் விளங்கும் இத்தேர் அகன்ற ராஜவீதியில் அசைந்து ஆடி வீதி உலா வரும்போது, திருப்பத்தில் அசைந்து திரும்பும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். திரும்பிய இடமெல்லாம் 'தியாகேசா, ஆரூரா' என மக்களின் பக்தி முழக்கம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். வீதி வலம் வரும் தேருக்கு முன்னால் நாதசுர இசை, பாண்ட் வாத்திய இசை, வேத கோஷங்களுடன் முன்னால் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேசர் தேர்களும் அழகுற வடிவமைக்கப்பட்டு அணி வகுத்து செல்கின்றன.

தேரின் (தட்டு வரை) உயரம் 30 அடி; எடை 220 டன்; சீலைகளால் அலங்கரிக்கும் தேரின் பகுதி விமானம்வரை உயரம் 48 அடி; விமானம் 12 அடி; கலசத்தின் உயரம் 6 அடி; ஆக ஆழித்தேரின் மொத்த உயர் 96 அடி. பனைமரத்துண்டுகள், நான்கு பக்கமும் மூங்கில் பட்டைகள், அலங்காரத் தட்டிகள், பொம்மைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன்: அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட 68 அலங்கார பொருட்களுடன் ஆழித்தேர் கம்பீரமாய் அசைந்து வரும் அழகே அழகு.

தேரை இழுக்க BHEL நிறுவனத்தார் தயாரித்த மின்சாதனங் களுடன் 425 அடி நீளமும், 21 அங்குலம் சுற்றளவும் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவாரூர் ஆழித்தேரின் வடம் பிடித்தால் கைலாயத்திலும் வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது சமய நம்பிக்கை.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் பாடி அருளிய 'கமலாம்பாள் நவாவரணக் கீர்த்தனைகள் இக்கோவிலின் கமலாம்பிகை அம்மன்மேல் பாடப் பெற்றதாகும். ஆழித்தேர், கமலா லயக் குளக்கரையில் அசைந்து பவனி வரும்போது குளத்தில் உள்ள தண்ணீர் குமிழியிட்டுப் பொங்கும் காட்சி அற்புதமானது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com