தேடி வந்த மாமி
உறவுகள், உறவுகள் என்று எழுதிக் கொண்டு வருகிறீர்களே, நான் சொல்லும் உறவை எதில் சேர்ப்பது என்று தெரிய வில்லை.

2, 3 மாதம் முன்னால் திடீரென்று என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் வந்தது. அவர் மாமி ஊரிலேர்ந்து வந்திருக்காங்க, தன் மகள் வீட்டுக்கு. 'உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருக்குது. வந்து கூட்டிக்கிட்டு போறயான்னு' கேட்டிருக்காங்க. 'கண்டிப்பா செய்யறேன்னு' சொல்லிட்டு எங்கிட்ட வந்து கேட்டாரு. நான் கொஞ்சம் யோசித்தேன். 'திடீர்னு என்ன பாசம் பொங்குது. இத்தனை வருஷமா வந்துக்கிட்டு போய்கிட்டு இருக்காங்க. ஒண்ணும் கண்டுகிட்டதில்லை. அவுங்க மேல்தட்டுக்காரங்க. நம்ப 3 குழந்தைகளை வச்சிகிட்டு கஷ்டப்படறோம். எவ்வளவு நாள் வராங்க, ஏன் நாம 8 மணி நேரம் கார்லே போயி கூட்டிவரணும்? பிளேன்ல அனுப்ப சொல்லுங்க'ன்னு சொல்லிப் பார்த்தேன். அவரு 'இல்லை இல்லை. எங்கப்பா போன பிறவு மாமா வீட்டிலேதானே கொஞ்ச நாள் இருந்தேன். மாமி கொஞ்சம் ஒரு மாதிரிதான். ஆனா மாமா போயிட்டாலும் அந்தக் குடும்பத்துக்கு நாம் நன்றிக்கடன் செய்யணும். நாம் ஒண்ணும் இந்த ஊர்லே கீழ்மட்டத்திலே இல்லை. மாமிக்கும் தெரியட்டும் நாம நல்ல நிலையிலே இருக்கோம்னு' என்று சொல்லி என் வாயை அடக்கிட்டாரு.

அந்த மாமி கொஞ்சம் பொல்லாதவங்கன்னு அவுங்க மருமகள், மத்த உறவுக்காரங்க கிட்ட கேள்விப்பட்டிருக்கேன். ஒரே பொண்ணு. 2 வருஷத்துக்கு ஒரு தடவை இங்கே வருவாங்க போல. ஆனால் எங்களுக்கு போன் போட்டுப் பேசியது இதுதான் முதல் தடவை. என் வீட்டுக்காரர் ரொம்ப நல்லவரு. சின்ன வயசிலேயே அப்பா போயிட்டாரு. அம்மாவும் எங்களுக்குக் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்லே காலமாயிட்டாங்க. இவருக்குன்னு உறவு அதிகம் இல்லை. சரி இவர் இஷ்டப்படி கூட்டிக்கிட்டு வரட்டும். நம்ப நல்லா நடத்து வோம் அப்படின்னு தீர்மானம் பண்ணி, கூட்டிக்கிட்டு வந்தோம். அவுங்க பொண்ணு ஒரு 60 மைல் ஒட்டிக்கிட்டு வந்து, நாங்க ஒரு இடத்திலே மீட் பண்ணி அழைச்சிக்கிட்டு வந்தோம். அந்தப் பொண்ணு வீட்டுக்கு நாங்க போகலை.

அந்த மாமி தேனொழுகப் பேசினாங்க. பேசிக்கிட்டே இருப்பாங்க. உடலால உதவி எதுவும் கிடையாது. நானும் மாங்கு மாங்குன்னு அவுங்களுக்கு வேண்டியதைச் சமைத்துப் போட்டு, வெளியில் கூட்டிகிட்டு போய் சமா¡ன் வாங்கிக் கொடுத்து இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. அவ்வப்போது பெண்ணோடு பேசுவாங்க. ஆனால் என் எதிரிலே இருக்காது. குழந்தைகள் தங்களு டைய ரூம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று நச்சு தாங்காமல் நான் இவரைக் கேட்க, அவர் மாமியிடம் நாசூக்காகக் கேக்க 'பாப்பா ரொம்ப பிசியா இருக்கு. அதுவே வந்து கூட்டிக்கிட்டு போகும். உனக்கு தொந்தரவு இருந்தா நாளைக்கே பிளேன்ல ஏத்திடு' அப்படின்னு வாயை அடச்சிட்டாங்க.

##Caption##கடைசியிலே இரண்டு மாசம், இல்ல கொஞ்சம் குறைவோ, அந்த பாப்பா இவரைக் கூப்பிட்டு விசா முடியற நிலையிலே இருக்கு. அம்மாவை இங்கேயிருந்தே இந்தியாவுக்கு பிளேன் ஏத்திடுன்னு சொல்லி ஊருக்கு வேற எக்கச்சக்கமாக சாமான் வாங்கிக் கொடுக்கச் சொல்லிச்சு. எது கேட்டாலும் 'பாப்பா உடனே பணம் அனுப்பிச்சிடும்' என்கிற பதில். எப்படியோ அனுப்பி விட்டோம். எக்கச்சக்க மாக வாங்கிட்டுப் போயிருக்காங்க. அந்த 'பாப்பாவை' போன் பண்ணி கேளுங்க அப்படின்னேன். பணம் வராது. பரவா யில்லை. எங்க வீட்டு மனுஷங்களுக்கு நான் எதுவும் செஞ்சதில்லை. உறவுக்காரங்க நான் அவுங்களை நினைச்சு அனுப்பிச்சேன்னு சந்தோஷமாவது படுவாங்க' அப்படீன்னு என்னை மறுபடியும் அடக்கிட்டாரு.

நாங்களே மாமி பத்திரமா போய் சேர்ந் திட்டாங்களான்னு போன் பண்ணி கேட்டுக் கிட்டோம். அப்புறம், ஒரு தடவை யாவது யாரேனும் போன் செஞ்சு நீங்க அனுப்பிச்ச கேமரா, போன், சட்டை நல்லாயிருந்தது அப்படின்னு கூப்பிட்டு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். சரி, அப்படி எதிர்பார்ப்பை வளர்த்துக் கூடாது. நாம்பளே சும்மா போன் செய்வோம் என்று கூப்பிட்டேன். மாமி இல்லை போலிருக்கு. மருமகள்தான் போனை எடுத்தாள். அவள் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்ததால் நானே வெட்கத்தை விட்டு அந்த சாக்லெட் பிடிச்சுதா, சட்டை பிடிச்சுதா என்று ஒவ்வொரு ஐட்டமாகச் சொல்ல அவள் ரொம்ப நல்லாயிருந்துச்சிங்க. பெரிய சாமான்கள் எலலாம் அந்த மகளுக்குப் போயிட்டுது. பரவாயில்லை. அவுங்க பொண்ணு வாங்கி கொடுத்திருக்கா. அவ அக்காவுக்குத்தான் போகும். இந்த தடவை பாப்பா பரவாயில்லை. நிறையக் குடுத்து உட்டிருக்கா' என்றாளே பார்க்கணும். எனக்குப் பொறுக்கவில்லை. மடமடவென்று எல்லா விஷயத்தையும் சொல்லித் தீர்த்து விட்டேன். அப்புறம் மெல்ல அவள் சொல் கிறாள். பாப்பாவுக்கும் அவள் புருஷனுக்கும் பெரிய தகராறாம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாமி இங்கே வந்துவிட்டாள். பெண் திரும்பி உடனே போகச் சொல்லியிருக்கிறாள்.

இந்த வயதில் இப்படியும் சாமார்த்தியமாக ஒரு மாமி--எங்கள் செலவில் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு ஊரையே வாங்கிக் கொண்டும் போயிருக்கிறாள். ஒரு வார்த்தை எங்களைப் பற்றிப் புகழ்ச்சி இல்லை. ஏதோ நாங்கள் கெஞ்சிக் கூப்பிட்டு அழைத்துக் கொண்டு வந்து உபசாரம் செய்ததாகப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறாள். இப்படியும் ஒரு உறவு. வெறுப்பாக இருக்கிறது.

இப்படிக்கு,
........

அன்புள்ள சிநேகிதியே...

##Caption##நீங்கள் பதில் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இந்தப் பகுதி பயன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சமீபத்தில்தான் எங்கேயோ படித்தேன். மனிதர்கள், உறவுகள் நம் வாழ்க்கையில் are either for a reason or season, or for lifetime.

உங்கள் மாமி ஒரு season-ல் ஒரு reason-க்காகத் தங்கியிருக்கிறார்கள். உங்கள் கணவர் தன்னுடைய பழைய செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்துவிட்டார். அதற்கு நீங்கள் அழகாக உதவி செய்திருக்கிறீர்கள். உடல் சிரமம், பணச் செலவு இருந்து இருக்கிறது. முடிந்துபோன விஷயம். இது ஒரு அனுபவம். இதைக் கசப்பாகவோ வெறுப்பாகவோ நினைத்துக் கொண்டே போனால் அது உங்களைத்தான் பாதிக்கும். இதை ஒரு வேடிக்கை அனுபவமாக ஒரு பார்ட்டியில் நண்பர்கள் நடுவில் விவரித்தால் அங்கே சிரிப்பலைதான் நிற்கும். சரி, கொஞ்சம் அனுதாபம் இருக்கும். நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் யாரிடமாவது ஏமாந்துதான் இருப்போம். எவ்வளவு படித்தாலும், அனுபவம் இருந்தாலும், முன் ஜாக்கிரதையாக இருந்தாலும் எங்கேயோ இடறிவிடுவோம். சந்தேகங்கள் தோன்றினாலும், நம்முடைய படிப்பு, விவேகம், பண்பு மற்றவரைக் குடைந்து, குடைந்து கேட்பதை விரும்புவதில்லை. ஆகவே சில சமயம் உண்மை நமக்குத் தெரியாது. பரவாயில்லை. நாம் நண்பர்கள்.

வாழ்த்துக்கள்.
சித்ரா வைத்தீஸ்வரன்.

© TamilOnline.com