அடிமைகளில் யார் உயர்த்தி?
நான் திண்ணையில் படுத்துத் தூங்கிப் போனேன். அவ்வளவு ஆவலுடன் புதுச்சேரிக்குப் போன எனக்கு அந்தச் சமயம் தூக்கம் வந்ததன் காரணம் இன்னதென்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை. பாரதியார் என்னைத் தட்டி எழுப்பின போதுதான் எனக்குத் தெரியும். செட்டியாரின் வீட்டு மூன்றாவது மாடிக்குப் போனோம்.
ஒரு மூலையில் ஒதுக்குப் புறத்தில், அரவிந்தர் தன்னந்தனியே உட்கார்ந்து கொண்டிருந்தார். அரவிந்தரை நமஸ்கரித்து விட்டு நாங்களும் உட்கார்ந்தோம். பேச்சை யாரும் துவக்கவில்லை. பாரதியார் சட்டென்று எனக்குத் துணைபுரிந்தார்.
'தமிழ்நாட்டு தேசபக்தன்' என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 'சர்க்காருக்கு மனுப் பண்ணிக் கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?' என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை. 'அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?' என்று அவர் படீரென்று போட்டார். தலைநிமிர்ந்து கொள்வதற்கு எனக்குத் தைரியம் உண்டாயிற்று.
பாடகர் பாரதி
தம்முடைய பாடலை ஆண் பெண் அடங்கலும் தமிழ்நாட்டில் பாடவேண்டும் என்பது பாரதியாரின் ஆசை. ராகம், தாளம் எல்லாம் தெளிவாக இருக்கவேண்டும்.
முதல் தரமான சங்கீத வித்வானைப் போலப் பாட வேண்டும் என்று பாரதியார் முறையாகச் சுரம் பாடுவதில் சிட்சை சொல்லிக் கொண்டார். நினைத்த பொழுதெல்லாம் அசுர சாதகம் செய்வார். பக்கத்தில் யார் இருக்கிறார், இல்லை என்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல் பாடத் தொடங்கி விடுவார். ராத்திரியில் வெகுநேரம் வரையில் பாடிக் கொண்டிருப்பார். அக்கம் பக்கத்துக் காரர்கள் பாட்டு நிற்கப்படாதே என்று மனத்துக்குள் வேண்டிக் கொண்டே பாரதி யாரின் சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.
'மகா வைத்தியநாதய்யர், புஷ்பவனம் இவர்களுடைய சாரீரங்களைக் காட்டிலும் நயமாகவும் எடுப்பாகவும் பாரதியாரின் சாரீரம் இருக்கிறது' என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பியாக், சகானா முதலிய துக்கடா ராகங்கள் பாரதியாருக்குப் பிடித்த ராகங்கள்.
மனநோய் மருத்துவர் பாரதி
##Caption##லேசாகப் பைத்தியம் பிடித்த பையன் ஒருவன் பாரதியாரின் கண்ணில் தென்பட்டான். அவனுக்குச் சித்தப் பிரமை. அவன் அதிகமாக உளறுவதில்லை. மௌனமாக இருப்பான். அவனைக் கண்டதும் பாரதியாருக்குப் பரிதாபம். சித்தப் பிரமையை எப்படியாவது போக்கிவிட வேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டார். 'பைத்தியம் என்பது மனத்தைப் பிடித்த கோளாறுதானே? பார்த்துக் கொள்ளலாம்' என்று எங்களுக்குத் தைரியம் சொல்லுவார்.
பையனை அநேகமாக எப்போதும் தொட்டுக் கொண்டே இருப்பார். பழவகைகளைத் தாமே உரித்துத் தமது கையாலேயே அவனுக்குக் கொடுப்பார்; சில சமயங்களில் ஊட்டவும் செய்வார். இரவில், தம்முடன் கூடவே, தம் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார். கொஞ்சுகிற மாதிரி 'என்ன கண்ணு! என்ன ராஜா!' என்று அவனை அழைப்பார். அவனுக்கு ராஜோபசாரந்தான். பையனுடைய சித்தப் பிரமையை நீக்க முயலுவது முயல் கொம்பு வேட்டை என்பது எங்களுடைய அழுத்தமான எண்ணம்.
பாரதியார் இல்லாத இடங்களில், இல்லாத காலங்களில், நாங்கள் ஒருவரை ஒருவர் 'என்ன கண்ணு! சாப்பிடடி அம்மா! தங்க மோன்னோ! தாமரமோன்னோ! அட குப்பைத் தொட்டியே! சோற்றை முழுங்கேன்!' என்று பேசி, நையாண்டி பண்ணிக் கொண்டிருப்போம். சித்தப் பிரமை சிகிச்சை, சுமார் ஒரு மாதத்துக்கு மேல், மிகவும் சிரமமாக நடந்து வந்தது.
கடைசியில் நையாண்டி பண்ணிக் கொண்டிருந்த எங்களை பாரதியார் அடி முட்டாள்களாக ஆக்கி விட்டார். பையனுடைய சித்தப் பிரமை சிறிது சிறிதாகத் தெளிந்து போய், அவன் நல்ல படியாகப் பேசவும் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான். பாரதியார் ஆனந்தம் அடைந்தார். ஆனால், வெற்றி பெற்றுவிட்டேன் என்ற அகம்பாவக் குறி எதையும் அவரது முகத்திலும் நடையிலும் நாங்கள் காணவில்லை.
- 'மகாகவி பாரதியார்' நூலில் வ.ரா.
உலகத்து மக்களெல்லாம் ஒரே ஜாதி
பாரதியின் கருத்து பழைய உண்மையும் புதிய உண்மையும் இரண்டறக் கலந்து இருபதாம் நூற்றாண்டின் மெருகும் ஏறி, தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய கருத்து. பகவத் கீதை-பர்த்ருஹரி-டார்வின்-பாரதி--பல்வேறு காலத்து உரமும் நீரும் ஊட்டி வளர்த்துள்ள கொள்கை--உலகத்து மக்க ளெல்லாம் ஒரே சாதி; உலகத்து உயிர்களெல்லாம் ஒரே குடும்பம்; உலகத்து உயிர்களெல்லாம் கடவுளின் அம்சம் என்ற கொள்கை.
பின்னும் ஐந்து மாதங்களுக்கு அப்பால் இந்தத் தத்துவத்தை மேலும் வளர்த்து வேறொரு விதமாக வெளியிடுகிறான். அது இது:
'எல்லாப் பொருட்களையும் ஒரே பொருளாகக் காண்பவனுக்கு மருட்சி இல்லை; துயரமில்லை. எல்லாம் ஒரே பொருள் என்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமோ வெறுப்போ அச்சமோ கொள்ளமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியும் பக்தியும் செலுத்து வான். எந்தப் பொருளிலிருந்தும் மன நிறைவு பெறுகிறவன் எப்பொழுதும் மனநிறை வோடிருப்பான். இங்ஙனம் மாறாத இன்ப நிலையே முக்திநிலை என்றும் அமரபதம் என்றும் கூறப்படுவது. இதனை மனிதன் பயிற்சியாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத் திலேயே எய்திவிட முடியும். இதுதான் வேத ரகசியம்'.
இந்தத் தத்துவத்தை பாரதி நடைமுறைக் கொள்கையாக்க விரும்புகிறான். அதன் பொருட்டு உலகம் முழுவதிலும் ஒரு கண்ணோட்டம் செலுத்துகிறான். அதே ஓட்டத்தில் ஒரு வட்டத்தைத் தமிழகத்திலும் செலுத்துகிறான். சில முடிவுகளுக்கு வருகிறான்.
1. எல்லா மக்களும் ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும். 2. எல்லா மக்களும் உலக இன்பம் முழு வதையும் சம உரிமையோடும் சம வாய்ப்போடும் அனுபவிக்க வேண்டும். நமது பழம்பெரும் பண்பாட்டையும், மனித வர்க்கத்தின் புத்தம்புது லட்சியங்களையும் இரண்டறக் கலந்து, மேற்கூறிய முடிவுகளுக்கு வருகிறான்.
- 'பாரதி வழி' நூலில் ப. ஜீவானந்தம்
(டிசம்பர் 11 அன்று வரும் பாரதியாரின் 125வது பிறந்தநாளை ஒட்டி இந்தத் தொகுப்பின் மூலம் அந்த மகாகவிக்குத் 'தென்றல்' அஞ்சலி செலுத்துகிறது.) |