கார்ட்டூனிஸ்ட் தாணு
பிரபல கேலிச்சித்திர ஓவியர் தாணு அக்டோபர் 28, 2007 அன்று தனது 86வது வயதில் காலமானார். சிறு வயது முதலே கேலிச்சித்திரம் வரைவதில் தனக்கென தனிப் பாணியைப் பின்பற்றிப் பெரும்புகழ் பெற்ற தாணு, அரசியல் கார்ட்டூன்களுக்காக மிகவும் போற்றப்பட்டவர். அவரது கார்ட்டூன்கள் பிரபல இந்தியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், நியூயார்க் டைம்ஸ் போன்றவற்றிலும் வெளியாகின. ஆனந்த விகடனில் வெளியான அவரது அரசியல் கேலிச்சித்திரங்கள் மிகப் புகழ் பெற்றவையாகும்.

நாகர்கோவிலில் பிறந்த தாணு, பள்ளிக் கல்வியை எஸ்.எல்.வி. பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும் முடித்தார். பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய தாணு, கார்ட்டூனிஸ்டாகத் தனது பணியைத் தொடங்கினார் என்றாலும், கல்வியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவும், தொலைநிலைக் கல்வியை வளர்க்கும் பொருட்டும் 1970-ல் சென்னையில் பிரில்லியண்ட் கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.

தனது கடும் உழைப்பால் நிறுவனத்தை ஐ.ஐ.டி., எம்.பி.ஏ., மருத்துவம், பொறியியல் என்று அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்குமான பயிற்சிக் களமாக மாற்றி, மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்கினார். அதனை இந்தியாவெங்கும் கிளை பரப்பி நிற்கும் கல்வி நிறுவனமாக உயர்த்திக் காட்டினார். இன்று First computers, B-School என்று தமிழகத்தின் முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்கும் இதனை, அமெரிக்காவில் பொறியாளராக விளங்கிய தாணுவின் மகன் நீலகண்டன் கவனித்து வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com