கொடுத்ததை வாங்கக்காணேன்
தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது. 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள' என்று காமத்துப்பாற் குறள் சொல்லியதுபோல் பார்த்தும் கேட்டும் உண்டும் மோந்தும் தொட்டும் அறியும் ஐவகை உணர்வுகளையும் ஒளிவளையல் அணிந்தவள் இடத்தே உள்ளன என்று வியந்து தன் அழகைக் கொண்டதை நினைந்தாள் தலைவி.

இவ்வாறு இருக்கும் தலைவிக்கும் தோழிக்கும் நடந்த உரையாடலைச் சாத்தன் என்னும் சங்கக் கவிஞர் பாடியிருப்பதைக் காண்போம் குறுந்தொகை என்னும் சங்கப் பாடல் தொகுதியிலே.
தலைவியின் நிலையைக் கண்டு நொந்த தோழி தலைவியிடம் சொல்லினாள்:

"...தொடுத்து நம்நலம்
கொள்வாம்!"
(குறுந்தொகை: 349:3-4)

[தொடுத்து = வளைத்து; நலம் = அழகு]

"தலைவனை வளைத்து நம் அழகை மீண்டும் பெறலாம்". அதாவது தலைவனை மடக்கித் தலைவி அவனுக்குக் கொடுத்த அழகைமீட்டும் கொடுப்பிக்க எண்ணிப் பேசினாள் தோழி. ஒன்று தலைவியை மீண்டும் சேர்ந்து வாழ் அல்லது அவள் அழகைத் திருப்பிக்கொடு என்பது குறிப்பு. மீண்டும் சேர்ந்து வாழாமல் அழகை மட்டும் மீளவும் கொடுப்பது இயலாது; எனவே தலைவனைத் தலைவியிடம் மீள் என்று கூறுவதே முடிவு.
ஆனால் தலைவியோ சொல்கிறாள்:

" நம்நலம்
கொள்வாம் என்றி, கொள்வாம்;"
(குறுந்தொகை: 349:3-4)

"நம் அழகைக் கொள்ளுவோம் என்கிறாய், கொள்ளுவோம்;" ஆனால் இன்னும் ஒன்று மட்டும் கேள் என்பதுபோல் நிறுத்திச் சொல்கிறாள்:

"இடுக்கண் அஞ்சி, இரந்தோர் வேண்டிய
கொடுத்து, "அவை தா!" என் சொல்லினும்
இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே?!"
(குறுந்தொகை: 349:5-7)

[இடுக்கண் = இக்கட்டு, இடைஞ்சல்; இரந்தோர், கேட்டோர்; என் = என்னும்; இன்னாதோ = துன்பமானதோ]

"நம்மிடம் கேட்டோர் விரும்பியதைக் கொடுத்துவிட்டுப் பின்னொருநாள் நமக்கு வந்த இக்கட்டை அஞ்சி அவரிடமே மீண்டும் போய் அவற்றை எனக்குத் தா என்று சொல்லும் சொல்லினை விட நம் இனிய உயிரை இழப்பது துன்பமானதோ?" என்றாள்!

அழகைத் திரும்பிக் கொடு என்றால் உண்மையில் என்னிடம் மீண்டு வா என்பதுதான் உட்பொருள் என்றால் ஏன் தலைவி

உயிரை விடுவதே இனிமை என்று சொல்லவேண்டும்? ஏனென்றால் இன்னொரு வழியில்கூட அழகை மீண்டும் பெறலாம்:

தலைவனைத் தலைவி மறந்தால்! பிறகு கவலை எங்கே? அழகு குலைவது எங்கே? ஆனால் தலைவி அதனை என்றும் செய்யாதவள்; அதனால்தான் தன் உயிரைவிடுவதே மேல் என்கிறாள்.

கொடுத்ததை வாங்கக் காணேன்!

கொடுத்ததைத் திரும்பப் பெறாமையைக் குறித்து ஒரு சிறந்த பழம்பாடல் இருப்பதை உ.வே.சாமிநாதையர் அவர்கள் மேற்கண்ட குறுந்தொகைக் குறிப்பில் மேற்கோள் காட்டுவதை நாம் கட்டாயம் காணவேண்டும். இந்தப் பாடல், சான்றோர் யாரும் நினைவுக்கு எட்டிய காலம் முதல் கொடுத்ததைத் திரும்பவாங்கியதைக் கண்டதில்லை என்று சொல்வது; அந்த நினைவுக்கெட்டிய காலத்தைக் குறிக்கப் புராணங்களிலிருந்து பிரமன், மன்மதன், சிவன் முதலான இறைவர்களுக்கு நேர்ந்த தொன்மையான நிகழ்ச்சிகளுக்கு முன்பிருந்தே உலகை நேரடியாகக் கண்டு இருக்கிறேன் என்று சொல்வதாக இருக்கிறது கவிதையின் முற்பகுதி.

"அலைகடல் கடையக் கண்டேன்; அயன்ஐந்து சிரமும் கண்டேன்;
மலையிரு சிறகு கண்டேன்; வாரிதி நன்னீர் கண்டேன்;
சிலைமதன் வடிவு கண்டேன்; சிவன்சுத்தக் கழுத்துக் கண்டேன்;
குலவரி இருகண் கண்டேன்; கொடுத்ததை வாங்கக் காணேன்!"
(பழம்பாடல்)
[அயன் = பிரமன்; வாரிதி = கடல்; சிலை = வில்; மதன் = மன்மதன்]

அப்பாடல் சொல்லும் நிகழ்ச்சிகளைக் காண்போம்:
"அலை கடல் கலையக் கண்டேன்!". அலைபாயும் கடலைத் தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காகக் கடைவதை நான் கண்டிருக்கிறேன். கடைவதற்கு மேரு என்னும் வடக்கு மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பெரும்பாம்பை நாணாகவும் கொண்டு கடல்வண்னனாகிய திருமால் கடைந்ததைச் சிலப்பதிகாரம் சொல்லும்:

"வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே!"
(சிலப்பதிகாரம் : ஆய்ச்சியர் குரவை)

பண்டொருநாள் என்று சொல்வதைக் கவனிக்கவும்.

"அயனைந்து சிரமும் கண்டேன்". பிரமனுக்கு இப்பொழுது நாலு தலைகள்; அதனால் அவனை நான்முகன் என்று அழைப்பது வழக்கம். ஆனால் முன்பு ஐந்து தலைகள் பிரமனுக்கு இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றைச் சிவன் கிள்ளியதாகவும் புராணங்கள் சொல்லும்.

"பிரமன்தன் சிலையரிந்த பெரியாய் போற்றி" என்று திருநாவுக்கரசர் தேவாரம் பாடும்.

"மலைஇரு சிறகு கண்டேன்". இந்திரன் மலைகளுக்கு முன்பிருந்த சிறகுகளை வெட்டியதாக மைத்திராயணி சம்மிதை போன்றவை கூறும். மலைகள் அதன்பின் சிறகின்றி அவ்வவ்விடத்தில் தங்கிவிட்டனவாம்; சிறகுகள் முகில்கள் ஆகிவிட்டனவாம்.

"வாரிதி நன்னீர் கண்டேன்" கடல் உப்புக் கரிக்கும் உவர்நீர் பெறுமுன் நல்லநீராக இருப்பதைக்கண்டேன்.

"சிலைமதன் வடிவு கண்டேன்". கரும்புவில்லேந்திய காமனாகிய மன்மதன் சிவனால் எரிபட்டு உருவிழக்கும் முன்பிருந்த வடிவத்தைக் கண்டிருக்கிறேன்.

"சிவன்சுத்தக் கழுத்துக் கண்டேன்" சிவன் இப்பொழுது நீலக்கறைபடிந்த கழுத்துடையவன். அதற்குக் காரணம் கடலை அமிழ்தத்திற்குக் கடைந்தபொழுது அமிழ்தத்துடன் ஆலகாலம் என்னும் நஞ்சும் கிளம்பியது. அதை அடக்க வலிமையின்றித் தேவர்கள் சிவனிடம் முறையிட்டபொழுது சிவன் அவர்களைக் காக்க அந்த நஞ்சினை உண்டான் என்பர். அதனால் அவன் கழுத்து நீலக்கறை படிந்தது. அந்த நிகழ்ச்சி நடக்கு முன் சுத்தமாக இருந்த சிவன் கழுத்தைக் கண்டதாகக் கவிதையின் கூற்று.

"குலவரி இருகண் கண்டேன்" இதன்பொருள் தெளிவில்லை. உ.வே.சா.வின் உரையும் இல்லை. எதற்கோ அல்லது எவர்க்கோ இருகண்கள் இருப்பதையும் கண்டதாகச் சொல்கிறது. ஒருவேளை முந்தைய சிவனைத் தொடர்ந்து சொல்கிறதோ? அவனுக்கு மூன்றாம் கண் பெறுமுன் இரண்டு கண்கள் (குலவு அரி (=சிவன்) இருகண்) மட்டும் இருப்பதையும் பார்த்திருப்பதாகச் சொல்லலாம்.

இவ்வாறு அந்த நிகழ்ச்சிகளெல்லாம் நிகழுமுன்னிருந்து உலகை நெடுங்காலம் காண்கிறேன்; ஆனால் உயர்ந்த குணமுடையவர் என்று தம்மைக் கருதும் யாரும் பிறருக்குக் கொள்கெனக் கொடுத்ததை மீண்டும் தா என்று கேட்டு வாங்கியதைக் காணேன் என்று சொல்கிறான் அக்கவிஞன்.

மேற்கண்ட இரண்டு கவிதைகளும் தமிழ்ப் பண்பாட்டின் வியக்கத்தக்க கூறுகளைப் பொதிந்துள்ளன என்பதில் ஐயமில்லை.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com