தமிழ்நாட்டுப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் கல்கண்டு வாரப் பத்திரிகையும் அதன் ஆசிரியர் தமிழ்வாணனும். ஒரு கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வரைந்து கடிதம் அனுப்பினால் கல்கண்டு முகவரிக்குத் தபால்துறை சேர்த்துவிடும் அளவுக்குத் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்தவர் தமிழ்வாணன். கல்கண்டு பத்திரிகையாலும் சங்கர்லால் துப்பறிகிறார் தொடர்கதைகளினாலும், நூற்றுக்கணக்கான சுயமுன்னேற்றப் புத்தகங்களினாலும் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தமிழ்வாணன். சிறுவர்களிடம் தமிழ் படிக்கும் ஆர்வத்தைச் சிறுவர் நூல்கள் மூலம் தூண்டியவர் தமிழ்வாணன். துணிவே துணை என்ற தாரக மந்திரம் மூலம் தமிழ் வாசகர்கள் மனதில் தன்னம்பிக்கையையும் நல்லொழுக்கத்தையும் வளர்த்தவர் தமிழ்வாணன்.
அவரது மறைவுக்குப் பிறகு கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பைத் தன் இளம் வயதிலேயே ஏற்றவர் லேனா தமிழ் வாணன். தவிர, குமுதம் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார். 60 நூல்களை இதுவரை எழுதியுள்ள லேனா, தங்களது மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் 3400 நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். மணிமேகலைப் பிரசுரத்தின் 80க்கும் மேற்பட்ட துறை விற்பன்னர்கள்/ஆசிரியர்கள் குழுவின் தலைவராக லேனா தமிழ்வாணன் செயல்பட்டு வருகிறார். சுயமுன்னேற்ற நூல்களில் முத்திரை பதித்துள்ள லேனா சிறந்த பேச்சாளரும் ஆவார். பல முன்னணி நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்து வருகிறார். இவரது எழுத்துப் பணியைப் பாராட்டி காஞ்சிப் பெரியவர் இவருக்கு 'இலக்கிய சிந்தாமணி' என்ற பட்டம் கொடுத்துள்ளார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம், பாரத ஸ்டேட் வங்கி, மூவேந்தர் இலக்கிய அமைப்பு தவிர 17 கல்வி மற்றும் பொதுநல அமைப்புகளின் விருது களைப் பெற்றிருக்கிறார்.
இவரது படைப்புகளை ஆராய்ந்து மூன்று மாணவர்கள் எம்·பில் பட்டங்களையும், இரண்டு பேராசிரியர்கள் டாக்டர் பட்டங்களும் பெற்றிருக்கின்றனர். 54 வயதானாலும் யோகா போன்ற உடல், மனப் பயிற்சிகளினாலும், உணவுப் பழக்கங்களி னாலும் மிகவும் இளமையுடன் தோற்ற மளிக்கும் லேனாவுக்கு இரண்டு மகன்கள். மனைவி ஜெயம் அவர்களுடன் சென்னையில் வாழ்ந்து வரும் லேனா உலகம் முழுவதும் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அண்டார்டிகா கண்டம் தவிர உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணம் செய்த அனுபவங்களைச் சுவையான பயணக் கட்டுரைகளாக அளித்துள்ளார். தன் தந்தையைப் போலவே கருப்புப் கண்ணாடி அணிவதைத் தன் அடையாளமாக வைத்துக் கொண்டு தனக்கென பத்திரிகை, பதிப்புத் துறை மற்றும் சுயமுன்னேற்றப் பயிற்சி என்று பல துறைகளிலும், தமிழ்நாட்டிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் மதிப்பிற்குரிய குறிப்பிடத்தக்க ஆளூமையாக லேனா தமிழ்வாணன் விளங்கி வருகிறார்.
நவம்பர் 3, 2007 அன்று சிவா-பாகீரதி சேஷப்பன் இல்லத்தில் இவருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது லேனா பகிர்ந்து கொண்ட பல்வேறு சுவையான தகவல்கள் இதோ உங்களுக்காக... கே: தமிழ்வாணன் குறித்து?
ப: நான் சிறுவயதிலேயே என் பெரியம்மாவுக்கு தத்துக் கொடுக்கப்பட்டு விட்டேன் என்பதால், தேவகோட்டையில் உள்ள என் பெரியம்மா வீட்டிலேயே வளர்ந்தேன். அப்பாவுடன் சிறு வயதில் அதிகம் பழக்கம் கிடையாது. ஒருமுறை நான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொழுது 'அவனுக்கு ஏதேனும் நேர்ந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள்' என்று கூறும் அளவுக்கு அவர் தன் தொழிலில் மிகுந்த நேரமும் உழைப்பும் செலவழித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவருடன் அப்பா என்ற அன்புடன் நெருக்கமாகப் பழகும் தருணங்கள் குறைவாகவே இருந்தன.
நான் சென்னைக்குப் படிக்க வந்த பின் கல்கண்டு பத்திரிகை குறித்த விமர்சனங்களைச் சொல்ல ஆரம்பித்தேன், அவை அவரைக் கவர்ந்தன. முதன் முதலாக நான் ஜிம் கார்பெட் எழுதிய புலி பற்றிய ஒரு கட்டுரையால் ஈர்க்கப்பட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து கல்கண்டில் பதிப்பிக்கும்படி அப்பாவிடம் கொடுத்தேன். படித்துவிட்டு, கருத்து ஏதும் தெரிவிக்காமல் மேஜையில் விட்டுவிட்டுப் போனது எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. சில வாரங்கள் கழித்து எனது கட்டுரை கல்கண்டில் வெளிவந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. என் கட்டுரைக்குச் சன்மானமாக 15 ரூபாய்க்கான காசோலை வந்தது எனக்குத் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அப்பொழுது அது பெரிய பணம்.
கே: அவரைப் பற்றிய பிற நினைவுகள்...
##Caption##ப: அவர் ஒரு பன்முக ஆளுமை கொண்ட மனிதர். அந்தக் காலத்தில் துணுக்குகள் இல்லாமல் பத்திரிக்கைகள் வருவதில்லை. ஒரு பக்கத்தில் வெறும் தகவலோ கதையோ மட்டும் இருக்காது, ஒரு படமோ, துணுக்கோ கட்டாயம் இருக்கும். ஆகவே துணுக்குகளுக்கு பத்திரிகைகள் கொடுக்கும் முக்கியத் துவத்தையும் அதற்கு வாசகர்களிடம் இருக்கும் ஆர்வத்தையும் உணர்ந்து முதன்முதலாகத் துணுக்குகளுக் கென்றே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். கல்கண்டுக்கு முன்பாக ஜிங்கிலி என்னும் சிறுவர் பத்திரிகையை நடத்தி வந்தார். பிரபலப் பத்திரிகையாளரான பாபுராவ் பட்டேல் என் தந்தையாருக்கு ஒரு பத்திரிகை உலக முன்மாதிரி. அவரைப் பின்பற்றி, தமிழ் வாரப் பத்திரிகையில் முதன் முதலாக வாசகர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பகுதியை ஆரம்பித்தார். தமிழ்வாணனின் கேள்வி-பதில் தொகுப்பு இன்றும் பலத்த வரவேற்பைப் பெறுகிறது. இதைத் தவிர தமிழ் பல்பொடி என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து பெரும் லாபம் ஈட்டினார். 7 திரைப்படங்கள் தயாரித்து அதிலும் நல்ல வருமானம் ஈட்டினார்.
அவர் ஒரு சிறந்த வர்த்தகரும் ஆவார். ஒரு மனிதன் பொருளாதார ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சமகால எழுத்தாளர்கள் பலர் வறுமையில் உழன்ற பொழுது வெற்றிகரமாக எழுத்துத் துறையிலும் பிற வியாபாரங்களிலும் திகழ்ந்தார். ஒரு மனிதனுக்கு 90 சதவிகிதப் பிரச்னைகள் பொருளாதார ரீதியாக வருபவைதான் என்றும் 5 சதவிகிதம் வாயால் இழுத்துக் கொள்ளும் பிரச்னைகள் என்றும், மீதம் 5 சதவிகிதம் மட்டுமே தானாக வலிய வருபவை என்றும் அடிக்கடி கூறுவார். தன்னை வெற்றிகரமாக சந்தைப்படுத்திக் கொண்டு அதன்மூலம் தன் நூல்களையும் நிறுவனத் தையும் வெற்றிபெற வைத்தவர் தமிழ்வாணன்.
எழுத்தாளர் என்றால் ஜிப்பா, ஜோல்னா பை என்றிருந்ததை மாற்றி இளமைத் துடிப்புடன் கூடிய ஒரு தோற்றத்தை நிலை நிறுத்தினார். தனக்கென்று ஒரு பிராண்டைத் தனது தொப்பி மற்றும் கருப்புக் கண்ணாடி மூலமாகவும் தனது 'துணிவே துணை' என்னும் நம்பிக்கை மொழியாலும் உருவாக்கினார். அவர் கண்டுபிடித்த கால்காவலன், இன்சுவை போன்ற மூலிகை மருந்துகளும் பெருத்த வரவேற்பைப் பெற்றன. அவரது மறைவுக்குப் பின்னர் குமுதம் ஆசிரியர் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வழக்குரைஞராக முயன்று கொண்டிருந்த என்னைக் கல்கண்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொன்னார்.
கே: அழகிய தூய தமிழில் எழுதுவதை வற்புறுத்தி, தன் பாத்திரங்களுக்கு மலர்கொடி, நம்பி என்று தூய தமிழ்ப் பெயர்களை வைத்த தமிழ்வாணன், சங்கர்லால் என்னும் துப்பறிவாளர் பாத்திரத்துக்கு மட்டும் வித்தியாசமான பெயரைத் தேர்ந்தெடுத்தது எவ்வாறு?
ப: அது ஒரு சுவாரசியமான சம்பவம். கேரளாவில் இருந்து சங்கர்லால் என்னும் வாசகர் என் அப்பாவுக்கு நீங்கள் ஏன் ஒரு மர்மத் தொடர்கதையைக் கல்கண்டில் வெளியிடக் கூடாது என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து துப்பறியும் கதையை எழுதத் தொடங்கிய என் தந்தை அதற்குக் காரணமாக அமைந்த வாசகரின் பெயரையே கதையின் நாயகனுக்கு வைத்து விட்டார். அந்தப் பெயர் அழியாப் புகழ் அடைந்தது.
கே: மணிமேகலைப் பிரசுரத்தை வெற்றிகரமாக நடத்தி பல்லாயிரக் கணக்கான புத்தகங்களை வெளியிட்டு வருகிறீர்கள். தமிழில் பதிப்புத் துறை இன்று எவ்வாறு உள்ளது?
ப: தமிழில் வாசிக்கும் ஆர்வமும் புத்தகம் வாங்கும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது தமிழ் நாட்டில் புத்தக விற்பனை குறைவே. தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் அதிகமான ஊடுருவல் வாசிக்கும் பழக்கத்தை பாதிக்கவே செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி எங்களைப் போன்ற பதிப்பகத் தார்களுக்கு மிகுந்த வரவேற்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. புத்தகக் கண்காட்சி பதிப்பகங்களுக்குக் கிடைத்த ஒரு அரிய பரிசு. தமிழக முதல்வர் நிரந்தர புத்தக கண்காட்சிக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார். தற்பொழுது சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் ஒரு நிரந்தர கண்காட்சி ஆண்டு முழுவதும் இயங்கி வருகிறது. மற்றபடி நெய்வேலி மதுரை போன்ற ஊர்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னையில் நடக்கும் கண்காட்சியின் முதல் வாரத்தில் நல்ல விற்பனை நடைபெறுகிறது.
கே: கல்கண்டு பத்திரிகை தற்பொழுது எவ்வாறு நடைபெறுகிறது?
ப: கல்கண்டு பத்திரிகைக்கென்று ஒரு நிலையான வாசகர் வட்டம் உள்ளது. அவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
கே: ஒரு வருடத்திற்கு எத்தனை புத்தகம் பதிப்பிக்கின்றீர்கள்? அதன் விற்பனை எப்படி உள்ளது?
ப: மணிமேகலைப் பதிப்பகத்தின் மூலம் தினமும் ஒரு புத்தகம் வெளியிட்டு வருகிறோம். ஒரு நூல் பதிப்பிக்கும் பொழுது 1200 பிரதிகள் வெளியிடுவோம். ஆனால் அந்த 1200ம் விற்பனையாக ஒன்றில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம்.
கே: எந்தவிதமான நூல்களுக்கு வரவேற்பு உள்ளது?
##Caption##ப: சுயமுன்னேற்ற, தொழில்நுட்ப நூல்கள் பெருத்த வரவேற்பைப் பெறுகின்றன. ரமணி சந்திரன், சுஜாதா போன்றோரின் நாவல்களுக்கு எப்பொழுதும் வரவேற்பு இருக்கின்றன. சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' 3 லட்சம் பிரதிகளும், அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் 2 லட்சம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து மேலும் பதிப்புகள் காண்கின்றன. மணிமேகலைப் பிரசுரத்தைப் பொருத்தவரை பிரபலமானவர்களின் விலாசங்கள், தமிழ்வாணன் நூல்கள் மற்றும் சுயமுன்னேற்ற நூல்கள் நன்கு விற்பனையாகின்றன.
கே: பதிப்புத் துறையில், உங்கள் தந்தையார் காலத்தில் இருந்ததற்கும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த தற்காலத்திற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
ப: அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் அச்சிட்டு வெளிக்கொணர குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும், மேலும் அச்சுக் கோர்ப்பு, தரம் போன்றவற்றிலும் சிரமங்கள் இருக்கும். இப்பொழுது தரமான, கவரும் விதத்திலான புத்தகங்களை மூன்றே நாட்களில் வெளிக்கொணர்ந்து விடலாம். பதிப்பகத் துறையும், அச்சுத் துறையும் கணினி மற்றும் மென்பொருட்களின் உதவியினால் வெகுவாக முன்னேறியுள்ளன. தனிநபர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்பத் தாங்கள் எழுதிய புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பும் உள்ளது. அந்தக் காலத்திலேயே இது போன்று தானே எழுதித் தானே பதிப்பித்து தானே வெற்றிகரமாக விற்பனையும் செய்த எழுத்தாளர் என் தந்தையார்.
கே: தமிழ்வாணனின் கல்கண்டு, லேனாவின் கல்கண்டு, ஏதும் வித்தியாசம் உள்ளதா?
ப: என் தந்தையார் அரசியல் விமர்சனங்களை ஒளிவு மறைவின்றித் 'துணிவே துணை' என்ற கொள்கைக்கேற்ப வெளியிடுபவர். அவரது கேள்வி பதில்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. காலம் மாறமாற அரசியலில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. விமர்சனங்கள் வன்முறையால் எதிர்கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டதால் நாங்கள் பத்திரிகை என்பதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு கேடயமாக, பக்குவமாகக் கருத்துச் சொல்லும் நிலையில் இருக்கிறோம். இருந்தாலும், சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சற்றுப் பக்குவமாகச் சொல்லியே வருகிறோம்.
சந்திப்பு: ச. திருமலைராஜன் |