விட்டல்ராவ்
நவீன தமிழ் இலக்கிய உயிர்ப்புக்கும் செழிப்புக்கும் பலரும் பலவாறு வளம் சேர்த்து வருகிறார்கள். இந்த மரபு காலத்துக் காலம் தலைமுறைக்குத் தலைமுறை புதிய பண்புகளையும் புதிய தன்மைகளையும் கொண்டு வருகின்றன. சிறுகதை வகை மையைப் பொறுத்தவரை அதன் தளம் காலந்தோறும் பல திசைகள் எங்கும் பரவிக் கொண்டிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளித்திருக்கும் கதை சொல்லிகளைப் பொதுக்களத்துக்கு அறிமுகம் செய்கிறது. இந்தத் தொடர்ச்சியில் வருபவர் தான் எழுத்தாளர் விட்டல்ராவ்.

இவர் ஆரம்பத்தில் வெகுசன இதழ்களில் எழுதத் தொடங்கி இலக்கியச் சிற்றிதழ்களில் அறிமுகமாகி வேரூன்றியவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மொழிபெயர்ப்புக்கள், ஓவியங்கள், சினிமா எனப் பல்வேறு களங்களிலும் இவரது படைப்புகள் வெளி வருகின்றன.

1942-ல் சேலம் மாவட்டத்திலிருந்த ஓசூரில் பிறந்தார். பள்ளி ஆசிரியராக, மருத்துவமனை எக்ஸ்ரே டெக்னிஷியனாக, குமாஸ்தவாக எனப் பல தொழில்களில் பணியாற்றித் தனது அனுபவத்தை விரிவாக்கிக் கொண்டார். மனித வாழ்வு பற்றிய தொடர் விசாரணையில் ஈடுபட்டார். இதனாலேயே போக்கிடம், நதிமூலம், மீண்டும் அவளுக்காக, வண்ண முகங்கள், காம்ரேடுகள் போன்ற இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன.

'என்னைச் சுற்றி நான் வேண்டியே அமைத்துக் கொண்ட வாழ்க்கையும் தானாகவே என்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையும் எனக்குப் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகள். இந்த அழகிய, சுறுசுறுப்பான, மந்தமான, சுகமான, சோகமான, நெறியான, நீசத்தனமான, பல்வேறு நம்பிக்கைகளாலான, பொய்யான, மெய்யான, ஆண், பெண், விலங்குகள், பறவைகள், தாவரம் மற்றும் சடப்பொருள்களாலான வாழ்க்கையை நான் எவ்வளவுக்கு ஆழ்ந்து உற்று கவனித்து கிரகித்து சுவீகரித்து என் சகமனிதனிடம் அந்த எண்ணற்ற அனுபவங்களால் விளைந்த உணர்வுகளை வெளியிட்டுப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். அந்த ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சிறுகதை' எனத் தெளிவாகக் குறிப்பிடும் பாங்கு இவருடையது. ஆகவே எதார்த்தம் பற்றிய காட்சி மற்றும் உணர்வு சார்ந்த வெளிப்பாட்டு முறைமை விட்டல்ராவின் பாடைப்பாக்கத்தின் தரிசனமாகிறது. குறிப்பாக இவரது சிறுகதைகள் வாழ்க்கையினூடு உள்நுழையும் உராய்வாகவே உள்ளன. இதனால் வாசகருக்கு புதியதாகப் புலப்படும் அனுபவம் தேங்கியிருக்கும்.

##Caption##படைப்புக்கும் வாசகருக்கும் இடையே ஒருவகையான உறவை வளர்க்கும் பண்பு கொண்டவை இவரது படைப்புக்கள். இவை மேலும் மேலும் வாசக அனுபவங்களில் பலரை ஞாபகப்படுத்தும். இதையும் மீறி அவர்களது சுகதுக்கங்கள் வலிகள் என விரிந்த தன்மைகளின் இணைவாகவும் இருக்கும். மொத்தத்தில் விட்டல்ராவ் கதைகள் வாசகர்களுடன் மிக நெருங்கிய உறவாடல் பண்பு கொண்டவை. மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் விளங்கவும் உரிய உறவுப் பரிமாணங்களின் பிணைப்புகளின் நீட்சி யாகவே இவரது படைப்புலகம் இயங்குகிறது.

விட்டல்ராவ் சினிமா, ஒவியம் சார்ந்து எழுதும் கட்டுரைகள் இவரது ஆளுமைக்கு வேறு சில பரிமாணங்களைச் சேர்க்கின்றன. இந்தக் கலை அனுபவம் மொழி சார்ந்த இலக்கிய அனுபவமாக விரியும்போது வாசகருக்குக் கிடைக்கும் அனுபவச் சேர்க்கை ஆழமானது, வித்தியாசமானது. சக படைப் பாளிகளை நேசிக்கும் மனப்பாங்கு கொண்டவராகவே இந்தத் தேர்ந்த படைப்பாளி இருக்கிறார். இந்த வகையில் சிறந்த 'தமிழ்ச் சிறுகதைகள்', 'இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்' போன்ற தொகுப்புகளைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்ச்சிறுகதையின் பல்வேறு அம்சங்களை படைப்பாளுமைகளை வாசகர்கள் இனங்காணவும் உதவியுள்ளார். படைப்பு சார்ந்த கலைத்துவத் தேடல் வாசக மனங்களுக்கு உள் இயங்க வேண்டும் என்ற வேட்கையுடன் விட்டல்ராவ் இயங்குவது தமிழ் படைப்புலகத்துக்குப் புதிய சாளரங்களை நிச்சயம் திறந்து விடும். தொடர்ச்சியாக விட்டல்ராவ் தமிழ்ப் படைப்புலகத்தை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது பாராட்டத்தக்கது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com