சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
13 வயதே ஆன சந்தியா நடாதூரின் பரதநாட்டிய அரங்கேற்றம் செப்டம்பர் 8, 2007 அன்று லாஸ் ஏஞ்சலஸ் பொவர்ட் அரங்கத்தில் நடைபெற்றது. சக்தி நடனக் குழுமத்தின் மாணவியான இவர் தாளம், பாவம், அபிநயம் எவற்றிலும் குறைபாடில்லாமல் ஆடியது அபாரம்.

'சந்த்ர சூட சிவசங்கர' என்கிற புரந்தர தாசரின் கிருதிக்கு காலஞ்சென்ற ஜாஹ்னவி வர்ண மெட்டமைத்து இருந்தார். அதற்கு குரு விஜி பிரகாஷ் நடன அமைப்பு செய்திருக்கிறார். இந்த வர்ணம் சிவனின் அனேக திருவிளையாடல்களைக் குறித்தது. விஜியின் பின் ஜதிக்கு ஈடாகத் தாளக்கட்டுடன் 45 நிமிடங்கள் அயராமல் ஆடி சந்தியா வியக்க வைத்தார்.

பதங்கள் மூன்றும் ஒன்றுக்கொன்று சோடை போகவில்லை. ரஞ்ஜனி மாலா ராகமாலிகையில் மஹிஷாசுரனை தேவி கொல்வது போல் காண்பித்ததிலும், மோகன ராகப்பாட்டில் ஸ்ரீராமனின் லீலைகளை விவரித்ததிலும் 'என்ன நான் செய்து விட்டேன்' என்கிற பதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் குறும்புத்தனத்தைச் சித்தரித்ததும் ரொம்பவும் பிரமாதம்.

நடன அரங்கேற்றத்துக்குப் பிரபல வயலின் வித்துவான் டி.என். கிருஷ்ணன், பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன் ஆகியோர் வந்து இருந்து கெளரவித்தார்கள்.

நட்டுவாங்கம் செய்த குரு விஜி பிரகாஷ், உடன் பாடிய ஸ்ரீவத்சா, மிருதங்கம் வாசித்த வேதகிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்த மகேஷ் ஸ்வாமி ஆகிய அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

மேலும் விவரங்களுக்கு: www.shaktidancecompany.com

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com