லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 15, 2007 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி விழா கணபதி ஹோமத்தோடு தொடங்கியது. விழாவை முன்னிட்டு லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி இயக்குனர் கானசரஸ்வதி அவர்கள் தலைமையில் மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை கலைஞர்கள் இசைமழையில் ரசிகப் பெருமக்களை நனைத்தனர். கீதம், ஜதிஸ்வரம், ஸ்வரஜதி, வர்ணம், பதவர்ணம், க்ருதி, அஷ்டபதி, திவ்யநாம க்ருதி, தில்லானா, திருப்புகழ் மலர்களை கணபதிக்குச் சமர்ப்பணம் செய்தனர். சூரஜ், சக்திசுந்தர், ஹம்சினி, விஷ்ணு ஆகியோர் நீலகண்டன் மீது பாடிய பதவர்ணமும்; 3 முதல் 10 வயது சிறுவர் சிறுமியர் பாடிய காந்திஜீயின் ரகுபதிராகவ ராஜாராம் பஜனையும் செவிக்கு விருந்து. சங்கீதா சேலையூர் கமலசித்தி விநாயகருக்கு பைரவியில் பாமாலைச் சார்த்தி, காபி ராகத்தில் கிருஷ்ணர் மீது திவ்யநாம க்ருதி பாடினார். ப்ரெளன் ப்ரேட், சந்த்ரமோஹன், சர்வேஷ் ராமர் பாடலையும்; கீதா, ப்ரசன்னா, ப்ரவீனா, ப்ரமிளா அம்பாள் மீதான பாடல்களையும் பாடி மகிழ்வித்தனர். அந்தர ரூப சிவதேவா கிதார் வாத்தியத்தில் தியாகராஜர் க்ருதி வாசித்தார்.

லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி இயக்குனர் கானசரஸ்வதியும் அவரது மகள் சங்கீதாவும் சிறப்பு விநாயகர் பக்திப் பாடல்களைப் பெருமானுக்குச் சமர்ப்பணம் செய்தனர். கானசரஸ்வதியின் சொந்த க்ருதிகள் அனைத்தும் மிக அருமை. சீனிவாசன் (மிருதங்கம்), சுவாமி (டோலக்), லியோனஸ் (கடம், கஞ்சீரா, பக்கமேளம்) வாசித்து நிகழ்ச்சியைச் சோபிக்கச் செய்தனர். முடிவாக பஜனைப் பாடல்களும், வெங்கடாசலப்பெருமாள் மீது மங்களமும் பாடி நிறைவு செய்தனர்.

தமிழ்ச்செல்வி

© TamilOnline.com