'SAT' தேர்வில் பெறும் மதிப்பெண்கள் விரும்பும் கல்லூரியை மாணவர்கள் பெற அடிப்படையாக உள்ளது. கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் செப்டம்பர் 16, 2007 அன்று ராஸ்வெல் மாநகரில், கல்லூரியில் சேரும் வழிமுறைகளை மாணவர்களுக்கு இரண்டு மணி நேரத் தொகுப்பு நிகழ்ச்சியாக வழங்கியது.
நிகழ்ச்சியை அசோக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பேராசிரியர்கள் வேணு தசிகி, பரூக் மிஸ்திரி, ஜெனிபர் கொடீமோ தாமஸ், ஷெர்ரி உள்வாளா, ராஜேஷ் குரூப் ஆகியோர் உரையாற்றினர். சற்றேறக்குறைய 75 மாணவர்களும், பெற்றோர்களும் இதில் பங்கேற்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 'SAT' நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்றுவிக்கும் டாக்டர் தசிகி, மாணவர்கள் மாதிரித் தேர்வுகளைப் பலமுறை செய்து பழகினால் நல்ல பயன் இருக்கும் என்று கூறினார். 'SAT' வலைதளத்தில் காணப்படும் பயனுள்ள குறிப்புகளைப் பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் பேசிய பேரா. பரூக் மிஸ்திரி பள்ளியில் படிக்கும்போதே, மிக அதிகமாக 'AP Courses' எடுக்கும்படி அறிவுரை கூறினார். படிப்பு மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் ஆர்வம் காட்டும் மாணவர்களே தாம் விரும்பிய கல்லூரிகளுக்குச் செல்வர் என்று அறிவுரை கூறினார். 'PSAT' என்கிற தேர்வைப் பத்தாம் வகுப்புக்கு முன்பே எழுத வேண்டும் என்று அறிவுரை கூறினார். மிஸ்திரி அவர்கள், மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே, தமக்குப் பிடித்த 10 கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எப்படி அணுகுவது, என்பதைத் அறிந்து திட்டமிடுவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். கல்லூரியில் முதல் ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும் என்றும், அதனை வெற்றிகரமாக முடித்தால் அடுத்துவரும் ஆண்டுகளில் நன்றாகப் படிப்பார்கள் என்றும் கூறினார்.
ஜெனிபர் கொடீமோ தாமஸ், ரீஜென்ஸ் கல்விக் கடனுதவி அலுவலகத்தில் பணிபுரிபவர். கல்லூரிக் கல்விக்கான பலவகைக் கடனுதவிகள் இருப்பதை விளக்கினார். தேவையானால் 'FAFABA' என்ற பெடரல் கடனுதவியை அணுகும்படிக் கூறினார். பெற்றோர்கள் தரும் பண உதவி போதாத நிலையில், பலவித நிறுவனங்கள் கடனுதவி அளிக்கக்கூடும் என்றும் கூறினார்.
கடைசியாகப் பேசிய ராஜேஷ் குரூப், இந்திய அமெரிக்க நிறுவனம் (iasf.org) மாணவர்களுக்கு 1500 முதல் 2500 டாலர்வரை உதவி வழங்கி வருவதாகக் கூறினார். தேர்வெண் அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் இவ்வுதவி வழங்கப்படுவதாகக் கூறினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோரும் மாணவர்களும் அது மிகப் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினர். கிரேடர் அட்லாண்டா சங்கத்தைச் சேர்ந்த அசோக் குமார் நன்றி கூற, நிகழ்ச்சி முடிவடைந்தது.
அஞ்சலி குமார், லதா பஞ்சாப் |