பிரீதி கண்ணன் நடன அரங்கேற்றம்
செப்டம்பர் 16, 2007 அன்று லாஸ் ஏஞ்சலஸ் சக்தி நடனக் குழுமத்தின் மாணவியான பிரீதி கண்ணனின் நடன அரங்கேற்றம் ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் அரங்கத்தில் நடைபெற்றது. ஆகாயத்தில் கருடன் மீது ஆரோகணித்திருந்த ஸ்ரீ மகா விஷ்ணுவின் தாமரைப் பாதங்களைக் கண்ணுற்றதும் பரவசமடைந்த பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்துடன் தொடங்கியது பிரீதியின் நடனக் கச்சேரி. அன்னமாச்சாரியாரின் குறிஞ்சி ராக க்ருதியான 'நீராஜனம்' பாட்டில் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சங்கையும், சக்கரத்தையும் குறிப்பிட்டிருந்தது அபூர்வமாக இருந்தது.

ஸ்ரீ மஹேஷ் ஸ்வாமி இயற்றிய ராமப்ரியா ராக வர்ணம் அசோகவன சீதையின் நினைவுகளைச் சித்திரித்தது. இதற்கு குரு விஜி ப்ராகஷ் விதவிதமான ஜதிகளை அமைத்திருந்தார். ஸ்ரீவத்ஸா மிக அருமையாக இதைப் பாட, அதற்கேற்றவாறு ஆடிய பிரீதியின் நடனம் மறக்க முடியாதது.

அம்ருத வர்ஷிணி ராகத்தில் தேவியைப் பற்றியும், கமாஸ் ராகத்தில் சிவனைப் பற்றியும் ஆடிய பதங்கள் ஜோர். தவிர குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் கண்ணனைப் பற்றிய பாடலுக்கு நாயக நாயகி பாவத்தை அற்புதமாகச் சித்திரித்தார்.

தில்லானாவில் வேதகிருஷ்ணனின் மிருதங்கத்துக்கு சுத்த நிருத்தம் ஆடிய அழகு வியக்க வைத்தது. ப்ருகா பாசல் என்பவரின் பயிற்சியில் கற்றுத் தேர்ந்த அபிநய பாவங்கள் ரொம்பவும் அற்புதம்.

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com