செப்டம்பர் 23, 2007 அன்று ப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரியின் ஸ்மித் சென்டர் அரங்கில் சவிதா செந்தில் அவர்களின் குச்சிபுடி நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் குச்சிபுடி ஆர்ட் சென்டரின் (ப்ளெசன்டன்) மாணவி.
இறைவந்தனம், குரு, அவையோர் வந்தனம் ராகமாலிகை ஸ்லோகத்தில் ஆரம்பித்தது. பின் ஹம்சத்வனி ராகத்தில் 'கஜவதனா' (ஹம்சத்வனி) என்னும் புரந்தரதாசர் பாடலுக்குத் துதிக்கையோடு பாசங்குசம் தாங்கி யானைமுகன் நடந்து வருவதைச் சித்தரித்த விதம் சிறப்பு.
'அக்ரே பச்யாமி' என்னும் நாராயணீய ஸ்லோகத்துக்கும் சதாசிவ பிரம்மேந்திரரின் சாமா ராகப் பாடலின் அனு பல்லவியில் 'மதசிகிபிஞ்ச அலங்கிருத சிகுரே' எனும் இடத்திலும் உருக்கமான பாடலுக்கேற்பக் காண்பித்த முகபாவங்கள் மிகவும் நன்றாக இருந்தன. பின் ஆதிசங்கரரின் சிவாஷ்டகத்தில் பரமசிவனுடைய சிரஸில் இருந்து கங்கை பொழிவதையும் கையில் உடுக்கை, கழுத்தில் மண்டை ஓடு, பாம்புடன் பாவங்களை அழிப்பவன் என்பதைத் தனது கண்களில் உணர்வுகளைப் பிரதிபலித்தும் சிறந்த முகபாவம், கால்களில் சிறந்த தாளக்கட்டுடனும் சித்திரித்து மெய்சிலிர்க்க வைத்தார்.
அரசவையில் ஆளும் பழமை பொருந்திய 'தர்பார் ந்ருதய'த்தில் திருமதி சுதா ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆறு பாடலில் ஒவ்வொரு ராகம் முடிந்த பின்னும் சிறந்த நட்டுவாங்கத்துக்கு ஏற்றபடி ஆடியதும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் புஷ்பாஞ்சலி செய்ததும் நிறைவாக இருந்ததோடு அதில் மாணவியின் சிறந்த பயற்சி பளிச்சிட்டது.
அடுத்து நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணியிலிருந்து எடுக்கப்பட்ட 'பாலகோபால' (மோகனம்) பாடலுக்கு தாம்பாளத்தின் விளிம்பில் இரு பாதங்களையும் வைத்துக் கொண்டு தலையில் தண்ணீர் செம்புடன் பாலன்ஸ் செய்து ஆடியது குச்சிபுடி நாட்டியத்தின் சிறப்பு அம்சம். ஆரம்பத்தில் 'கஸ்தூரி திலகே' எனும் ஸ்லோகத்துக்கும் பின்வந்த பாடலுக்கும் மாணவி சவிதா கால்களில் தாம்பாளத்துடன் தாளத்திற்கேற்ப இடது, வலது கால், பின் இரு கால்களும் சேர்ந்தவாறும் துரிதமான தாளத்துக்கேற்றவாறு பாலகிருஷ்ணனின் லீலைகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய விதம் கண்ணைக் கவர்ந்தது. தில்லானாவுடன் திருப்திகரமாக நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
குரு சுனிதா பென்டெகண்டி அவர்கள் சிறப்பான, கடினமான பயிற்சியை மாணவிக்கு அளித்திருக்கிறார். மாணவியின் திறமை குருவின் பெருமையாகும்.
குரு சுனிதா (நட்டுவாங்கம்), ஸ்ரீகாந்த் (இன்னிசை), ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன் (வயலின்), ரவிசங்கர் (மிருதங்கம்), ரமண் கல்யாண் (புல்லாங்குழல்) யாவரும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.
சீதா துரைராஜ் |