அக்டோபர் 9, 2007 அன்று டாக்டர் கோபாலி அவர்கள் நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறை ஒன்றை சிட்டி நூலக அரங்கத்தில் ஏற்பாடு செய்தனர். வளைகுடாப் பகுதியின் தமிழ்ப் பண்பலை வானொலியான இட்ஸ் டி·ப் வானொலியும், வளைகுடாப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ்க் கலை அமைப்பான பாரதி தமிழ்ச் சங்கமும் இதனை இணைந்து வழங்கினர்.
டாக்டர் கோபாலி இந்திய நாடக உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆ·ப் டிராமாவில் நாடகப் பயிற்சி பெற்றவர். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழ் நாடக உலகில் முக்கிய பங்களிப்புச் செய்து வருகிறார். டெல்லி, புனே, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களிலுள்ள நடிப்புக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். நஸ்ரூதீன் ஷா, ரஜினிகாந்த், கிரீஷ் கர்நாட், சிரஞ்சீவி போன்றோருக்கு நடிப்புப் பயிற்றியிருக்கிறார். சித்திரம் பேசுதடி நரேன், அபர்ணா போன்றோரும் கோபாலியிடம் பயின்றவர்களே. ஐந்நூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியும், உருவாக்கியும் அளித்துள்ளார். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் பெரும்பாலான டாக்குமெண்டரிகளையும், டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு போன்ற பிரபல நாடகங்களையும் இயக்கியுள்ளார். அக்ரஹாரத்தில் கழுதை, உன்னைப் போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் கலை இயக்குனராகவும், நடிகராகவும் பணிபுரிந்துள்ளார். பாலுமகேந்திரா தொடங்க உள்ள நடிப்புப் பள்ளியின் இயக்குனராகச் செயல்பட உள்ளார்.
தன்னை அறிமுகம் செய்து கொண்ட கோபாலி நடிப்புக்கு அடிப்படைத் தேவைகள் நல்ல உடல்வளம் மற்றும் அருமையான குரல்வளம் என்பதை விளக்கினார். அவற்றை வளர்த்துக் கொள்ள சில எளிய மூச்சு மற்றும் உடல் பயிற்சிகளைக் கற்பித்தார். பங்கு கொண்ட ஒருவரின் அனுபவத்தைத் தேர்ந்தெடுத்து அதை ஒரு கதை வடிவில் சொல்ல ஒவ்வொருவருக்கும் பயிற்றினார். பின்னர் அதையே ஒரு நாடக வடிவில் எப்படிக் கொணர்வது என்பதை விளக்கினார். பின்னர் அதே கதையை நாடகமாக மாற்றிப் பங்கு கொண்டவர்களை நடிக்க வைத்தார். அது எப்படி மேடை நாடகமாக்கப்பட வேண்டும் என்பதையும் நடிகர்களின் நடிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அந்த மேடை நாடகத்துத் தேவையான ஒலி, ஒளி, மேடை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். கலந்து கொண்டோர் ஒவ்வொருவரையும் ஒரு காட்சியை நடிக்கச் சொல்லி பின்னர் அதில் இருந்த குறைநிறைகளைத் திருத்தித் தானே நடித்தும் காண்பித்தார். நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் நாடகக் கலையின் பல்வேறு கூறுகளை விளக்கிக் காண்பித்தார்.
பிரபல நடிகர்கள் பலருக்கு நடிப்புக் கலை சொல்லிக் கொடுத்த அவர் தன் அனுபவத்தை வளைகுடாப் பகுதி நாடக ஆர்வலர்களுடன் இலவசமாகப் பகிர்ந்து கொண்ட அவரது பெருந்தன்மை குறிப்பிடத் தக்கது.
வளைகுடாப் பகுதிக்கு வருகைதரும் கலைஞர்களையும், அறிஞர்களையும் கொண்டு பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் ஏற்பாடு செய்யவுள்ளதாக பாரதி தமிழ்ச் சங்க அமைப்பாளர் கோவிந்தராஜன் தனது நன்றி உரையில் தெரிவித்தார்.
ச.திருமலைராஜன் |