நவம்பர் 2007 : வாசகர் கடிதம்
தமிழ் ஆன்லைன் தென்றலை எனது நெருங்கிய தோழி அறிமுகப்படுத்தினாள். இவ்வளவு நாட்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என வருந்தினேன்.

தமிழில் மிக அற்புதமான வடிவமைப்புடன், மிகச் சிறப்பான படங்களுடன், முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளுடன் சிறப்பாக வெளிவரும் தென்றலுக்கு எனது பாராட்டுக்கள். எனது தோழர், தோழியருக்கும் தென்றலை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

அக்டோபர் 2007 இதழில் 'சுசிந்திரம் ஒரு கலைக்கூடம்' கட்டுரையில் அலர்மேலு ரிஷி அருமையான பல தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அழகாக வெளியிட்டுள்ளார். மாயாபஜார் சமைக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண போட்டோவை அழகாக வெளியிட்டுள்ளீர்கள்.

E-zine வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள். தொடரட்டும் இது போன்ற புதுமையான முயற்சிகள்.

'வாபக' கட்டுரையில் உயிர்மெய் எழுத்துக்கள் 226 என்று தவறாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழ் கற்பவர்களுக்குச் சிறிய படங்களுடன் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அ. அறிவுசுடர், பிலிப்பைன்ஸ்

******


தென்றல் (செப்டம்பர் 2007) இதழில் டாக்டர் என். சுவாமிநாதன் எழுதிய 'ரசனை' சிறுகதையை மிகவும் ரசித்தேன்.

ஒரு விளையாட்டுப் போட்டியில் பின்தங்கிய அணி ஒன்று வெற்றி பெற்றதைப் போன்ற திருப்தியை அது அளித்தது. (இதில் ஒரு மேலாண்மைப் பாடம் ஒன்றும் இருக்கிறதோ). எனது பாராட்டுகளை கதாசிரியருக்குத் தெரிவிக்கவும்.

டாக்டர் வாஞ்சிநாதன்

******


சொந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுள் நானும் ஒருவள். நண்பர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, முதன்முறையாகத் தென்றல் இணைய தளத்துக்குச் சென்று பார்த்தேன். செப்டம்பர் இதழ் அருமை.

எங்கள் வீட்டிலோ ஒரே போட்டி, எழுத்தாளர் பற்றிய விவரங்களும், அவர்கள் எழுதியுள்ள ஒரு கதையையும் வெளியிட்டு வருவது அருமையாக உள்ளது. பெண்களைக் கவர்ந்திழுக்கும் மாயாபஜார் பகுதி பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரே அல்வா தான் போங்கள்! சூடான, சுவையான சினிமா செய்திகளை வடிவமைத்துள்ள விதம் மற்றும் அதற்குரிய படங்கள் அசத்தலாக உள்ளன. முத்தாய்ப்பாக அனைத்துப் பகுதிகளும் படிக்கத் தூண்டுகின்றன.

ஆனால்... சில குறைகள். 'சிரிக்க சிரிக்க' மற்றும் 'ஜோக்ஸ்' பகுதி வெறுப்படையச் செய்கின்றன தொடர்ந்து தென்றலுக்கு வந்து படித்து பரவசமடையக் காத்திருக்கிறேன்.

சண்முகி, மலேசியா

******


தென்றல் அக்டோபர் 07 இதழில் தமிழறிவோம் 'வா.ப.க.' கட்டுரை தமிழை கற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது சிறியவர்களுக்கும் அருமையான பகுதி. குறுக்கெழுத்துப் போட்டியை வாஞ்சி நாதன் வழக்கம் போல அருமையாக வடிவமைத்துள்ளார்.

முன்னோடியில் செய்குத்தம்பிப் பாவலர் பற்றிய செய்திகளை மதுசூதனன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. தொடரட்டும் அவரது முன்னோடிகள்.

பா. தமிழ்வேந்தன், மலேசியா

******


சித்ரா வைத்தீஸ்வரன், நலம் வாழ, கேடிஸ்ரீயின் 'நவராத்திரி' பரிமளிக்கின்றன. சென்னை தண்ணீர் விஷயமாக சற்று விரிவாக எழுதியிருக்கிறீர்கள். மக்கள் இனியும் கஷ்டப்படக்கூடாது என்கிற ஒரே எண்ணத்தில் ஸ்ரீ சாயிபாபா அவர்கள் மனமுவந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடுகளைத் தான் செய்யப் போவதாகவும் அதற்கான செலவைத் தன் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளுவதாகவும் தமிழ்நாட்டு முதல்வரிடம் சொல்லிவிட்டார். இம்மாபெரும் திட்டத்தைக் கொண்டுவரும் ஸ்ரீ சாயிபாபா அவர்களுக்குச் சென்னை வாசிகள் அஞ்சலி செலுத்த வேண்டும்.

அட்லாண்டா ராஜன்

******


குறுக்கெழுத்துப்புதிர் பற்றிய வாசகர் கடிதங்கள்

நான் அண்மைக் காலமாகத் தென்றல் குறுக்கெழுத்துப் புதிரை கவனித்து வருகிறேன். அது மிக கெட்டிக்காரத் தனமாகவும், நுணுக்கமாகவும் எழுதப்படுகிறது. சில ஆங்கிலப் பத்திரிகைகளின் குறுக்கெழுத்துப் புதிருக்கு என் கணவர் மிகவும் விசிறி. நான் உங்கள் புதிர்களை விரைந்து விடுவித்தாலும் விடையை அனுப்பியதில்லை. எனது விடைகள் சரியாக இருந்தால் 'புதிர் அரசி' என்று அழைக்கப்பட விரும்புகிறேன்.

ஹேமா

******


ஒவ்வொரு தென்றல் இதழிலும் குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க எடுத்துக் கொள்ளும் இரண்டு மூன்று மணிநேரம் மிகச் சந்தோஷமாகக் கழிகிறது. இந்த மகிழ்ச்சியை மாதாமாதம் எனக்குத் தரும் உங்களுக்கு மிகவும் நன்றி.

லக்ஷ்மி சங்கர், நார்கிராஸ், கிரேடர் அட்லாண்டா.

******


தென்றல் மே இதழில் குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க முற்பட்டேன். அதன் காரணமாக வலையகத்தில் இருந்து தில்லையாடி வள்ளியம்மை, நமது தேசியக் கொடியின் வரலாறு ஆகியவை பற்றி அறிந்துகொண்டேன். நன்றி.

எம். முத்துசுப்பிரமணியம், அட்லாண்டா மெட்ரோ

******


இணையத்தில் தென்றல் கிடைப்பதை அறிந்தேன். அதில் இருக்கும் பழைய குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்தேன். எனக்குச் சொல்விளையாட்டு மிகவும் பிடிக்கும். தமிழ்மொழி குறுக்கெழுத்துப் புதிருக்கு இவ்வளவு வாகானது என்பதை உணர்ந்தேன். உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது.

ரங்கா

© TamilOnline.com