தமிழகத்தைச் சேர்ந்தவர் மேஜர் ரகுராமன். ராணுவ மேஜர் பொறுப்பில் இருந்த இவர், காஷ்மீர் பயங்கரவாதிகளை ஒழிக்கும் படையில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மேஜர் கவுரவ் நேகி தலைமையில் இவர்கள் குழு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது சகவீரர்களில் ஒருவரான வினய் என்பவர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டார். அவரை மேஜர் ரகுராமன் காப்பாற்ற முனைந்தபோது தீவிரவாதிகளின் குண்டு அவரது மார்பைத் துளைத்தது. அந்த நிலையிலும் சகவீரர்களை நோக்கி 'அவர்கள் ஒருவரையும் விடாதீர்கள். நமக்கு வெற்றி நிச்சயம்' என்று ஊக்குவித்தவாறே உயிர் துறந்தார் மேஜர் ரகுராமன். சகவீரரும் தனது நெருங்கிய நண்பருமான வினயைக் காப்பாற்ற முனைந்ததாலேயே மேஜர் ரகுராமன் தனது உயிர்துறக்க நேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. வீரர் வினய் ஹைதராபாதைச் சேர்ந்தவர். திருமணமாகாத இளைஞர். அக்டோபர் மாத இறுதியில் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ரகுராமனின் மனைவி லதாவுக்கு இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்க உள்ளது. மேஜர் ரகுராமனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் முன்னாள் ராணுவ வீரர்தான். தனது மகன் நாட்டுக்காக உயிரைக் கொடுத்தது பற்றிப் பெருமைப்படும் கிருஷ்ணமூர்த்தி, தனக்குப் பிறக்கும் பேரனையும் ஒரு சிறந்த ராணுவ வீரனாக்குவதுதான் தனது லட்சியம் என்கிறார். இந்திய இளைஞர்களுக்கு இந்த லட்சிய வீரர்களும் லட்சியத் தந்தையும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
அரவிந்த் |