'நியூஸ்வீக்'கில் மாயாவதி
பலவகை இன்னல்களுக்கும் நடுவே முன்னேறியுள்ள உலகின் முதல் எட்டுப் பெண்மணிகளில் ஒருவர் என உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதியை வர்ணித்திருக்கிறது 'நியூஸ்வீக்'. தலித்துகள் முதல் இஸ்லாமியர், அந்தணர்வரை அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிப் பெற்ற அவரது வானவில் வெற்றி இந்தியாவில் ஓர் அற்புதம் எனக் கருதப்படுகிறது. 'இதைப் பிற மாநிலங்களிலும் செய்து காட்டுவேன். டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது என் இறுதி லட்சியம்' என்கிறார் இந்தத் தீக்கனல் பெண்மணி. இதற்கு முன் இந்திரா காந்தி, கோல்டா மெயர் போன்றோரை இந்தப் பட்டியல் கொண்டிருந்தது என்பது நினைவுகூரத் தக்கது. 'தாம் முன்னேறும் போது ஆண்களைப் போல, ஏன், அவர்களை விடவும், பெண்கள் மிகக் கடுமையானவர்களாக இருக்கிறார்கள்' என்கிறது நியூஸ்வீக்.

உண்மைதான். ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அதிரடி செய்வது வாடிக்கையாகிப் போய் விட்டது மாயாவதிக்கு. அண்மையில் 20 ஆயிரம் காவல் துறைப் பணியாளர்களைப் பதவி நீக்கம் செய்ததன் மூலம், இரும்புக் கரம் கொண்டவராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் மாயாவதி. காரணம், அவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் முலயாம் சிங் யாதவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது மட்டுமல்ல, யாதவ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தான். இந்தத் தகுதியற்ற தேர்வு முறைக்குக் காரணமாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் மாயாவதி.

அரவிந்த்

© TamilOnline.com