'சாரப்பள்ளம் சாமுண்டி' கலைஞர் கருணாநிதி எழுதிய சிறுகதை இது. இது தற்போது 'உளியின் ஓசை' என்ற பெயரில் திரைப்படமாகிறது. திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவது இளவேனில். வினீத், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா உட்படப் பலர் நடிக்கும் இத்திரைப்படத்துக்கு இசை இளையராஜா. 'மனோகரா'வுக்குப் பிறகு கருணாநிதியின் கைவண்ணத்தில் தயாராகும் சரித்திரப்படம் இது. ஒரு சிற்பிக்கும் ஒரு நாட்டியப் பெண்மணிக்கும் இடையே ஏற்படும் காதலைச் சொல்லும் இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட கருணாநிதி, தமிழகத்தில் இசைப் பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அது சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
கருணாநிதியின் மற்றொரு படைப்பான தாய் காவியமும் திரைப்படமாகிறது. ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய 'தாய்' நாவலே 'தாய் காவியம்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. அது தற்போது திரைப்படமாக வெளிவர உள்ளது. பிரபல பாடாலாசிரியர் பா. விஜய் நண்பர்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதுடன் முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். படத்தின் திரைக்கதை வசனத்தை கருணாநிதி எழுத, இயக்குவது பாலி ஸ்ரீரங்கம். இசை வித்யா சாகர். பாடல்கள் வாலி.
தொகுப்பு: கேடிஸ்ரீ |