எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு 'திருப்புத்தூர்' என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் காலப்போக்கில் இது மருவி தற்போது திருப்பத்தூர் என்று அறியப்படுகிறது.
ஆலயச் சிறப்பு
இங்கு உறைந்திருக்கும் இறைவன் புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். அன்னை சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்து இறைவனை,
மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்(கு) அருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே
என்று தொழுதேத்தி, தமது திருப்புத்தூர் திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் புகழ்ந்து பாடியுள்ளார்.
சம்பந்தரும்
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த் தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் மையுள் நஞ்சம் மருவும் மிடற்றாரே (திருப்புத்தூர்ப் பதிகம்: 7)
என்று இத்தலத்து இறைவனைத் தொழுது ஏத்தியிருக்கிறார். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில் உமாதேவியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான்.
ஆலய வரலாறு
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது.
இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சன்னதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத் திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இங்கு இருக்கும் பைரவர் சன்னதியும் சிறப்பு வாய்ந்ததாகும். உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் 'ஆதி பைரவர்' என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் ‘யோக பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் இவருக்குச் சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் (பூஜகர், பரிசாரகர் தவிர) அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
மற்ற சிறப்புகள்
இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீ மகாலட்சுமியும், வால்மீகி முனிவரும் தவம் செய்துள்ளனர். அந்த வகையில் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது.
கோயிலுள் உள்ள ஆடல்வல்லானின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ முருகப் பெருமானும் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கின்றார். அவரை,
கருப்புச் சாப னனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரம் .................. செடைக்குட் பூளை மதிய மிதழிவெ ளெருக்குச் சூடி குமர வயலியல் திருப்புத் தூ¡¢ல் மருவி யுறைதரு ...... பெருமாளே
என்றும் அருணகிரிநாதர் திருப்புகழில் புகழ்ந்து பாடியிருக்கிறார். நாவுக்கரசர், சம்பந்தர், அருணகிரிநாதர் போன்றோர் வந்து வழிபட்டிருப்பதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. பாண்டிய மன்னர்கள் பலரும் இத் தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.
தலவிருட்சம் கொன்றை. தீர்த்தங்கள் திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.
இத்தகைய சிறப்பு மிக்க, புராதனமான இந்த ஆலயம், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகில், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் மார்க்கத்தில் உள்ளது. பிள்ளையார்பட்டி செல்பவர்கள் இவ்வாலயத்தையும் தரிசித்து வருதல் சிறப்பு.
அரவிந்த் சுவாமிநாதன் |