ஈழத்து நவீன தமிழிலக்கியப் பரப்பில் 50 வருடங்களுக்கு மேலாகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ். பொன்னுத்துரை. இவர் எஸ்.பொ. என்றே அறியப்படுகிறார். சிறுகதை, நாவல், கட்டுரை, விமரிசனம் போன்ற களங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர். தனக்கென்று ஒரு தனித்துவமான எழுத்து நடையைப் பின்பற்றுபவர்.
1932இல் பிறந்த எஸ்.பொ. தனது பல்கலைக்கழகப் படிப்பைச் சென்னையில் முடித்தார். இலங்கை மட்டக்களப்பில் ஆசிரியராகவும் பாடசாலை அதிபராகவும் பணியாற்றியவர். 1982இல் ஆப்பிரிக்காவின் நைஜீரிய நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். அத்துடன் சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தையும் இயக்கி வருகின்றார்.
தீ, சடங்கு ஆகிய நாவல்களையும் வீ, பூ, அவா என்னும் சிறுகதைத் தொகுதிகளையும் நனவிடைதோய்தல், கீதையின் நிழலில், பெருங்காப்பியம் பத்து ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டாயிரம் பக்கங்களிலான வரலாற்றில் வாழ்தல் என்னும் தன்வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். இந்த ஆண்டு தனது பவளவிழாவைக் கொண்டாடுகின்றார்.
1948இல் எஸ்.பொ.வின் முதல் சிறுகதை வெளியாகியது. 1960களில் ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமாக இயக்கம் கொண்டிருந்தார். இவர் தமிழ்மொழிச் சொல்லாடல்களில் ஒரு புதுமையை வேண்டி நின்றார். அதில் வெற்றியும் பெற்றார். டானியல், டொமினிக் ஜீவா போன்ற சமகாலப் படைப்பாளிகளி லிருந்து முற்றிலும் வேறுபட்ட நடையை, கதை சொல்லலை, இலக்கிய உணர்திறனை தனக்கென உருவாக்கிக் கொண்டார். இன்னொரு விதத்தில் கூறினால் அலங்காரம் சார்ந்த எழுத்து நடையை, மொழிதலை வரித்துக்கொண்டிருந்தார். இது எஸ்.பொ. வுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. நாம் இன்னமும் எஸ்.பொ. நடையை வேறு யாருடைய எழுத்து நடையோடும் ஒப்பிட முடியாமல் உள்ளது.
தமிழ், ஆங்கில இலக்கியங்களிலான பரிச்சயம் தனக்கென இலக்கிய வளத்தைக் கண்டுணர முடிந்தது. இதுவே எழுத்து சார்ந்த செயல்பாட்டில் ஒருவித பரிசோதனை முயற்சியில் ஈடுபடுவதற்கான தன்னம்பிக்கையையும் இவருக்குக் கொடுத்தது. இந்தப் போக்கு ஒருவித மேதாவித்தனத்தையும் இவர் மீது போர்த்தியது. இதனைப் பற்றிப் பிடிக்கும் அவசரக் கோலத்தில் எஸ்.பொ. பல சந்தர்ப்பங்களில் கீழிறங்கியுள்ளார். இதனால் வாத விவாதங்களில் விமரிசன நோக்குகளில் மடைமாற்றம் ஏற்படுத்தும் கருத்தியல் வீச்சு வெளிப்படவில்லை. வெறும் சத்தங்கள்தான் மிஞ்சியுள்ளன. எஸ்.பொ.வுக்கு எதிராக இயங்கியவர்களும் கூட வெறும் சத்தந்தான் போட்டுள்ளார்கள்.
எஸ்.பொ. தன்னை முற்போக்கு, பிற்போக்கு போன்ற முகாம்களுடன் அடையாளப்படுத்தாமல் நற்போக்கு இலக்கியவாதியாகவே பிரகடனம் செய்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் முற்போக்கு அணியோடு தொடர்புகொண்டு பின்னர் அந்த அணியிலிருந்து விலகி நற்போக்கு கண்டவர். இதனால் முற்போக்குகள் பற்றிய விமரிசனத்தை முன்வைத்து வருபவர். தொடர்ந்து இவர் பிரச்சினைக்குரியவராகத் தோற்றமளிப்பவர். எவ்வாறாயினும் இவரது பன்முக ஆளுமையால் ஈழத்து இலக்கியம் பல்வேறு புதிய சலனங்களுக்கு உட்பட்டது. எஸ்.பொ.வைத் தவிர்த்துவிட்டு ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பார்க்கவோ, எழுதவோ முடியாது.
ஏ.ஜே. கனகரட்ணா சொல்வதுபோல் 'படைப்பைப் பற்றியும் படைப்பாளியைப் பற்றியும் ஒருவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் மாறாதவையல்ல. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு படைப்பு ஆழமானதோ அவ்வளவுக்கவ்வளவு கால மாற்றங்களுக்கு ஏற்ப அது புதுப் பரிமாணங்களைக் கொடுக்க வல்லது. சேக்ஸ்பியரின் நாடகங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த உரைகல்லைப் பயன்படுத்தினால் எஸ்.பொ.வின் சில படைப்புக்களேனும் தேறும்' எனக் குறிப்பிடுகிறார். இக்கூற்று ஈண்டு நோக்கத்தக்கது.
எஸ்.பொ.வின் படைப்புலகம் இன்னும் முழுமையான விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படுவதில்லை. மறு வாசிப்புக்கும் உள்ளாக்கப்படவில்லை. இதனால் ஆரம்பத்தில் முற்போக்கு அணியினர் தெரிவித்த அபிப்பிராயங்களை மட்டும் வைத்துக் கொண்டு எஸ்.பொ.வை நாங்கள் அணுக முற்படுவது சரியான அணுகுமுறையாகாது. ஆனால் இதுவரை முற்போக்கு அடைமொழியுடன் நடந்த, நடக்கும் கருத்தாடல்களால் எஸ்.பொ. என்ற பன்முக ஆளுமை கொண்ட கலைஞரை நாம் அடையாளம் காணமுடியாத நெருக்கீடுகள் தோன்றக்கூடாது. ஆனால் எதார்த்தத்தில் இத்தகைய கோளாறுகள் தான் உள்ளன. இருப்பினும் எஸ்.பொ.வின் படைப்பாளுமைக்கேற்ப இவரது இலக்கிய வாழ்வு நிதானமாக இருக்கவில்லை. வன்மம் பாராட்டும் ஒருவித நோய்க்கூறு இவரது திறமையையும் சக்தியையும் வீண்விரயம் செய்துள்ளது. இதனால் படைப்பு என்பதன் மீதான உரையாடல் விமரிசனம் வளர்ச்சியடைவதற்கு மாறாக படைப்பாளி மீதான ஒதுக்கற் பார்வை செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிவிட்டது. இதனால் ஏற்பட்ட இழப்பு எஸ்.பொ.வுக்கு மட்டுமல்ல, ஈழத்து கலை இலக்கிய மரபுச் செழுமைக்கும்தான். இந்தப் பின்னணியைக் கருத்தில் எடுத்துக் கொண்டுதான் நாம் எஸ்.பொ.வை மதிப்பிட வேண்டும்.
டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கம் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிப்பிடித்த கதை சொல்லல் முறைமையிலிருந்து எஸ்.பொ. விலகிச் செல்கிறார். வாழ்க்கைக்கும் மனிதருக்குமான உறவின் அழுத்தமான கூறுகளை அதற்கே உரிய வலிகளுடன் உணர்வுகளுடன் முரண்களுடன் கதையாக்குவதில் மாறுபட்ட தளங்களைத் தேர்ந்தெடுத்தார். அகம் x புறம் என்ற பிரிநிலைத் தன்மைக்குள் அகப்படாமல் எதையும் முழுமையாகப் பார்க்கும் துணிச்சலையும் பார்வைக் கோணத்தையும் வளர்த்துக் கொண்டார். எஸ்.பொ.வின் மனவோட்டம் மொழியின் வழியே கடத்தப்பட்டது. இது மொழிவித்தையின் விளையாட்டாக உருப் பெற்றது. இதுவே எஸ்.பொ.வுக்கான எழுத்துநடையை இனங்காட்டியது.
நாவல், சிறுகதை, குறுநாவல் போன்ற படைப்புக் களங்களில் எஸ்.பொ.வின் தனித்துவ ஆளுமையை எடுத்துச் சொல்லும் படைப்புகள் சில உள்ளன. எஸ்.பொ. தேர்ந்த வாசிப்புக்கு உட்படும்போது இவரது படைப்பாக்கத் திறன், மொழித்திறன், கதைசொல்லும் பண்பு போன்றவற்றில் இழையோடும் தனித்துவங்கள் நமக்கு நன்கு புலப்படும்.
மதுசூதனன் தெ. |