தென்றல் பேசுகிறது
இந்தியரான டாக்டர் ஆர்.கே. பச்சோரியின் திறமான தலைமையின் கீழ் பணியாற்றும் பருவ மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு (Intergovernmental Panel for Climate Change) நோபல் பரிசினை அல் கோருடன் பகிர்ந்துகொண்டுள்ளது உலகெங்கிலுமுள்ள இந்தியர்களை மகிழச் செய்துள்ளது. ஏப்ரல் 2007 இதழில் பேரா. ராமநாதன் அவர்கள் பச்சோரியின் பணிகளைப் பாராட்டிக் கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது. அவரைப் பற்றி விவரமான செய்திக் குறிப்பு இந்த இதழில் உள்ளது. அதுமட்டுமல்ல, சதுரங்கத்தில் உலக சாம்பியன் இடத்தைப் பிடித்திருக்கும் விஸ்வநாதன் ஆனந்த், விஜய் வைத்தீஸ்வரன், சிந்தூரி, பாபி ஜிண்டால் என்று பல துறைகளில் தமது தடத்தைப் பதித்துவரும் இந்தியர்களைப் பற்றிய செய்திகளையும் தென்றலின் இந்த இதழ் தாங்கி வருகிறது.

ஏழைநாடு என்பதை மிக நாசூக்காக 'மூன்றாம் உலக நாடு' என்று சொல்வது வழக்கம். இந்தப் பட்டியலில் நெடுநாட்களாகக் கிடந்து உழன்று வந்த இந்தியாவில் இன்று உலகின் மிகப்பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி இருக்கிறார்! ஆண்டுக்குத் தெ¡ழில்வளர்ச்சி 10 சதவீதம், மூன்று அல்லது நான்கு சந்தை நாட்களுக்கு ஒருமுறை 1000 புள்ளிகள் தாண்டிக் குதிக்கும் பங்குச் சந்தைக் குறியீட்டெண் சென்ஸெக்ஸ், டாலரை அச்சுறுத்தும் அளவுக்கு வலுவடையும் ரூபாய் என்று விந்தைகளின் கூடாரமாக இந்தியா மாறி வருகிறது. ரிலையன்ஸின் முகேஷ் இந்தப் பின்னணியில் தான் பில் கேட்ஸ், வாரன் ப·பெட் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். இது குறித்த ஒரு செய்தித்தாள் தலைப்பு மிகச் சுவாரஸ்யமானது: 'Mukesh shows Bill the Gates'!

இந்த இதழ் சிறுகதை மலராக வெளிவருகிறது. மலருக்குத் தேர்வு பெற்ற கதைகளின் பட்டியல் இந்த இதழில் வெளியாகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த முத்தான சிறுகதைகளும் இதில் இடம் பெறுகின்றன. சஞ்சிகைகள் சிறுகதைகளைத் தீண்டத் தகாதவையாக ஒதுக்கிவிட்ட இந்த நேரத்தில், தென்றல் இந்த முக்கியமான இலக்கிய வடிவத்தை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறது. தொடர்ந்து தென்றலில் தரமான சிறுகதைகளைப் பிரசுரித்தே வந்திருக்கிறோம். அதிலும், யார் எழுதியது என்று கவலை கொள்ளாமல், எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை மட்டுமே பார்க்கும் தென்றலின் பார்வை உங்களுக்குத் தெரிந்ததுதான். 'என் சகோதரரின் கதை தேர்வு பெற்றிருக்கிறதா? தென்றலில் முதல் மூன்று இடத்துக்குள் சிறுகதை தேர்வு பெறுவது ஹார்வார்டில் சட்டப்படிப்புக்குத் தேர்வு பெறுவது போல' என்று பெருமை பொங்க எங்களுக்கு எழுதினார் ஹ¥ஸ்டன் மோகன் அவர்களின் சகோதரி மாலா பத்மநாபன். தென்றலை வாசகர்கள் இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருப்பது எங்கள் முயற்சிகளின் வெற்றியை உறுதி செய்கிறது. இந்த இதழோடு தென்றல் தனது தமிழ்ப் பயணத்தில் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மிகவும் நிறைவான பயணம்தான் இது. வட அமெரிக்கத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக மட்டும் அமையாமல், இங்கிருக்கும் தமிழ் மக்களின் படைப்பார்வத்துக்கு ஓர் மேடையாகவும், சாதனைகளை அறிவிக்கும் பறையாகவும், ஒருவர் மற்றொருவரைப் பார்த்துச் சாதிக்க உற்சாகம் பெற¨வக்கும் தூதுவனாகவும் மிகத் திறம்படச் செயல்பட்டு வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இங்குள்ள தமிழர்கள் கலை, பண்பாடு, படைப்பாற்றல் இன்ன பிற துறைகளில் தமிழகத்துத் தமிழருக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற உண்மையையும் தொடர்ந்து எடுத்துக்காட்டி வந்துள்ளது. அதற்காகத் தென்றல் பெருமிதம் கொள்கிறது.

தீபாவளி வந்துவிட்டது. மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் எங்கும் காணப்படுகின்றன. இந்தத் தருணத்தில் அன்பு, கருணை, தியாகம் ஆகிய உயர்ந்த பண்புகளை மீண்டும் வாழ்வில் முக்கியமான இடத்துக்குக் கொண்டு வருவோம். அவைதாம் உலகைச் சொர்க்கமாக்கும் மந்திரங்கள். ஏனைய சாதனைகளை இவை அர்த்தமுள்ளதாக்கும்.

எல்லோருக்கும் தீபாவளி, நன்றிநவிலல் நாள் வாழ்த்துக்கள்!


நவம்பர் 2007

© TamilOnline.com