அமெரிக்காவிலும் பெண்கள் கொலு வைக்கிறார்கள்! எனக்கேற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. காரணம் தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் ஆடம்பரமோ அமர்க்களமோ எதுவுமின்றி ஒரு சடங்காக ஆகிக் கொண்டுவரும் இந்தக் கொலு இங்கு அமெரிக்காவில் விமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் கண்டபோது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்திய கண்டத்தின் தென்பகுதியில் 'நவராத்திரி' என்ற பெயரில் மலைமகள், அலைமகள், கலைமகள் என்ற முத்தேவியருக்கும் வழிபாடு செய்யும் மதச்சார்புடைய ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் தசரா என்ற பெயரில் அதர்மம் என்ற அரக்கனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளைப் பொறுத்த வரை ஆடை ஆபரண அலங்காரங்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு விழா. இவ்வாறு கலாச்சார அடிப்படையிலும், மதச்சார்பாகவும், கேளிக்கையுடன் கூடியதாயும், இந்துக் குடும்பங்களின் பண்பாட்டின் அடையாளமாகவும் அமைந்துள்ள சிறப்பான ஒரு விழாவாகும்.
இத்தகைய காட்சியைக் காணும் போது நவராத்திரிப் பண்டிகையில் வைக்கின்ற கொலு, மதநல்லிணக்கமாக, மனித நேயத்திற்கு அடையாளமாக சர்வசமயக் கொள்கைக்கு வித்தாக அமைவதை உணர முடிகின்றது.
மிக்சிகனில் நான் சென்று களித்த 'கொலு'க்களில் பூந்தொட்டிகளில் விரிந்து மலர்ந்து நிற்கும் சாமந்திக் கொத்துக்களை நிறைத்து வைத்திருந்தது கண்ணுக்குக் குளிர்ச்சியாயிருந்தது.
எல்லோருடைய வீட்டிலும் அழகிய வர்ணம் தீட்டிய மண்பொம்மைகள் வைத்திருப்பதைப் பார்த்தபோது, இந்தியாவிலிருந்த அதிக கவனத்துடன் பாதுகாப்பாகப் பொம்மைகளை எடுத்துவந்து அலங்கரித்திருப்பதற்காக உண்மையிலேயே அவர்களை வெகுவாகப் பாராட்ட வேண்டும்.
நவராத்திரியின் போது உறவினர்களையும் நண்பர்களையும் மஞ்சள் குங்குமம் பெற்றுச் செல்லுமாறு அழைப்பது மரபு. அவ்வாறு அழைப்பவர்களுக்கும் பெண்கள்; அழைப்பைப் பெறுபவரும் பெண்கள் (ஆண்கள் துணைக்காக வருவதுமுண்டு) வருவபவர்களில் பாடத் தெரிந்தவர்களைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வதும் (?!) உண்டு. வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) இவற்றுடன் சுண்டல் கொடுப்பார்கள்.
நான் சென்ற அமெரிக்க கொலு வீடுகளில் பலவிதமான தின்பண்டங்களைத் தட்டில் வைத்து விருந்தே கொடுத்துவிட்டார்கள். வீட்டிற்கு வெளியே வந்தால் காரில்தான் பயணம் என்பது அமெரிக்க வாழ்க்கையில் இயற்றப்படாத சட்டமாக இருப்பது கொலுவுக்குச் சென்றுவர மிகவும் வசதியாகி விடுகிறது. ஒரே நாளில் நான்கு ஐந்து வீடுகளுக்குச் சென்று வர முடிகிறது. (வயிற்றில் தான் சிற்றுண்டிக்கு இடம் இருப்பதில்லை. கையில் வாங்கிக் கொண்டும் வரலாம்.)
இதைப் பற்றி குறிப்பிடும் நேரத்தில் என்னை அறியாமல் என் மனம் சென்னையை எண்ணிப் பார்க்கிறது. பெரிய கொலுவை எல்லோருமே கண்டுகளிக்கக் கூடிய இடம் 'காதி கிராமமோத்யோக் பவன்' அல்லது கோவில் கடைகளில் காணும் பொம்மைக் கடை மட்டுமே காரணம், தனிவீடுகள் என்பதெல்லாம் போய் ·ப்ளாட்டில் இருப்பவர்களுக்குக் கொலு வைக்க இடமேது? கொலு வைத்தாலும் வருகின்ற விருந்தினரை உட்கார வைக்க இடம்? கொலுவும் வைத்து, அழைப்பு விடுத்தாலும் மாலை நேரங்களில் ஊரின் ஒரு கோடியிலிருந்த இன்னொரு கோடிக்கு அரசு ஊர்தியில் பயணித்துச் சென்று வர நேரமேது? சக்தியிருந்தும் இதனால் தான் ஆடம்பரக் கொலுவும், அழைப்பு அனுப்பிக் கோலாகலமாய்க் கொண்டாடும் மரபும் குறைந்து கொண்டே வருகின்றது என்பது சற்று வேதனையாக இருக்கிறது.
மிக்சிகனில் கொலுவைக் கண்டுகளித்த நான் ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து தாய்நாட்டிலிருந்து பிரிந்து அமெரிக்க மண்ணில் வசதிகள் நிரம்பிய வாழ்க்கை நடத்தும் தமிழ்மக்கள் தங்கள் கலாச்சாரத்தை மறக்காமல் நவராத்திரி கொண்டாடும் (வெற்றிலையும் கிடைக்கிறது!!) அழகைப் பார்த்து, அமெரிக்கர் மொழியில் கூறுவதானால் 'வாவ்' என்று மகிழ்ச்சிக் கூவல் விடுத்தேன்.
டாக்டர் அலர்மேலு ரிஷி |