நவம்பர் 2001 : வாசகர் கடிதம்
தென்றலில் வரும் பகுதிகள் யாவுமே தரமானவை. தென்றலின் இனிய தமிழ் நடை, உயர்தரம், என்னை வெகுவாகக் கவர்கிறது. வாசகர்களின் தென்றலாய் வலம்வர, எங்களது கருத்துக்களையும், விருப்பங்களையும் கேட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.

அமெரிக்காவில் வளரும் நமது குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பகுதிகள், தமிழ் கலாசாரம் பற்றிய பகுதிகள் சேர்த்தால் தென்றலின் காற்று மேலும் குளுமையாகவும், இனிமையாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

தரமான தமிழ் 'தென்றல்' மேலும், மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அ.சோ. கோபாலன், கலி·போர்னியா

******


தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற தலைப்பாகைக் கவிஞனின் கருத்திற்கொப்ப,

தமிழ் நெஞ்சங்களுக்காக தென்றலாகத் தவழ்ந்து வரும் அமெரிக்காவின் முதல் தமிழ் பத்திரிக்கையான தென்றல், தமிழிதழ் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் சேவையாக சிறந்து விளங்க வாழ்த்துக்கிறேன். தென்றலைப் படித்துச் சுவைக்கும் தமிழ் உள்ளங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆல்பர்ட் ·பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா

******


அக்டோபர் தென்றல் இதழில் வெளிவந்துள்ள டாக்டர். என். சுவாமிநாதன் எழுதியுள்ள 'சாட்சி' என்ற சிறுகதையைப் படித்தபோது அவர் என் எதிரில் இருந்தால் நான் அவருடைய கைகளைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டி அதன்மூலம் குறைந்தது ஒருவாரம் அவருடைய தோள்களை வலிக்கச் செய்திருப்பேன். பொதுக்கழிப்பறையும் இலவசக் கோவணமும் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் சுருட்டிய அரசியல்வாதிகளின் வாதங்கள் என்னை வயிறு குலுங்க, வாய்வலிக்கச் சிரிக்க வைத்ததுதான் காரணம். இன்றைய தமிழக அரசியலின் வாடை அப்படியே வீசியிருகூகிறது. பாராட்டுக்கள்......

டாக்டர் அலர்மேலு ரிஷி

******

© TamilOnline.com