உள்ளாட்சி தேர்தல் வன்முறையின் முத்திரை
உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்களுடன் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த அதிர்ச்சி இவர்களுக்கு மட்டுமல்ல பாமாகவுக்கும் பேரிடியாகவும் உள்ளது. பொதுவில் உள்ளாட்சி தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்கும் சில படிப்பினைகளை அனுபவங்களை கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால், அரசியல்வாதிகளுக்கு வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதென்பது கசப்பானதாகும்.

கிராமப்புறங்களில் அதிமுகவுக்கும், நகரங்களில் திமுகவுக்கும் பலம் அதிகம் என்ற பொதுவான கணிப்பை இத்தேர்தல் முடிவு பொய்ப்பித்துள்ளது. கிராமங்களில் திமுக கணிசமான வாக்குகள் வென்றுள்ளது. நகரபுறங்களில் அதிமுகவும் குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்றுள்ளது.

முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக, திமுக - பாஜகவின் கூட்டுச் சதியே காரணம் என்று அதிமுக பிரச்சாரம் செய்தது. இதனால் அனுதாப அலையை ஏற்படுத்த முடியுமென அதிமுக கணிப்பிட்டது. ஆனால், அவ்வாறான அலை எதுவும் உருவாகவில்லை. இது போல் திமுகவும் கருணாநிதி கைது சம்பவத்தால் அலைவீசும் என்று எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

ஆக, திமுக, அதிமுக இரு கட்சிகளின் எதிர்பார்ப்புக்கும், கணிப்புக்கும் மாறாகத்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட கட்சிகளின் கணிப்புகள், பத்திரிகைகளின் கணிப்புகள் யாவற்றுக்கும் மாறாகவே தேர்தல் முடிவுகள் இருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களின் அரசியல் அதிகாரம் பண்புச் செயற்பாடுகள் வேறுபட்டவையான இருப்பினும் மக்கள் வாக்களித்தல் என்னும் செயற்பாடு பொதுவானது. ஆனால், அவர்களது மனப்போக்கை சரிவர மதிப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. வாக்களிக்கும் செயல்பாட்டில் எத்தகைய பண்புகள் இயங்குகின்றன என்பதனை துல்லியமாக புரிந்து கொள்வதற்கான முயற்சியை அவசரப்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல் முடிவுகளை முழுமையாக அறிவிப்பதிலும் இழுபறிகள் ஏற்பட்டது. சென்னையில் உள்ள வாக்கு என்னுமிடத்தில் நுழைந்து விதிமுறைகளை மீறி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு வாக்குச் சீட்டுகளை மாற்றி முடிவுகளை அறிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இது குறித்து விரிவாக திமுக தலைவர்க கருணாநிதி, மாநில ஆளுநல், தேர்தல் கமிஷனர், டிஜிபி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை நகரில் பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.

ஆக தமிழக உள்ளாட்சித் தேர்தல் இதுவரை சந்திக்காத வன்முறைகளின் துணையுடன் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, வருங்கால ஜனநாயக செயற்பாட்டுக்கு எச்சரிக்கை மணியும் அடித்துள்ளது.

எனவே தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமைகளிலிருந்து மக்கள் விலகிக் கொள்ளும் இடைவெளி அதிகரித்து வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் இதனை நிரூபித்துள்ளன.

ஜனநாயக நடைமுறைகளில் 'தேர்தல்' எனப்து மக்கள் பங்கு கொள்வதற்கான சிறந்த மார்க்கமாகவே இன்று வரை உள்ளது. இது ஓர் உலக பொதுவான உண்மையாகவும் உள்ளது. தமிழகத்தில் அக்.16 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் இதுவரை தமிழகம் சந்திக்காத மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தேர்தலில் கள்ளவாக்கு போடும் கலாச்சாரம் மறைமுகமாகவே எல்லோரது கவனத்துக்கு தெரிந்தே இருந்து வந்துள்ளது. எல்லா கட்சிகளும் இதனை அங்கீரித்தே செயற்பட்டு வந்துள்ளனர். மதியத்துக்குப் பிறகு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்காதவர்களின் பெயர்களைப் பார்த்து, தமக்கு வேண்டிய உற்றார், உறவினர்கள் வாக்குகளை கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் இருந்துதான் வந்தது.

ஆனால் இம்முறை உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சாவடிக்குள் சென்று தேர்தல் அதிகாரிகளை விரட்டி விட்டு தமது கட்சிக்கு சார்பாக வாக்களித்தல் மற்றும் வாக்குச் சீட்டுக்களை வெளியில் எடுத்து வந்த தமக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு மீண்டும் வாக்குச் சாவடிக்குள் கொண்டு செல்லும் நடைமுறை போன்றவை புதிது. இவை அராஜக வழியில் அதிகார ஆளும்கட்சி அரசியல் பலத்துடன் வெளிப்படையாக நடைபெற்றுள்ளது.

வாக்குச் சாவடிக்குள் சென்று கள்ளவாக்கு அளிக்கும் நபர்களை அனைத்து பத்திரிகைகளும் செய்திகளாகவே வெளியிட்டுள்ளன. அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏ. மாவட்ட செயலர், வட்டச் செயலர், தொண்டர் கூட்டம் என கள்ள வாக்களிக்கும் கலாச்சாரத்தில் நேரிடையாகப் பங்கு கொண்டிருப்பது வெளிப்படையானது.

திமுக ஒரு சந்தர்ப்பத்திலும் கள்ளவாக்களிக்கும் கலாச்சாரத்தில் ஈடுபடவில்லை. அது புனிதமான கடசி என்று யாரும் கருதவேண்டாம். மேலும் திமுக தான் தமிழகத்தில் கள்ளவாக்கு போடும் சலாச்சாரத்தை தொடக்கி வைத்தது. ஆகவே இது தவிர்க்க முடியாது என்னும் பாணியில் நாம் கருத்துத் தெரிவித்து சமாதானம் அடைய முடியாது.

ஏனெனில் கள்ள வாக்கு அளிக்கும் கலாச்சாரம் எப்போது தோன்றியது என்பது முக்கியம் அல்ல. மாறாக இன்று தேர்தலில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வுகள், சம்பவங்கள் எதிர்கால ஜனநாயக நடைமுறைக்கு எத்தகைய நெருக்கடியை, சவாலை ஏறூபடுத்தியுள்ளது என்பதுதான் முக்கியம். கள்ள வாக்களிக்கும் நடைமுறையில் ஓர் புதுத் திருப்பம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. அதில் அதிமுக நேரிடையாக பங்கு கொண்டு புதுப்பாதை அமைத்துள்ளது.

இவ்வாறு தேர்தல் காலத்தில் அதிமுக வெளிப்படுத்தியுள்ள கள்ள வாக்களிக்கும் நடைமுறை, எதிர்கால ஜனநாயகத்துக்கு நேர்ந்துள்ள ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனை எந்தவகையிலும் யாரும் நியாயப்படுத்த முடியாது.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்கு போட்டுள்ளனர். வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். அராஜகம் தனது கோரத் தாண்டவத்தை நிகழ்த்தி உள்ளது. ஜனநாயகச் செயற்பாட்டின் பண்பை, அதன் பலத்தையே கலங்கப்படுத்தியுள்ளமை தமிழக வரலாற்றில் ஓர் புதிய தொடக்கம். திராவிட கட்சிகளின் கற்ற வாக்கு பராம்பரியத்தில் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி.

நடந்து முடிந்த தேர்தல் சட்டரீதியான சரத்துகளின் பலவீனத்தை சுட்டிக் காட்டுவதுடன்இந்த முறைமையை மாற்றியமைக்கக கூடிய புதிய அரசியலமைப்பு தேவையை உணர்த்வதாகவும் உள்ளன.

கந்தர்

© TamilOnline.com