கீதாபென்னட் பக்கம்
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் எப்படி இருந்தோம் என்பது பற்றி எழுதியிருந்தேன்.

போனவருடம் பாஸ்டனில் இருக்கும் நியூ இங்கிலாண்ட் தமிழ்ச் சங்கத்தில் என்னை வரவேற்றிருந்தார்கள். அச்சங்கத்தில் பெரிய பங்கை ஏற்றிருக்கும் திருமதி. சாந்தா சாரங்கபாணி நான் அங்கு வருவதற்கு முன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னுடைய கதை ஒன்றை காண்பித்து விட்டுப் பிறகு ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் பேசலாமே என்றும் கருத்து சொன்னார்.

அந்த சமயத்தில் தான் 'வித்தியாசம்' என்ற எனது சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தது. அதனால் அதைப் படித்து காண்பித்து விட்டு அதிலிருந்தே தொடர்ந்து பேச ஆரம்பித்த போது வந்திருந்த நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரு பழைய ஒற்றுமை அனைவரும் தமிழர்கள் என்பதைத் தவிர அமெரிக்காவிலேயே பல வருடங்கள் வாழ்ந்து, குழந்தைகளெல்லாமும் பெரியவர்களாகி இங்கே நமக்கு என்று ஒரு தடம் பதித்துக் கொண்டவர்கள் என்பது தான்.

எங்களது பேச்சு பல தலைப்புகளைத் தொட்டு விட்டு, நான் பேச நினைத்ததிலேயே வந்து நின்றது. கேள்வி இது தான். ''அமெரிக்காவிலேயே வாழும் நமக்கெல்லாம் வயதாகி தள்ளாமை வந்த பிறகு எங்கே இருக்கப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?''

தமிழ்நாட்டில் முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களைத் தான் பார்கக முடியும். மூன்று தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழ்வார்கள். வேலையிலிருந்தும், சமையல் கட்டிலிருந்தும் ரிடையரான தாத்தா, பாட்டி - பேரக் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பார்கள். அடுத்த தலைமுறை சம்பாதிக்கும். சமையல் மற்றும் வீட்டை பராமரிக்கும். இந்தியாவில் இருக்கும் பல குடும்பங்களிலேயே இப்போது கூட்டுக்குடும்பம் இல்லை. அதனால் சமீப காலங்களில் முதிய தலைமுறைகளைப் பராமரிக்க இல்லங்கள் நிறையவே வந்துவிட்டன.

அங்கேயே அப்படி என்றால் நம்மைப் பற்றி கேட்கவே வேண்டாம். இனி இந்தியாவிற்குத் திருமபிப் போவது என்பது நம்மால் இயலாத காரியம். நமக்கு அடுத்த தலைமுறை தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை இங்கேயே அமைத்துக் கொண்டுவிடுவார்கள். தத்தம் குடும்பம் என்று ஏற்பட்டு அவர்களுக்கு அதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும். நமக்கும் முதுமை ஏற்பட்டு நம்மால் சுயமாக எந்த காரியமும் செய்ய இயலாமல் பிறர் கையையே எதிர்பார்க்கும் காலம் வரலாம். அப்போது என்ன செய்யப்போகிறோம் என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே எனக்குத் தோன்றியது.

உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. தினந்தோறும் பாஸ்டா மட்டும் சாப்பிட்டு என்னால் காலம் தள்ள முடியும் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு ·ப்யூஷன் குழுவுடன் யூரோப் நகரங்களில் பயணித்தப்போது நினைத்திருந்தேன். அதுவும் நான் ரொம்பவே கண்டிப்பான வெஜிடேரியன் என்பதால் தினமும் ஸ்பெகடி, தக்காளி சாஸ் மட்டுமே. ஆனால் அதெல்லாம் இரண்டு மாதங்களுக்குத் தான். அதற்குப் பிறகு எனக்கு நாக்கு செத்துப் போய் சாம்பார் ரசம் என்று சாப்பிட வேண்டும் என்ற ஆவல் - இல்லை - வெறியே வந்து விட்டது.

அப்போது தான் அமெரிக்காவில் இருக்கும் முதியவர்களுக்கான நர்ஸிங் ஹோமில் என் கடைசி காலத்தைக் கழிக்க முடியுமா? அங்கே உணவுக்கு என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வி எழுந்தது. அமெரிக்க முதிய இல்லங்களில் கொடுக்கப்படும் சாப்பாட்டை அது வெஜிடேரியனாக இருந்தாலும் கூட எத்தனை நாட்கள் தான் சாப்பிட முடியும்? அதுவும் வயதான காலத்தில் தான் இன்னும் நாக்கு ருசியாக சாப்பிட கேட்குமாம்.

இதை ஒரு முன்னுதாரணத்திற்காக தான் சொன்னேன். சாப்பாட்டைத் தவிர, இன்னும் நிறைய விஷயங்களை நாம் முதுமையில் இழக்க நேரிடலாம். பிறந்த மண்ணைவிட்டு வெளிநாடுகளில் வாழ்கிற முதல் தலைமுறை கொடுக்க வேண்டிய பரிசா இது? இல்லை. வருமுன் காக்கப் போகிறோமா?

விகடனில் பிரசுரமான அந்த சிறுகதையை உங்களில் பலர் ஏற்கனவே படித்திருக்கலாம். அப்படி படிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அதை தென்றல் இணைய தளத்தில் சிறுகதை பகுதியில் படியுங்கள்.

கீதாபென்னட்

© TamilOnline.com