ஹலோ ஹலோ
''ஹலோ சாப்டீங்களா?, 'ஹலோ மேடம் இப்ப மணி எத்தன இருக்கும்?', 'ஹலோ சார் வீட்ல எல்லோரும் செளக்கியமா?', 'ஹலோ பிரதர் பார்த்துப் போகக் கூடாது. இப்படி வந்து இடிச்சுட்டுப் போறீங்களே' என தொடர்ந்து நாம் அறிந்தோ அறியாமலோ தினந்தோறும் 'ஹலோ'வை யாருக்காவது தந்து சொண்டிருக்கிறோம். அல்லது யாரிடமிருந்தாவது பெற்றுக் கொண்டிருக்கிறோம். தீவிரத் தமிழ்ப்பற்றாளர்களைக் கூட விக்கிரமாதித்தனின் தோளில் அமர்ந்த வேதாளம் போல 'ஹலோ'வை யாருக்காவது தந்து கொண்டிருக்கிறோம். அல்லது யாரிடமிருந்தாவது பெற்றுக் கொண்டிருக்கிறோம். தீவிரத் தமிழ்ப் பற்றாளர்களைக் கூட விக்கிரமாதித்தனின் தோளில் அமர்ந்த வேதாளம் போல 'ஹலோ' தொடர்ந்து பீடித்து வருகிறது.

அப்படியே இல்லாமல் 'தாங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று தாய்த் தமிழில் வினவுபவர்கள்கூட தொலைபேசி மணி அடித்ததும், 'ஹலோ சொல்லுங்க நாந்தான் பேசறேன்' என்று ஹலோவுக்குத் தாவி விடுவார்கள். அந்தளவிற்கு ஹலோ நம்முள் நீக்கமற நிறைந்து விட்டது. ஆனால் 'ஹலோ' என்பதற்கு உண்மையான பொருள் என்ன? என்று யாரிடமாவது கோடீஸ்வரன் பாணியில் கேள்வியைக் கேட்டால், டெலிபோனில் கேட்டுக் கொள்ளலாமா என்று தப்பிக்கப் பார்ப்பார்கள். அந்தளவிற்குப் பொருள் தெரியாமலே ஹலோவை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

உண்மையில் ஹலோ என்பதற்கு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது என்பது பொருள் என்று அரும்பொருள் சொல்லகராதிகள் நல்குகின்றன.

எல்லா மொழிகளிலும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள தனித்தனி வார்த்தைகள் இருக்கின்றன. சுக்ரியா, நமஸ்கார், வணக்கம்...... என அவரவர்க்குத் தகுந்தபடி வார்த்தைகளை வார்த்திருக்கிறார்கள். பெளத்தர்கள் தான் எதிலும் வித்தியாசமானவர்கள் ஆயிற்றே! அதனால் அவர்கள் முதன்முதலில் யாரையாவது பார்த்தார்கள் என்றால், 'அறிவு உண்டாகட்டும்' என்றே வாழ்த்துவார்கள்.

இவ்வளவு சரித்திர, புராண முக்கியத்துவம் வாய்ந்த ஹலோவுக்கு விழா எடுக்காமல் விடுவார்களா? எனவே தான் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி 'உலக ஹலோ தினம்' விழா எடுக்கிறார்கள். இந்த விழா 1973-ஆம் வருடத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வருடத்தோடு 29-ஆவது வயது பூத்தியாகிறது இந்தத் தினத்துக்கு. இப்படியாகப்பட்ட இந்த விழாவைக் கொண்டாட விரும்புபவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்தது பத்துப் பேருக்காவது லெட்டர் எழுத வேண்டியது தான்.

இந்த ஹலோ தினத்தின் நோக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று; சக மனிதர்களிடம் நட்புறவைப் பேணுவதன் பொருட்டு கடிதங்கள் எழுதுவது. இரண்டு; தங்களுடைய நாட்டு அரசியல்வாதிகளுக்குச் சமாதானத்தைப் பேணச் சொல்லிக் கடிதம் எழுதுவது. இந்த இரண்டு வகைகளையும் தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியுமா?

சக மனிதனைப் பார்த்து ஹலோ சொல்கிறதுக்கு நம்முடைய கலாச்சாரம் துணை புரிகிறதா? நாம் மிக மிக அரிதாகவே பக்கத்திலுள்ளவர்களுக்கு ஹலோ சொல்கிற§¡ம். நம்மிடம் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லும் முறை தான் உள்ளது. வணக்கம் சொல்வதற்கும் இப்போது அரசியல்வாதிகள் உலை வைத்து விட்டனர். இப்போதெல்லாம் வணக்கம் சொல்பவனைப் பார்த்து 'என்ன அரசியல்வாதியா ஆகுற ஐடியா இருக்கா?' என்ற வஞ்சகமில்¡மல் கேட்கிறார்கள். வணக்கமெல்லாம் என்னவோ வெள்ளையும் சொள்ளையுமாக அலையும் அரசியல்வாதிகளுக்கு உரிய ஒன்றாகவே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் மீறி ஏதாவது திருமண விழாக்களில் மட்டுமே வணக்கம் சொல்பவர்களைப் பார்க்க முடிகிறது.

ஆக, சக மனிதனிடம் நம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்குக் கூட ஏராளமான தடைகள் முன்வந்து நிற்கின்றன. வணக்கம் சொல்வதற்கே இப்படியென்றால், மற்ற நாடுகளைப் போல வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள காதுகளைக் கடித்தால் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. அப்புறம் கடிதம் எழுதுவது. பக்கத்து வீட்டில் உள்ளவனை நேரடியாகப் பார்த்து ஒரு புன்முறுவல் கூட பூக்காதவர்கள் கடிதமா எழுதப் போகிறார்கள். சென்னையிலிருந்து கடைக்கோடி கன்னியாகுமரிக்குப் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து செல்கிறவர்கள் கூட ஒரு சிறு புன்முறுவல் கூட செய்து கொள்வதில்லை. ஆம்னி பஸ்ஸில் அமர்ந்து கொண்டு புதுப் படங்களைப் பார்த்தபடி, பக்கத்தில் ஒரு ஐந்து உட்கார்ந்திருப்பதே தெரியாமல் காட்சிகளில் லயித்திருப்பர். அப்படியே எதாவது பேச விரும்பினாலும், 'நக்மா தங்கச்சிதான சார் இந்தப் பொண்ணு' என்று தான் கேட்டுக் கொள்வார்களே தவிர மறந்தும் கூட 'ஹலோ சார், வணக்கம் சார்' என்று சொல்வதில்லை.

இரண்டாவது: தங்களுடைய நாட்டு அரசியல்வாதிகளுக்குச் சமாதானத்தைப் பேணச் சொல்லிக் கடிதம் எழுதுவது. நம்முடைய அரசியல்வாதிகளுக்குக் கடிதம் என்பதெல்லாம் கிடையாது. அதற்குப் பெயர் 'மனுப் போடுவது எந்தக் காலத்தில் நம்முடைய மனு அரசியல்வாதிகளுக்குச் சென்று சேருகிறது. நாம் மனு போய்ச் சேர்ந்த அடுத்த நொடியில் அது ஒனிக்ஸ் குப்பைத் தொட்டிக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

நம்மவர்களுக்குச் சமாதானத்தைப் பேணச் சொல்லி அறிவுறுத்துவது என்பதெல்லாம் நடக்காத காரியம். அப்பன், பிள்ளை, பேரன். பேரனுக்குப் பிள்ளை எனத் தொடர்ந்து எதிர்கட்சியினருக்கு விரோதிகளாகத்தான் அரசியலில் இருந்து வருகிறார்கள். அதே சமயம் அமெரிக்காவில் எடுத்துக் கொண்டால், இப்போதைய அமெரிக்க அதிபரின் அப்பாவை கிளிண்டன் தேர்தலில் தோற்கடித்தார். ஆனால் இன்று W.புஷ்ஷ¤ம் கிளிண்டனும் சந்தித்துக் கொண்டால் சம்பிரதாயமாகவாவது ஹலோவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இங்கே கதையே வேறு! கலைஞருக்கு எதிரி ஜெயலலிதா என்றால், ஸ்டாலினுக்கும் எதிரி. அவருடைய மகன் உதயநிதிக்கும் எதிரி, அவருடைய மச்சான் மாறனுக்கும் எதிரி என்றளவிலேயே அரசியல் நாகரீகம் மலிந்து கிடக்கிறது. மேயர் கண்டிப்பாக முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்ற நிலையிருந்தும், இதுவரை ஜெயலலிதாவும், ஸ்டாலினுமூ சந்தித்துக் கொள்ளவேயில்லை என்கையில் நம்முடைய அரசியல் நாகரீகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவே தேவையில்லை. மாறாக கேரளாவில் எடுத்துக் கொண்டால், பழைய முதல்வரிடம் போய் புதிய முதல்வர் ஆசி வாங்குகிற கலாச்சாரத்தைத் தொடர்ந்து பேணிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியினர் தான் இப்படியென்றால், ஆளுங்கட்சிக்குள்ளும் கூட போட்டி பொறாமைகள் மலிந்து கிடக்கின்றன. அமெரிக்க அதிபரை அவருடைய சக அமைச்சரான காலின் பாவெல் நாளின் முதலில் சந்தித்தால், 'ஹலோ சார்' என்று சொல்லிவிட்டு அவர் வேலையைக் கவனிக்கப் போய்விடுவார். தமிழகத்தின் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவைச் சந்தித்தால், 'ஹலோ மேடம்' என்று சொல்ல முடியுமா? வெள்ளை வேட்டி, சட்டை அழுக்காகிற அளவுக்கு மண்ணில் புரண்டு எழ வேண்டியிருக்கிறது. (என்னே! தமிழரின் பணிவு மனப்பான்மை)

அரசியல் நாகரீகம் இப்படியிருப்பதை மறந்து விடலாம். மனுப் போடுகிற விசயத்துக்கு வரலாம். நாம் போடுகிற மனுவுக்குப் பதிலாக எதையாவது இந்த அரசியல்வாதிகள் செய்து தந்திருக்கிறார்களா? மக்களிடம் முதல்வர் வாரம் ஒருநாள் நேரடியாக மனுவைப் பெறுவது மரபாகயிருந்தாலும், இப்போது பன்னீர்செல்வம் வந்த பிறகு அந்த மரபைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். இப்படியிருக்கையில் மக்கள் தங்கள் பிரச்சனைகளை எப்படி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வது. அப்படியே மனு போட்டாலும் என்ன நடக்கும் என்பதை விவரிக்க ஒரு நகைச்சுவைத் துணுக்கு இருக்கிறது.

ஒரு பேங்க் அதிகாரியின் வீட்டிற்கு முன்னால், வனத்துறை மரம் நடுவதற்காக ஒரு நாள் ஒரு மரக்கன்றைக் கொண்டு வந்து போட்டிருக்கிறது. நாளாக நாளாக அதை அவர்கள் நடுவதாகயில்லை. மரக்கன்று காய்ந்து போகும் நிலையில் இருந்திருக்கிறது. உடனே அந்த பேங்க் அதிகாரி தன்னுடைய சமூகக் கடமையை உணர்ந்தவராக, வனத்துறைக்கு ஒரு மனுப் போட்டிருக்கிறார். அந்த மனுவில் உடனடியாக மரக்கன்றை நடுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி ஒருநாள் அவர் அலுவலகத்துக்குக் கிளம்புவதற்கு முன்பாக வனத்துறையிலிருந்து இருவர் வந்தனர். பேங்க் அதிகாரிக்குப் பரம திருப்தி. தான் மனு போட்டு ஒரு காரியம் நடக்கப் போகிறது என்றால் சந்தோஷம் வராமல் இருக்குமா? சந்தோஷமாக அலுவலகத்திற்குக் கிளம்பிப் போனார். மாலையானதும் திரும்பி வந்தவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். குழி தோண்டி மூடிப் போட்டதற்கான அடையாளம் இருந்தது. ஆனால் மரக்கன்று சுவர் ஓரத்தில் தேமேவென்று கிடந்தது.

கோபத்தில் உடனடியாக மறுநாள் கலையில் அந்த அலுவலகத்திற்கே நேரடியாகச் சென்று என்ன ஏதென்று விசாரித்தார். அங்கு பொறுப்பிலிருந்த அதிகாரி பதில் அளித்தார். ''நாங்க என்ன சார் செய்யறது. இன்னைக்கு குழி தோண்டுறவர் வந்துட்டார். அதே மாதிரி குழியை மூடுறவரும் வந்துட்டார். ஆனால் பாருங்க, மரத்தை உள்ளே நடுறவர் இன்னைக்குப் பார்த்து லீவு போட்டுட்டார். அவர் லீவு போட்டதுக்காக நாங்க வேலையை நிறுத்த முடியுமா சொல்லுங்க. அதான் அவங்க இரண்டு பேரும் அவங்கவங்க வேலையைச் சரியா செஞ்சிட்டாங்க'' என்று பதில் சொல்வதைக் கேட்டு விட்டு, 'அதுவும் சரிதான்' என்று பேங்க் அதிகாரி திரும்பி வந்தாராம். இந்த மாதிரித்தான் இருக்கிறது நம்முடைய அரசு எந்திரம். எனவே இந்த இலட்சணத்தில் 'ஹலோ தினம்' என்று சொல்லி நம்முடைய அரசியல்வாதிகளுக்கு நம்முடைய பிரச்சனைகளை விளக்கிக் கடிதமெல்லாம் எழுத முடியுமா?

ஆனந்த விகடன் 'ஹாய் மதன்' கேள்வி பதில் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் கீழே.....

கேள்வி : ரஜினியும் ஜெயலலிதாவும் சந்தித்துக் கொண்டால் என்ன செய்வார்கள்.

பதில் : ரஜினி சென்சிட்டிவ் டைப் அது மாதிரி சந்திப்புகள் நிகழாமல் பார்த்துக் கொள்வார்.

இப்படியாகத் தான் இருக்கிறது தமிழர்களின் அரசியல் நாகரீகம்.........

இறுதியாக, பின்லேடனும், புஷ்ஷ¤ம் சந்தித்துக் கொண்டால், வீரப்பனும் தேவாரமும் சந்தித்துக் கொண்டல், ஜெயலலிதாவும், கருணாநிதியும் சந்தித்துக் கொண்டால்......ஹலோ சொல்லிக் கொள்வார்களா? என்ற கேள்வி இந்த வருட ஹலோ தினத்தின் சிறப்புக் கேள்வி.

சரவணன்

© TamilOnline.com