இரண்டாவது உலகமகா யுத்தத்தில் தமிழர்கள்
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது யூதர்கள் பலர் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அதே யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தென்கிழக்கு ஆசியத் தமிழர்கள் கொல்லப்பட்டது இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் எரிக் லோமாக்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய Railway Man என்ற சுயசரிதப் புத்தகம் படிக்க நேர்ந்தது. லோமாக்ஸ் ஆங்கிலேய Corps of Signalsல் பணியாற்றியவர். 1941ல் இரண்டாவத உலகமகாயுத்தத்தில் பங்கு கொள்ள மலேயாவுக்கு (இப்போதைய மலேஷியா) அனுப்பப்பட்டார். ஆனால் சிங்கப்பூர் வீழ்ச்சிக்குப் பிறகு ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்டார். மிகக் கஷ்டமானதும் கொடியதுமான பர்மா-ஸயாம் (இப்போதைய மாயன்மார் - தாய்லாந்து) ரயில்பாதை கட்ட அனுப்பப்பட்டார். யுத்தக்கைதிகளும் மற்றவர்களுமாக கிட்டத்தட்ட 2.5 இலட்சம் பேர் இந்தப் பாதை கட்டுவதில் உயிர் இழந்தனர்.

ஆனால் எரிக் லோமாக்ஸ் எழுதியப்படி, ஜப்பானியர்கள் பல தென்கிழக்கு ஆசியத் தமிழர்களைப் பிடித்து அவர்களை கட்டாயப்படுத்தி ரயில்பாதை கட் வைத்தனர். தினமும் 20 மணிநேர வேலை, உணவு போதாமை, காட்டுப்பூச்சிகளின் தொல்லை.... அப்புறம் படுக்க இடம், வைத்திய வசதி துளிக்கூட கிடையாது. விட்டில்பூச்சிகள் போல அவர்கள் மடிந்தனர்.

அங்கு எப்பொழுதும் பலத்தமழை பெய்யுமாதலால், நீர் தேங்கி அசுத்தங்கள் கலந்து தமிழர்கள் முகாமில் காலரா நோய் பரவ ஆரம்பித்தது. காலாராவைக் கண்டு பயந்த ஜப்பானியர்கள் தமிழர்களுக்கு வைத்திய வசதி தராமல் அவர்களை ஒதுக்கி வைத்தனர். மேலும் காலரா பரவுவதைத் தடுக்க ஜப்பானியர்கள் அந்த நோய் உள்ள தமிழர்களை சுட்டுக் கொல்ல ஆரம்பித்தனர்! இந்த தமிழர்கள் முகாம்கள் கான்சனபூரி என்ற இடத்தின் பக்கத்தில் இருந்தனவாம்.

உலக மகாயுத்தம் முடிந்து ஜப்பான் தோல்வி அடைந்தபின் சில ஜப்பானியர் உயிர் தப்பிய தமிழர்களுக்கு அவர்கள் வாழ்க்கை முன்னேற சேவை செய்தார்களாம்! இந்தத் தமிழர்களில் பலபேர் மலேயா அல்லது இந்தியாவிற்கோ திரும்ப முடியாமல் முகாம் பக்கத்திலேயே வறுமை நிறைந்த வாழ்க்கையை கழித்தனராம்.

யூதர்கள் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது கொல்லப்பட்டதை நினைவுப்படுத்த கண்காட்சி சாலைகள் உள்ளன. இதே யுத்தத்தில் சைனாவில் நாக்கிங்கில் சீனர்கள் ஜப்பானியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்த புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்த அப்பாவி தமிழர்கள் வீணாக உயிர் இழந்ததை யாராவது நினைவுப்படுத்தி உள்ளார்களா?

(சமீபத்தில் History Channel காண்பித்த The Bridge on the River Kwai * - (சினிமாபடம் அல்ல)ல் ''ஆசிய மக்கள்'' மாயன்மார் - தாய்லாந்து ரயில்பாதை கட்ட கஷ்டப்ட்டதை சுட்டிக் காட்டி உள்ளனர்.)

* இந்த பாலம் மாயன்மார் - தாய்லாந்து ரயில்பாதையில் தான் உள்ளது.

ஹெர்குலிஸ் சுந்தரம்

© TamilOnline.com