யாசகம் ஒரு சர்வதேச வியாதி. அதன் ஏழ்மைப் பாசாங்குகளெல்லாம் மறைந்து போய், இப்போதெல்லாம் பிச்சை எடுப்பது கிட்டத்தட்ட ஒரு தொழில் செய்வது போலத்தான் நடக்கிறது. சிறு துளி வெருவெள்ளம் என்ற வாசகத்தை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமோ இல்லையோ பிச்சைக்காரர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிச்சை கேட்கும் விதம் தான் தேசத்துக்கு தேசம் மாறுகிறதே தவிர எல்லா நாடுகளுக்கு பொதுவானது அம்சம் இது.
ஊனமுற்ற உடலைக் காட்டியும், நோஞ்சான் குழந்தைகளை பாதையில் போட்டும் பரிதாப உணர்வைத் தூண்டி யாசிக்கும் முறை தான் இந்தியாவில் அதிகம். தாய்லாந்தில் இது அவ்வளவாய் இல்லாவிட்டாலும், வேறொரு வகைப் பிச்சையில் சிறுவர்கள் நிறைய ஈடுபட்டிருக்கிறார்கள். பாங்காங் போக்குவரத்து நெரிசல் உலகப் பிரசித்தி பெற்றது. போக்குவரத்துச் சந்திப்பில் வாகங்கள் குறைந்தது ஐந்து நிமிடமாவது நிற்க வேண்டி வரும். இந்த சந்திப்புகளில் காத்திருப்பவர்கள் அத்தனை பேரும் எட்டு முதல் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர். சிவப்பு விளக்கில் வாகனங்கள் நின்றதும் கார்களின் கண்ணாடிகளை, நாம் மறுப்பு சொல்லச் சொல்லக் கேட்காமல் பரபரவென்று துடைப்பார்கள். துடைத்து முடிந்ததும் முகத்தில் பரிதாபம் படர யாசிப்பார்கள். பிச்சை கேட்கவில்லையாம், உழைப்புக்கு ஊதியமாம். துடைத்து முடித்த சிறுவனுக்கு காசு தரமாட்டேன் என்று சொல்ல முடியாத நிலையில் முக்கால்வாசிப் பேர் 'ஒழிந்து போ' என்று காசு போடுவார்கள். இவர்கள் யாசிப்பது உணவுக்குக்கூட காசில்லா ஏழ்மையினால் அல்ல. போதைப் பொருட்கள் வாங்க. போதைப் பொருட்கள் பரவலாய் புழங்கும் இந்த சமுதாயத்தில், பிச்சை எடுக்கும் சிறுவர்களில் பெரும்பாலானோர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று பத்திரிகைக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. யாசிக்கும்போதே கையில் பாலிதீன் பையில் பெட்ரோலில் நனைத்தத் துணியை வைத்துக் கொண்டு அதை முகர்ந்து பார்த்து போதை ஏற்றிக்கொள்வதைப் பார்த்தால் மனசு சங்கடப்படும்.
இந்த பரிதாப, தொந்திரவு வகை பிச்சைகளை உதாசீனம் செய்து விடலாம். ஆனால், இன்னொரு மிரட்டல் வகை இருக்கிறது. அந்தப் பிச்சையை சமாளிப்பது கஷ்டம். நன்றாக உடை அணிந்த கணவான் ஆங்கிலத்தில் ''சார், ஐ ஆம் அ கிராடுவேட். அம்பாசுமத்திரத்திலிரந்து ஒரு வேலை விஷயமாக வந்தேன். இங்கே என் உடமைகள் திருட்டுப் போயிடுச்சு. ஊர்போய் சேர காசு இல்லை. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்'' என்று நிற்பார். சராசரி பிச்சைக்காரர்களிடம் சொல்லும் ''சில்ற இல்லப்பா'' பொய்யை இவர்களிடம் சொல்ல முடியாது. இவள் கேட்பது நோட்டு. அதுவும் இங்கிலீஷில். நாம் என்ன சொல்வது என்று நெளியும் போது அவர் ''உங்க அட்ரஸ் குடுங்க. ஊர் போய் சேர்ந்ததும் உங்களுக்கு பணம் திருப்பி அனுப்பிடறேன்'' என்று கழுத்தில் கத்தி வைப்பார். நாம் ஐந்தோ பத்தோ எடுத்து நீட்டினால், ''சார் நான் பிச்சைக்காரனில்ல சார். உதவி கேட்கிறேன். ஒரு நூறு ரூபாய் குடுங்க. பஸ் சார்ஜே அவ்வளவு ஆகும்'' என்று நாலுபேர் முன்பு நம் ஈகோவைத் தட்டுவார். இதை வாங்கி அவன் கஞ்சா அடிக்கப் போகிறான் என்று மூளையின் மூலையில் தோன்றினாலும் இந்த இங்கிலீஷ் மிரட்டலுக்கு அழுவோம். பணம் வாங்கி, 'தேங்க்ஸ்' சொல்லும் போது அவன் கண்களில் தெரியும் அரை செகண்ட் கயமையைப் பார்த்து நமக்கு சந்தேகம் வரும். ஏமாந்தது புரியும்.
நான் ஐரோப்பாவில் இருந்த இரண்டு வருஷத்தில் கெளரவப் பிச்சை அந்த நாகரீகமடைந்த சுபிட்ச சமுதாயத்தின் தகுதிக்கு ஏற்றவாறு இருந்தது. பீதோவனும், மோசாத்தும் பிறந்த இந்தப் பகுதி ஜனங்களில் பெரும்பாலானோர் இசைப் பிரியர்களாய் இருப்பதால், இந்த இசை ராஜ்யத்தின் யாசகமும் இசை மூலமாய்தான். நேரடியாக யாசிக்காமல், பாதாள ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும் தலையில் அணியும் தொப்பியை மட்டும் வானைப் பார்த்து யாசிக்க வைத்துவிட்டு மோசாத்தையும், யோவான் ஸ்ட்ராசையும் வயலினில் குழைத்து ஊற்றுவார்கள். இவர்களை சுற்றி நின்று இசையை ரசிக்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். பார்ப்பவர்கள் தொப்பியில் காசு இடும் அந்த வினாடி மட்டும் தலையை அசைத்து நன்றி சொல்லிவிட்டு வாசிப்பிலேயே லயித்திருப்பார்கள். அந்த வாசிப்பின் நேர்த்தியைப் பார்த்தால் இது யாசகமா என்று கூட சந்தேகம் வரும்.
விலங்குகளை வைத்து வித்தை காண்பித்து யாசிப்பது வேறு வகை. நம்மூரில் குரங்கு அல்லல்படும். தாய்லாந்தில் வழக்கமாய் பிச்சையில் ஈடுபடுத்தப்படும் விலங்கு யானை. யானைகள் ஏராளமாய் இருக்கும் இந்த நாட்டில் , கடினமான காட்டு வேலையில் உழைத்துக் களைத்த வயதான யானைகளை வைத்துப் பராமரிக்க முடியாமல் அவைகளை பாங்காக் தெருக்களில் ஊர்வலம் கூட்டி வந்து தும்பிக்கையால் சிறுவர்களின் தலையை வருடம் வித்தை செய்ய வைத்து இருபது பாட் வசூலிப்பார்கள். இந்த வருடம் தாய்லாந்து அரசு அதற்கு தடை விதித்து விட்டது. பாங்காக்கின் தெருக்களில் இப்போது யானை யாசிப்பு நடப்பது இல்லை.
பிச்சைப் படை இதற்கெல்லாம் மசியவில்லை. தாய்லாந்தின் சமீபத்திய நூதன யாசகம் நாய்கள் மூலமாய். நாய்களைப் பழக்குகிறார்கள். பழக்கிய அந்த நாய்கள் பாங்காக்கின் பிரதான சாலைகளிலும் கடைத் தெருவிலும் காலடியில் ஒரு கிண்ணம் வைத்துக் கொண்டு சமர்த்தாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிராணியின் அழகும் அது பவ்யமாய் உட்கார்ந்திருக்கும் காட்சியின் வசீகரமும் பிச்சை எடுக்கும் அசிங்கத்தை நாய் முலாம் போட்டு மறைத்து விடுகிறது. படத்தில் இருக்கும் பெண்மணி ''ஸ்ஸோ ஸ்வீட்! எவ்வள அழகா இருக்குப் பாரு'' என்று மயங்கிப் போடும் காசு கிண்ணம் நிறைந்ததும் நாயை வந்து அழைத்துப் போகும் அந்த சாராய நெடிக் கயவனுக்கு அவள் அறியாமல் போய்ச் சேரும்.
வெற்றிகரமாய் நடந்து கொண்டிருந்த நாய் வழி பிச்சையில் பத்திரிகைகள் மண்ணள்ளிப் போட்டன. சில சமயம் மனிதர்களுக்குக் கூடக் கிடைக்காத கவனம் விலங்குகளுக்குக் கிடைக்கிறது. நாய்கள் பிச்சை எடுக்கும் காட்சி தாய்லாந்தின் பிரதான செய்தித் தாளான 'நேஷன்'னின் (THE NATION) முதல் பக்கத்தில் விரிந்து குரைக்க, பிராணிகள் வதைப்பு சங்கம் காவல்துறையிடம் முறையிட, நாய்கள் கைது செய்யப்பட்டன(ர்). நாய்களின் எஜமானர்கள் ''ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்தன. அதில் அந்த நாய்களுக்கு நன்றாக சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தோம். இதை கெடுத்துட்டீங்களேய்யா'' என்று அங்கலாய்த்தார்கள். எல்லா பாவங்களுக்கும் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனந்த் ராகவ் |