அம்பை
சிறு பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ். இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சி, ஆவணக் காப்பகமான ஸ்பாரோ (Sound & Picture Activites for Research Women) என்ற அறக்கட்டளையை நிறுவிச் செயல்பட்டு வருகிறார்.

எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையிலான இடைவெளியைப் பெருமளவு குறைத்தவர். தன்னுடைய எழுத்துக்களின் வழியாக இவர் சித்தரிக்கும் உலகத்தில் சுதந்திரமாய் உலவி பாதிக்கப்பட்டவர்களின் மனவுணர்வுகளை வெளிக் கொண்டு வருபவர்.

'சிறகுகள் முறியும்' என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இலக்கியவாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை உண்டு பண்ணியது. 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' என்ற தொகுப்பு அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. தற்போது காலச்சுவடு பதிப்பகம் 'காட்டில் ஒரு மான்' என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.

மொத்தம் மூன்றே மூன்று சிறுகதைத் தொகுப்புகள் மட்டுமே வெளியிட்டிருந்தாலும், தமிழின் மிகச் சிறந்த கதை சொல்லிகளில் அம்பையின் இடம் தனித்துவமானது. பெண்களின் பிரச்சனைகளை வெறும் பிரச்சாரமாக மட்டும் முன்னெடுத்தவர்களின் மத்தியில் அம்பை, அவர்களின் பிரச்சனையைச் சொல்ல வரும் போதும் தீவிரக் கலைத் தன்மை இழந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டவர்.

மும்பையில் வசித்து வந்தாலும் தன்னுடைய கதைகளில் தெற்கத்திய வாழ்க்கையை இன்றளவும் நுணுக்கமாகச் சித்தரித்து வருபவர். பெண்கள் சீட்டில் அமர்ந்த ஆணைத் தட்டிக் கேட்க முடியாத பெண், விருந்தாளியை வழியனுப்பும் போது கதவிடுக்கில் முகம் காட்டும் பெண், தன் வாழ்க்கையில் ஒரு இலடசத்து எழுபதாயிரம் தோசைகளை வார்த்தெடுத்து விட்டு செத்துப் போன பெண்..... என பெண்களின் தற்போதைய பிரச்சனைகள் அனைத்தையும் தன்னுடைய படைப்புகளின் வழியாக எடுத்துக் காட்டியவர்.

குடும்பம் என்கிற மதிப்பீடுகளுக்குள் நின்று, அவற்றை நிதானித்து, விமர்சித்து, மாற்றுகிற பொறுமை இவருடைய கதைகளுக்கு உண்டு. இவருடைய கதைகள் பலவற்றை பெண்ணிய இயக்கங்கள் பலவும் நாடகப் பிரதிகளாக்கிப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். 'பயம்' என்கிற அம்மையின் நாடகப் பிரதி புத்தக வடிவமும் பெற்றுள்ளது.

தற்போது ஸ்பாரோ அறக்கட்டளையின் வழியாகப் பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை பயிலரங்குகள், குறும்படங்கள் தயாரிப்பு என பெண்களின் இயங்கு தளத்தைக் காத்திரமாக விரித்து வருகிறது. அரசியல், அறிவியல், சுதந்திரப் போராட்டம், கலையிலக்கியம், தலித் இயக்கங்கள்..... என சாத்தியமுள்ள அத்தனை தளங்களிலும் நிகழ்ந்த பெண்கிள்ன பங்களிப்புகளை ஆவணமாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தென் மாவட்டங்களில் சாமியாடும் பெண்களைப் பற்றிய ஆய்வொன்றையும் மேற்கொண்டுள்ளார். அதுமாதிரி பாதிக்கப்பட்ட பெண்களின் குரலைத் தொடர்ந்து 'வாழ்மொழி மரபாக' பதிவு செய்து வருகிறார்.

நீரஜா பானேட் விருது பெற்ற வட இந்தியப் பெண்மணியான பாப்ரிதேவியைச் சந்தித்து அம்பை எழுதிய கட்டுரை பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. அரசியல் தளத்தில் நிகழும் பெண்களின் மீதான வன்முறைகளை அந்தக் கட்டுரை வெளிக்காட்டி, தீவிரமாக ஆண்நிலை சார்ந்த அரசியலை கேள்விக்குள்ளாக்கியது. இதுவரை தமிழ்ப் பரப்பில் பங்களிப்புகளை நல்கிய பெண்களைப் பற்றிய தொகுப்பொன்றையும் செய்து வருகிறார். பெண் கலைஞர்கள் பற்றியும் தொகுத்து வருகிறார்.

மூன்று சிறுகதைத் தொகுப்புக்கள் தவிர பெண்ணியம் தொடர்பாகப் பல கட்டுரைகளைத் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதி வருகிறார். 'தமிழ்ப் புனைவுலகில் பெண்களின் குரல்' என்ற இவருடைய ஆய்வுக் கட்டுரை மிகச் சிறந்த ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது.

இந்த நூற்றாண்டில் பெண்களின் பிரச்சனைகளை கலையிலக்கியத் தளத்திலும், அதே அளவு தீவிரமாக அரசியல் தளத்திலும் வைத்து விமர்சித்து இயங்கி வந்தவர்களுள், அம்பை மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறார். அம்பையின் இடத்தை எவராலும் மறுக்க முடியாது. இந்த நூற்றாண்டின் தீவிரமான பெண் குரலின் பெயர் அம்பை.

சரவணன்

© TamilOnline.com