பலமுறை தென்றல் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் தமிழைப் பற்றியும் அதில் நாம் பயன்படுத்தும் சொற்களை பற்றியும் ''ரொம்ப தமிழ்ல படுத்துகிறீர்கள் சார்'' என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது சிரித்து விட்டு விட்டுவிடுவதே என்னுடைய பழக்கமாக இருந்திருக்கிறது. படித்தவர்கள் நல்ல தமிழில் பேசுவதற்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். கொச்சையாகவும் அரை குறையாவும் பேசுவதை அனுமதிக்கக் கூடாது என்பது பற்றி எனக்கு இன்னமும் சந்தேகம் இல்லை.
மதிப்பிற்குரிய நண்பர் ராமானுஜம் அவர்களை சந்தித்த போது, இந்த தமிழ் படுத்தல் பிரச்சனையை வேறு ஒரு சாராராது கோணத்தில் மிக அழகாக சித்தரித்தார். தமிழ்நாட்டில் தலைசிறந்த எழுத்தாளர்கள் சிலரது கதைகள் கிராமப்புற மக்களுக்கும் புதிதாக எழுதப்படிக்க கற்றுக் கொண்டவர்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான செய்தியாக இருந்தது.
Jam என்று நண்பர்களிடையே அறியப்படும் ராமானுஜம் போன்ற ஆர்வலர்களின் சேவை மகத்தானது. தமிழ்நாடு மக்கள் அறிவியல் இயக்கம் (TNSF) மற்றும் அறிவொளி இயக்கங்கள் பெரும் சிரமங்களுக்கு நடுவிலும் ஆர்வத்தை மட்டும் உந்து சக்தியாக கொண்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வியக்கங்களுக்கு இயன்றவர்கள் அனைவரும் உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.
நண்பர் அஷோக் சுப்ரமணியம் இன்று தான் சென்னையில் தென்றல் பற்றி பேசியது போலிருக்கிறது. ஆனால் உங்கள் கையில் இன்று இருப்பது தென்றல்ன் 12ஆவது இதழ்! அவரது ஆர்வம் மற்றும் முயற்சிக்கு நன்றி கூறி அவரது வேலைப்பளு அனுமதிக்கும் போதெல்லாம் அவர் பணி தென்றலுக்குத் தொடர வேண்டும் என்று அன்பான வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்.
அடுத்த இதழ் அதிகப்பக்கங்களுடன் ஆண்டு மலராக வெளிவரயிருக்கிறது. உங்கள் ஆதரவும், அன்பும் தொடர வேண்டுகிறேன்.
அமளிதுமளி அரசியல் என்று எந்த நேரத்தில் பேர் வைத்தேனோ தெரியவில்லை. அடிதடி, வன்முறைக் கலாச்சாரம் தமிழ்நாட்டு அரசியலோடு மிகவும் பின்னிப் பிணைந்துவிட்டது.
தேர்தல் நேரத்தில் நடந்த வரம்பு மீறல்களும், ஓட்டு எண்ணிக்கையின் போது நடந்ததாகச் சொல்லப்படுகின்ற அநியாயங்களும் பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்பது மிகவும் வருந்த வைக்கிறது. அரசியல் என்றால், அநியாயம் மற்றும் அராஜகம்தான்; இதில் என்ன புதுமை இருக்கிறது என்பது போல படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லா தரப்பு மக்களும் தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். மிகவும் வருந்ததக்கதும், கவலைப்படத்தக்கதுமான இந்த நடத்தை பற்றி போதுமான கண்டனங்கள் இன்னும் எழுப்பப்படவில்லை. எங்கே போகிறோம்? தெரியவில்லை.
மீண்டும் சந்திப்போம், பி. அசோகன் நவம்பர் - 2001 |