அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 18, அன்று ஸரடோகா உயர்நிலைப் பள்ளி அரங்கில் அம்பிகா கோபாலனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

நாட்டை ராக குரு வந்தனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து கணேச ஸ்துதி. ஆனந்த நடமிடும் நர்த்தன விநாயகரை நாட்டியத்தில் காண்பித்த விதம் நன்றாக இருந்தது. அடுத்து அலாரிப்பு, ஜதிஸ்வரத்தில் கண், முகபாவம், அங்க அசைவுகள், கால்களில் தீர்மானம் யாவும் கச்சிதம்.

நவரசத்தில் ஒன்பது வித உணர்வுகளை ஸ்ரீராமனின் வாழ்க்கையைப் பற்றின ஸ்லோகங்களில் அந்தந்த உணர்வுகளுக்கேற்ற ராகங்களில் தேர்ந்தெடுத்துப் பாடியவிதம், அடுத்தடுத்து முகபாவங்களைப் பிரதிபலித்த விதம் யாவும் பிரமாதம். முந்தின பாடல்களில் விளக்கின் ஒளியின் நிழல் முகத்தில் விழுந்ததால் சரிவர முகபாவம் தெரியா விட்டாலும் சரிப்படுத்திய பின்னர், 'நவரசம்' பார்க்க மிக அருமை. அதிலும் ரெளத்ரம், பயம், வீரம் மூன்றும் மிக இயல்பாக இருந்தன.

மதுரை முரளிதரன் அவர்கள் இயற்றிய சிம்மேந்த்ர மத்யம ராகத்தில் அமைந்த வர்ணத்தை ஒலிபெருக்கியில் அம்பிகாவின் சகோதரன் விளக்க அம்பிகா அபிநயம் பிடித்துக் காண்பித்த விதம் அழகு. சிறிது நீளமான வர்ணனை என்றாலும் கூட நளினமான அசைவுகள், தாளக்கட்டுடன் அசராமல் அனாயசமாய் துள்ளி ஆடிய விதம், பாட்டில் மகிஷாசுர வதம் புரிந்தாயே என்னுமிடத்தில் காண்பித்த வீரம், உயிர்கள் தழைத்திட கருணை புரியும் என்னுமிடத்தில் காண்பித்த முகபாவம் யாவும் வெகு நேர்த்தி.

பாம்பு நடனத்தில் 'ஆடுபாம்பே' பாடலுக்கு ஏற்ற அலங்காரம், உடலை நெளித்து வளைத்து அசைத்துச் சீறும் பாம்பின் ஆட்டம், புல்லாங்குழலில் மகுடி நாதம், பாடல், தாளம், யாவும் சேர்ந்த பாம்பாட்டி நடனம் பலே. பலத்த கைதட்டல் அடங்க நேரம் ஆயிற்று.

செளராஷ்டிர ராக பதத்தில் 'அநேகம் சொல்வாள் அடிபோடி' என்பதற்குக் கழுத்தை வெட்டித் திருப்பி வெடுக்குத்தனம் காண் பித்தது வெகுஜோர். தரங்கம், தில்லானா, திருப்திகரம். மாணவியிடம் உழைப்பு, தன்னம்பிக்கை, பாட்டின் பதத்திற்கேற்ற கண் அசைவு, முகபாவம், உடல் நளினம் யாவும் சிறப்பாக அமைந்திருந்தன.

குரு ஸ்ரீலதா சுரேஷ் அவர்கள் சிறந்த பயிற்சி அளித்திருக்கிறார். மாணவியின் திறமை குருவுக்குப் பெருமை. சிறந்த வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், கஞ்சிரா, மிருதங்கம் யாவும் மிக சிறப்பாக அமைந்து நிகழ்ச்சி நன்கு பரிமளித்தது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com