செப்டம்பர் 1, 2007 அன்று பால்ட்வின் பார்க்கில் (லாஸ் ஏஞ்சலஸ், கலி.) உள்ள நிகழ்கலைகள் மையத்தில் நித்யா ராமின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
'இதென்ன இவர் இப்படி இங்கிதம் தெரியாதவராக இருக்கிறார்! நான் என் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது வந்து, என் கைகளைத் தொட்டுப் பேசும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது?' என்று குற்றம் சாட்டினார் நித்யா ராம். இதற்கான 'மரியாத' பாடலை பாபு பரமேஸ்வரன் கணீரென்று தெலுங்கில்தான் பாடினார். எனினும் நித்யாவின் அந்த சிணுங்கல், செல்லமாய் கடிந்துக் கொள்ளும் நேர்த்தி, மொழித் தடையைக் கடந்து அந்த ஜாவளியின் பொருளை நமக்கு உணர்த்திற்று. செவ்வனே திட்டமிட்டு வழங்கிய குரு ரம்யா ஹரிசங்கரின் செயல்விளக்கம், பரதநாட்டியம் பற்றி அறியாதவரையும் நாட்டம் கொள்ள வைப்பதாக இருந்தது.
புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம் என்று தொடங்கி சூடுபிடித்த நடன நிகழ்ச்சி, காம்போதி ராக வர்ணத்தில் நிருத்தமும் அபிநயமும் ஒன்றோடு ஒன்று இணைய, முருகனை அழைத்து வரச்சொல்லி கெஞ்சலாகவும், உரிமையோடு கட்டளையிட்டும் தன் தோழியை விளித்த நித்யா வர்ணத்துடன் ஒன்றிப்போனார்.
'அலைபாயுதே கண்ணா'வில் பிரிஜேஷின் புல்லாங்குழல். 'கண்ணன் குழலிசை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்' என்ற நிச்சயத்தை மனதில் எழுப்பியது. தியாக ராஜனின் வயலின் இசையும், ஸ்ரீகாந்தின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.
கல்யாண வசந்தத்தில் அமைந்த தில்லானா பாரதியின் 'காக்கைச் சிறகினிலே'வை ஆதாரமாகக் கொண்டது. இத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.
பேரா. வைத்தியநாதன் மற்றும் இந்திராபார்த்தசாரதி |