பஜ்ஜி வகைகள்
பஜ்ஜி என்றால் ஹர்பஜன் சிங் நினைவுக்கு வந்தால் நீங்கள் கிரிக்கெட் ரசிகர். ஆனால் தீனிப் பிரியர்களுக்கு பஜ்ஜி என்றவுடன் வாழைக்காய், கத்தரிக்காய், உருளைக் கிழங்கு பஜ்ஜிகள்தாம் நினைவுக்கு வரும். பல புதுமையான பஜ்ஜிகளும் செய்யலாம்.

கடலை மாவு எண்ணெயில் வேகும்போது வரும் வாசனை இருக்கிறதே, ஆஹா! சொல்லி முடியாது. அப்போதே நாக்கில் எச்சில் ஊறிவிடும். மொறுமொறுப்பான பஜ்ஜியைத் தின்பது ஒரு சுகம்.

முதலில் பொதுவாக பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பஜ்ஜி

வாழைக்காய், ,உருளைக்கிழங்கு, பீட்ரூட், செளசெள, காரட், குடைமிளகாய், பெரிய வெங்காயம் போன்றவற்றில் பஜ்ஜி செய்யும் முறை இதோ. தோல் சீவ வேண்டியவற்றுக்குத் தோல் சீவி, காய்கறிகளை வேண்டிய வடிவில் மெல்லியதாகச் சீவி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், ப்ராகோலி பூக்களையும் இம்முறைப்படி செய்யலாம். பெரிய வெங்காயத்தைத் தோல் நீக்காமல் வட்ட வடிவமாக வெட்டினால் வளையங்கள் பிரியாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1/8 கிண்ணம்
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

காய்கறி, எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் நன்றாக இட்டலி மாவுப் பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், நறுக்கிய காய்கறி வில்லையை ஒவ்வொன்றாக மாவில் இருபுறமும் தோய்த்து எண்ணெயில் போடவும். இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து வடியவைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com