வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
செப்டம்பர் 2, 2007 அன்று ஸாரடோகா உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் வசந்த் ராமசந்திரன் அவர்களின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது.

'ஸாமி நின்னே' (பந்துவராளி) வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பித்தது. 'வரவல்லப' (ஹம்சத் வனி) என்னும் ஜி.என்.பி. அவர்களின் பாடல் தொடர்ந்தது. சுருதி சுத்தத்துடன் தொடங்கிப் பாடிய 'வா முருகா வா' (பேகடா) கேட்க விறுவிறுப்பாக இருந்தது.

அடுத்துப் பாடிய 'ஆனந்தாம்ருத' (அமிர்த வர்ஷணி) என்னும் முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதி சிறிது பயத்துடன் ஆரம்பித்தாலும் தொண்டடை சூடு பிடித்த பின்னர் ராக ஆலாபனை கச்சிதமாக அமைந்தது. மேல் ஸ்தாயியில் நிற்கும் போது சுருதியுடன் இணைந்து பாடிய விதம், சங்கதிகளை சுரஸ்தானம் பிசகாமல் அழுத்தம் கொடுத்து வித்தியாசப்படுத்திப் பாடிய விதம் தெளிவாக, நன்றாக இருந்தது. 'சந்திரசேகர' என்னும் மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் பாடல் கேட்க இதம். 'ஜனனி நின்னு வினா' (ரீதிகெளளை) ராகப்பாடலை கீழ்ஸ்தாயியில் அசைவு கொடுத்துப் பாடியவிதம் உருக்கம்.

'ஓ ரங்கசாயீ' (காம்போதி) பாடலில் ஆலாபனை, நிரவல், கற்பனா ஸ்வரம் யாவும் கச்சிதமாகக் கையாளப்பட்டது. பாவத்துடன் பாடிய விதம் கேட்க ரம்யம். ராக ஆலாபனையில் தன்னம்பிக்கையுடன் பாடினால் மேலும் எடுப்பாக இருக்கும்.

'இன்னுதய பாரதே', 'குறை ஒன்றுமில்லை' இரு பாடல்களும் நல்ல விறுவிறுப்புடனும் அனுபவித்து உருக்கமாகப் பாடியவிதம் அவையோரால் நன்கு ரசிக்கப்பட்டது. கன்னட, தெலுங்கு உச்சரிப்பு யாவும் சுத்தமாக இருந்தது.

மதுவந்தி ராகத் தில்லானா, பஜனைப் பாடல் யாவும் கேட்க மனதுக்குச் சுகம். நல்ல பாடாந்தரம். சிறந்த முறையில் குரு ஜெயஸ்ரீ தாசரதி அவர்கள் பயிற்சி அளித்திருக்கிறார்.

வயலின் வாசித்த அருண் ராமமூர்த்தி அவர்கள் அமிர்தவர்ஷிணி ராகத்துக்கு அருமையாக வாசித்து அசத்தினார். மிருதங்கம் வாசித்த ரமேஷ் சீனிவாசனின் தனி ஆவர்த்தனம் பிரமாதம். இருவரின் ஒத்துழைப்பில் கக்சேரி களை கட்டியது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com