செப்டம்பர் 9, 2007 அன்று ஸ்ரீராமலலித கலா மந்திர் இசைப்பள்ளி மாணவி ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் கேம்பெல் ஹெரிடேஜ் தியேட்டரில் நடந்தேறியது.
'சலமேல' என்ற (நாட்டைக்குறிஞ்சி) வர்ணத்துடன் நிகழ்ச்சி ஆரம்பம். பின்னர் வந்த 'சக்தி கணபதி' (நாட்டை) பாடல் நல்ல விறுவிறுப்பு. தொடர்ந்து 'அனுபவம குணம்புதி' (அடாணா) என்னும் தியாகராஜ க்ருதி துரித கதியில் அமைந்திருந்தது.
பின்னர் தர்மாவதி ராக அன்னமாசார்யா பாடலில் நல்ல மனோதர்மத்துடன் கூடிய அளவான ப்ரயோகங்களை ராக ஆலாபனை யிலும், கச்சிதமான சுரக்கோர்வைகளிலும் காண முடிந்தது. 'சங்கரி நின்னே' (பேகடா) பாடலில் ராக அசைவுகளை அழகுறப் பாடியது அருமை. மீராபஜனை (பாக்யஸ்ரீ) அனுபவித்துப் பாடியது கேட்க இதம்.
'ஸ்ரீகிருஷ்ணம் பஜ' (தோடி) பாடலின் ராக ஆலாபனையில் மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் செய்யும் போது அநாயாசமாக இழைந்த குரல் கீழ்ஸ்தாயியில் சிறிது ஒத்துழைக்க மறுத்தாலும் சமாளித்துப் பாடிய விதம் நன்று. நிரவல், சுரம் யாவும் நல்ல எடுப்பு. தோடி ஆலாபனை இனிமையாக இருந்தது. தனி ஆவர்த் தனத்தில் ரவீந்திரபாரதி பரிமளித்தார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் 'வருவாரோ வரம் தருவாரோ' (சாமா) கேட்க மனதிற்கு இனிமை. ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்கள் இயற்றிய 'காரணம் கேட்டு வாடி' (ரேவதி) பாடலை இனிமையுடனும் உருக்கத்துடனும் பாடியது சிறப்பாக இருந்தது. புரந்தரதாசரின் 'காவனதவமுனி' எனும் கன்னட கிருதியை உச்சரிப்பு சுத்தமாகப் பாடிய விதம் நன்று. 'யாகே நிர்தயநாதி' (ராகமாலிகை) கேட்க ஜனரஞ்சகம்.
சிவரஞ்சனி ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது. குரு ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்கள் சிறப்புடன் கற்றுக் கொடுத்த பயிற்சி, சிறந்த பாடாந்தரம், மாணவியின் நல்ல குரல்வளம், கடின உழைப்பு, சங்கீதக் கலையில் பக்தி, ஆர்வம் ஆகியவை சிறப்பான அம்சங்கள்.
ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்கள் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆற்றிய உரையில் இறைவனிடம் சரணாகதி அடைவதைப் பற்றியும், பின்னர் கர்நாடக சங்கீதப் பயிற்சியில் ராக ஆலாபனை, கற்பனை சுரங்கள் யாவும் சொந்த மனோதர்மத்தில் பாடிப் பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கூறியது மிகப் பொருத்தம்.
சீதா துரைராஜ் |