தென்றல் மிகவும் சிறப்பாகப் பொலிவுடன் மிக நல்ல கருத்துக்களைத் தாங்கி எல்லோருக்கும் பயனுள்ள வரையில் பிரசுரமாவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய உளங்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.கே. கிருஷ்ணமூர்த்தி, டப்லின், கலி.
******
செப்டம்பர் 2007 தென்றல் இதழ் படித்தேன். பரவசமடைந்தேன். புதுக்கோட்டை ஞானலாயா கிருஷ்ணமூர்த்தியின் நேர்காணல் பயனுள்ளதாக இருந்தது. அவருடைய சமூக பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சாதனைப் பாதையில் வெளியிட்டுள்ள அமெரிக்காவில் தடம் பதித்த தமிழ் இயக்குநர் அருண் வைத்யாநாதனின் பன்முக படைப்புத் திறமை பற்றியும் அவரது இணைய தளம் குறித்தும் வெளியிட்டது அருமை. இதோ பார் இந்தியாவில் 'தண்டிக்க அதிகாரம் யாருக்கு?' என்ற கட்டுரை சிந்திக்க தூண்டியது.
பா. தமிழ்வேந்தன்
******
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் நட்பைத் துறக்க மாட்டார்கள் என்ற அற்புதமான குறள்நெறியை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையும், தாயுமான அந்த அம்மையார் கடைப் பிடிப்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் சித்ரா வைத்தீஸ்வரன். தனது தோழியின் நட்புக்காகத் தன் மகனையே தூக்கியெறியத் துணிந்த அந்த அம்மையார் உண்மையிலேயே ஒரு நல்ல ஆசிரியை தான். அப்படிப்பட்ட தாயை அடைய நண்பர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனாலும் அந்தத் தாய் சிரமப்படுவதைப் பார்க்கப் பொறுக்காத தனயனும் போற்றுதலுக்கு உரியவர் தானே.
சாதனைப்பாதையில் நடைபோடும் அருண் வைத்தியநாதன் அவர்களின் 'அச்சமுண்டு அச்சமுண்டு' வெற்றிநடை போட்டு, பிரபஞ்சமே தமிழர்பக்கம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அவருடைய கலைப்பணி தொடரத் தென்றலோடு நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.
சென்னை நவின், இர்வைன் (கலி.)
****** |