ஒரு லட்சம் விழிவெண்படல (காடராக்ட்) அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த டாக்டர் தத்யராவ் லகானே. 50 வயதான டாக்டர் லகானே மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் சர். ஜே.ஜே. மருத்துவமனையின் கண் நோய்ப் பிரிவுத் தலைவர். ஏழை விவசாயி ஒருவரின் மகனாகப் பிறந்து, தன் படிப்பிற்கான செலவுகளைத் தானே வேலை செய்து சம்பாதித்து இன்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் லகானே, சமீபத்தில் தனது 1 லட்சமாவது விழித்திரை கண் அறுவை சிகிச்சையை, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ் முக் முன் நிகழ்த்திப் புதிய சாதனை படைத்திருக்கிறார். 1 லட்சம் அறுவை சிகிச்சை செய்திருக்கும் டாக்டர் லகானே சிறுநீரகங்கள் பழுதடைந்தவர் என்பதும், அதற்கான அறுவை சிகிச்சையைச் செய்து கொண்டதுடன், அனுதினமும் உயிர்காக்கும் மருந்துகளை உட்கொண்டே தனது வாழ்க்கையை நடத்தி வருபவர் என்பதும், இதுநாள் வரை தன் பணியில் விடுமுறை எடுத்ததே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் கண்களின் முக்கியத்துவத்தைத் தாம் உணர்ந்திருப்பதாகவும், இனி வரும் காலங்களில் கண் தானத்தை வலியுறுத்தி, அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுமாறு தான் கார்ட்டூன்கள் வரைய இருப்பதாகவும் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மண் அறிவித்திருக்கிறார்.
அரவிந்த் |