பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சென்னை குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, தனது டிரஸ்ட் மூலம் இருநூறு கோடி ரூபாய் செலவில் சிறப்பாகக் கண்டலேறு-பூண்டி கால்வாயை அமைத்துக் கொடுத்ததற்காக ஸ்ரீ சத்யசாயிபாபாவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் பாராட்டு விழா நடத்திய போது தமிழக முதல்வர் கருணாநிதி அங்கேயே ஒரு வேண்டுகோளை வைத்தார். 'கூவம் நதியைத் தூய்மைப்படுத்த ஸ்ரீ சத்ய சாயிபாபா உதவ வேண்டும்' என்பதே அது. அங்கேயே ஆவன செய்வதாக உறுதி அளித்தார் ஸ்ரீ சத்யசாயி பாபா. மீண்டும் செப்டம்பர் பாபாவைச் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் இதற்காக மீண்டும் வேண்டிக்கொள்ள, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டார் ஸ்ரீ சத்யசாயி பாபா. அவரது ஆலோசனையின் படி வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று விரைவில் சென்னை வந்து கூவம் நதியைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. அதன் நீளம், அதனை மேம்படுத்த ஆகும் செலவுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு, திட்ட முன்வரைவைத் தயாரித்து ஸ்ரீ சாயிபாபாவிடம் அளிக்க உள்ளது. அதேசமயம் கூவம் நதிக்கரையின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மென்மேலும் கழிவுநீர் வந்து அதில் கலக்காமல் தடுத்தல், கழிவு நீர் நிரந்தரமாக வெளியேற்றப்பட மாற்று ஏற்பாடுகள் செய்தல் போன்றவற்றை அரசே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட தி.மு.க அரசின் நீண்ட நாள் கனவு, கடவுளின் அவதாரமாகப் பலரால் கருதப்படும் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் உதவியோடு விரைவில் நிறைவேற உள்ளது.
அரவிந்த் |