செய்குத்தம்பிப் பாவலர்
நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியான கோட்டாறு மிகப் பழமைமிக்க பகுதியாகும். இது திருவாங்கூர் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. அக்காலத்தில் அங்கே அரசு மொழியாக மலையாளம் இருந்தது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போது தமிழகத்தில் நாகர்கோவில் மாவட்டமானது.

முன்னர் கோட்டாறு என்று வழங்கி வந்த பகுதி இந்நாளில் நாகர்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. கோட்டாற்றின் அருகில் உள்ள சிற்றூர் இளங்கடை. இந்த ஊரில்தான் ஜூலை 31, 1874 அன்று செய்குத்தம்பிப் பாவலர் பிறந்தார்.

இளங்கடை எனும் ஊர் பல இஸ்லாமிய ஞானப் புலவர்கள் பலரைத் தன்னகத்தே கொண்டிருந்து. குறிப்பாக 'மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு' வழங்கிய ஞானியார் சாகிபு, சீறாக் கீர்த்தனை பாடிய செயிராக்கரு என்ற செய்யிது அபூபக்கப் புலவர், ஞானப் பாக்களைப் பாடிய தக்கலை பீர் முகம்மது ஞானியார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

பாவலரின் தாயார் ஆமினா அம்மையார் ஞானியார் அப்பாவின் மூன்றாந் தலை முறையில் வந்தவர். இந்த அம்மையாரின் அன்பு வளர்ப்பும் அரவணைப்பும் அளவளா வலும் இளமைப்பருவத்தில் பாவலருக்குப் பெரும் ஊக்கம் தந்தது. பகலில் பாவலர் அறிந்ததையெல்லாம் நினைவாற்றலோடு தாயாரிடம் சொல்வாராம்.

பாவலர் இளமையில் திருக்குர்ஆனை வீட்டிலிருந்தே கற்றுத் தேர்ந்தார். எட்டாவது வயதில் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வகுப்பில் சேர்க்கப்பட்ட இருபதாம் நாளிலேயே வகுப்பாசிரியர் செய்குத்தம்பியின் கல்விச் சிறப்புக் கருதி முதல் வகுப்புக்கு அனுப்பி வைத்தார். அவ் வகுப்பாசிரியர் இரண்டாம் வகுப்புக்கு அனுப்பி வைத்தார். அந்த ஆண்டு இறுதியிலேயே தலைமை யாசிரியர் செய்குத்தம்பியின் கல்வித் தகுதிநிலையைப் பாராட்டி நான்காம் வகுப்புக்கு அனுப்பி வைத்தார். ஒரே ஆண்டில் நான்கு தேர்ச்சிகளைப் பெற்ற சிறுவர் செய்குத்தம்பி பள்ளியில் படித்தது அந்த ஓராண்டு மட்டுமே. அதுவும் மலையாள மொழியில்தான் படித்தார்.

வறுமை காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால் இவர்களது குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். வீட்டில் நெய்த நூலை எடுத்துக் கொண்டு கடைவீதிக்குச் செல்வார். தமிழ்க் கடைகளில் பெயர்ப் பலகைகளில் உள்ள சொற்களைப் பிறரிடம் கேட்டு உச்சரித்துத் தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் இவர் வாழ்ந்த தெருவுக்கு அருகில் வாழ்ந்து வந்த சங்கரநாராயண அண்ணாவியார் என்ற தமிழாசிரியரிடத்தில் தமிழ் கற்கச் சென்றார்.

ஆசிரியரிடம் கல்வி கற்கப் போகும் முன் பாவலர் பக்கத்து வீடுகளில் இருந்து ஆத்திசூடி, கொன்றை வேந்தன், தேசிங்கு ராஜன் கதை, அல்லி அரசாணி மாலை ஆகியவற்றைக் கடன் வாங்கிக் கற்றிருந்தார். அப்பொழுதே தனது நினைவாற்றலை மேலும் வளர்த்துக் கொண்டார். கற்றதையெல்லாம் கற்றவாறே மனதில் பதித்துக் கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொண்டார்.

சங்கரநாராயண உபாத்தியாயர் மூலம் பாவலர் தமிழ் இலக்கணம் இலக்கியம் முதலியவற்றைக் கற்றார். நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், யாப்பருங்கலக் காரிகை தண்டியலங்காரம், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, இறையனார் களவியல் உரை தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களைப் பாடங் கேட்டார். பிற்காலத்தில் நன்னூலில் மிகத் தேர்ச்சி பெற்ற புலவராகப் பாவலர் விளங்கினார்.

மேலும், ஆசிரியரிடம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், தேவாரம் முதலான திருமுறைகள், ஆழ்வார் பாடல்கள், கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடற்றிரட்டு, பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், திருவருட்பா ஆகிய நூல்களையும் விரிவாகக் கற்றார். இந்தக் கற்றல் ஆழ்ந்தகன்று விரிந்திருந்தது. இதுவே செய்குத்தம்பியின் புலமை மரபாக இருந்தது. பிற்காலங்களில் கற்றிந்தோர் பலர் பாவலரிடம் பாடங் கேட்கவும் சந்தேகம் நிவர்த்தி செய்யவும் முடிந்தது. அந்த அளவுக்குத் தனது ஆற்றல்களையும் ஆளுமையையும் வளர்த்துக் கொண்டார். சொன்னவுடன் கவிபாடும் செய்குத்தம்பியின் தமிழறிவு சென்னை நகரத்துத் தமிழிறிஞர்களிடையே பரவியது. சென்னையில் பல இடங்களில் செய்குத் தம்பியின் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. கம்பராமாயணம், சீறாப்புராணம் முதலிய இலக்கியங்களைக் குறித்து இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அதிகம் கற்ற பண்டிதர்களையும் வியக்க வைத்தது. இவரது புலமைக்கு கௌரவம் ஏற்பட்டது.

இதன் விளைவாக இட்ட பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் செய்குத்தம்பிக்கு 'பாவலர்' என்னும் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது இவருக்கு வயது இருபத்தி ஏழாகும். தமது இளம் வயதிலேயே பேரும் புகழும் அடைந்தார்.

அப்பொழுது சென்னை நகரமெங்கும் 'சொற்போர்' ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. இப்போதைய பட்டிமன்றம் போல. அருட்பா x மருட்பா என்பதைக் குறித்ததே அந்தச் சொற்போர். வடலூர் இராமலிங்க அடிகளது பாடல் தொகுதியே சர்ச்சைக்குரிய பொருளாக நின்றது. அடிகளது பாடல்களை ஒரு சாரார் 'அருட்பா' என்றும், மறுசாரார் 'மருட்பா' என்றும் போற்றியும் தூற்றியும் சொற்போரில் ஈடுபட்டனர். இந்த அருட்பா மருட்பா வழக்கு விவகாரமாகவும் நீதிமன்றம் வரை சென்றது. இராமலிங்கரது பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பாவே என்று வாதத்தை தொடக்கி விட்டவர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர். விவாதம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே அடிகளும் நாவலரும் இவ்வுலக வாழ்வை நீத்தனர். ஆனால் இவ்விரு பெரியோர்களின் காலத்துக்குப் பின்னரும் இவர்களின் சீடர்களிடையே இந்த விவாதம் தொடர்ந்து.

இவ்வேளையில் நாவலரின் அருமைச் சீடர் நா. கதிரைவேற்பிள்ளை இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை எதிர்த்து மருட்பா எனக் கூறி சொற்பொழிவாற்றி வந்தார். அவர் அத்துடன் அமையாமல் 'இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா' என்னும் நூலையும் எழுதி வெளியிட்டார். அந்நூல் இராமலிங்க அடிகளது சீடர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நா. கதிரை வேற்பிள்ளைக்கு அவரது மாணவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. துணை நின்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அருட்பா கட்சியின் பக்கமாகத் தொழுவூர் வேலாயுத முதலியார், கோ. வடிவேலுச் செட்டியார், மறைமலை அடிகள் போன்றோர் துணை நின்றனர். இரு சாரார் உரைகளிலும் மக்கள் கவனம் செலுத்தினர்.

இவ்வேளையில் செய்குத்தம்பிப் பாவலர் அருட்பா மறுப்பாளர் கூற்று பொருந்தாது என அறிந்து கொண்டார். எனவே அருட்பா மறுப்பாளரை மறுத்துச் சொற்பொழிவாற்ற விரும்பினார். தம் கருத்தை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களிடம் தெரிவித்தார். பாவலர் இஸ்லாமியராய் இருந்தாலும் அவர் ஆழ்ந்த புலமை நிரம்பியவர் என்பதை நாயுடு நன்கு அறிவார். இதனால் பாவலர் சொற்பொழிவாற்ற ஒப்புக் கொண்டார்.

பாவலர் சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார். 'பெருமக்களே, திருவருட்பா என்ற தொடர் திரு+அருள்+பா என்னும் மூன்று சொற் களைக் கொண்டது. இத் தொடரானது இராமலிங்க அடிகளார் இறைவனது திருவருள் துணைகொண்டு பாடியருளிய பாடல்களாவன நூல் எனக் கருவியாகு பெயராக நூலை உணர்த்தி நிற்கிறது. அ·து அருட்பாவே.

இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். மேலும் இக்கூற்று ஆறுமுகநாவலர் வள்ளலார் ஆகிய இருவர் முன்னிலையிலேயே வழக்கிடுமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே அது பற்றி இப்போது மருட்கை யில்லையென மருட்பா என்பார் கூற்றை மறுத்தார்.

மேலும் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் எழுதிய ஆபாச தர்ப்பணம் என்ற நூலுக்கு வேறு பெயராக 'மருட்பா மறுப்பு' என்னும் பெயரை வைத்திருக்கிறாரே, மருட்பாவினை மறுப்பது அருட்பாவெனத் துணிவது என்பது தானே? எனவே அவர்கள் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை அருட்பா என ஒப்புக் கொண்டதாகத் தானே பொருளாகிறது. அன்றியும் 'ஆபாச தர்ப்பணம்' என்னும் தொடரில் தர்ப்பணம் என்று எழுதியிருப்பது தமிழ் இலக்கண வழக்குக்கு மாறானது. 'ரழ தனிக்குறி லணையா' என்பது நான்னூல் 110வது நூற்பா. அதாவது தனிக்குறிலை அடுத்து ரகர ழகர ஒற்றுக்கள் (மெய் யெழுத்துக்கள்) வராது என விதியிருக்கும் போது 'தர்ப்பணம்' என எழுதியுள்ளது இலக்கணப் பிழையாகும். பெயரமைப்பிலேயே 'தருப்பணம்' என்று எழுதாமல் தர்ப்பணம் என்றெழுதி இலக்கணப் பிழை ஏற்படுத்திய ஆசிரியர் எழுதிய நூல் முழுமையும் இலக்கணப் பிழையே மலிந்திருக்கும் என்பது தெளிவு தானே? இத்தகைய நூலைத் தமிழ் மக்கள் படிப்பது தவறு' எனக்கூறி அப் புத்தக்கதின் பிரதி ஒன்றை அக்கூட்டத்தி லேயே கிழித்து எறிந்தார். பாவலரின் இச் சொற்பொழிவைக் கேட்டவர்கள் இவரின் இலக்கணப் புலமையை வியந்து பாராட்டினர். ஆனால் இன்னும் இந்த விவாதம் முடிந்த பாடில்லை.

மற்றொரு நாள் பாவலர் அருட்பாவை ஆதரித்துச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது ஒருவர் எழுந்து ஒரு விளக்கம் கேட்டார். பொதுவாக பக்திப் பாடல்களில் இறைவனது அடியினைச் சேர வேண்டும் என்று வேண்டுவது தானே மரபு? இராமலிங்கரோ இறைவன் முடி மேலிருக்க இடம் வேண்டுகின்றாரே என அருட்பா ஒன்றினைக் காட்டி வினவினார்.

'நாதர்முடி மேல் இருக்கும் வெண்ணிலாவே
அங்கே
நானும்வர வேண்டுகின்றேன்
வெண்ணிலாவே'


என்று வள்ளலார் பாடுவார்.

பாவலர் இவ்வினாவுக்குச் சிறப்பாக விடையளித்தார். நீங்கள் குறிப்பிடும் பாடல் அருட்பாவில் ஆறாம் திருமுறையில் வெண்ணிலாவை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டதாகும். தாங்கள் குறிப்பிடுகிறபடி பாடல் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது அச்சுப்பிழையாக இருக்கலாம். 'நாதமுடிமேல்' என்று தான் இருக்க வேண்டும், நாடிமுடிமேல் என்பது சைவசித்தாந்தக் கருத்து. முப்பத்தாறு தத்துவங்களில் நாததத்துவத்தின் மேல் நிலையைக் குறிப்பது சிவானந்தப் பெருவெளி என்றும் சச்சிதானந்தக் கடல் என்றும் குறிக்கப் பெறும் பரவெளியாகும். வள்ளலார் அதனை அடைய விரும்பியே பாடுகின்றார்.

குறிப்பிட்ட பாடலுக்கு முன் பின்னே வருகின்ற கண்ணிகளும் இக்கருத்தை வெளிப்படுத்துவன என்று அவ்விரண்டு கண்ணிகளையும் எடுத்துக் காட்டினார். அக்கண்ணிகளில் 'தன்னையறிந்து இன்பமுற ஒரு தந்திரம் சொல்ல வேண்டும்' எனவும் 'சச்சிதானந்தக் கடலில் தாழ்ந்து விழ வேண்டுகின்றேன்' எனவும் வெண்ணிலாவை நோக்கி வள்ளலார் வேண்டுகிறார். ஆகவே 'நாதமுடிமேல்' என்றுதான் பாடியிருக்க வேண்டும் எனவும் 'நாதர் முடிமேல்' என்பது அச்சுப்பிழை எனவும் எடுத்து விளக்கினார். வாழ்நாளெல்லாம் திருவருட்பாக்களைக் கற்றறிருந்த பெருமக்களும் கூடக் கேட்டு வியக்கும் வண்ணம் பாவலர் தந்த விளக்கம் அவையோரைக் கவர்ந்தது. ஆரவாரம் எழுந்தது.

பாவலர் ஒரு நாள் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றார். அங்கே பழுத்த தமிழ்ப் புலவர்களும் குழுமியிருந்தனர். அங்கிருந்த தொல்காப்பிய உரையாசிரியர் சோழவந்தான் அரசன் சண்முகனார் பாவலரை நோக்கி உங்களுக்கு எத்தனை திருவருட் பாடல்கள் நினைவில் இருக்கும் எனக் கேட்டார். அதற்குப் பாவலர் ஓரளவு நினைவு இருக்கும் எனப் பணிவோடு விடை பகர்ந்தார். உடனே அரசன் சண்முகனார் 'இராமலிங்கர் மகாதேவ மாலையில் எழுபத்தொன்பதாவது பாடலை நினைவு படுத்த முடியுமா?' எனக் கேட்டார். உடன் பாவலர் 'உய்வித்து மெய்யடியார் தம்மை யெல்லாம்' எனத் தொடங்குகிற பாடல் முழுவதையும் பாடிக் காட்டிவிட்டார். அது கேட்ட சண்முகனார் வியப்படைந்தார். பக்கத்திலிருந்த பேராசிரியர் நாராயண அய்யங்கார் அப்பாடலில் 'கு' எப்படி வந்தது எனக் கேட்டார்? உடனே பாவலர் அதற்கு 'கு' என்பது சாரியை என்றார். இது போல் புலவர் பெருமக்கள் ஒவ்வொருவரும் விடுத்த வினாக்களுக்கெல்லாம் பாவலர் பொருத்தமாக விடையளித்தார்.

தமிழ் விருந்தைத் தம்மை மறந்து உண்டு கொண்டிருந்த பாண்டித்துரைத் தேவர் பாவலரை வியந்து பாராட்டி தாங்கள் 'தமிழின் தாயகம்', 'அவதானிகளின் அரசர்' எனக் கூறிப் புகழ்ந்தார். ஏனையோரும் பாவலரைப் புகழ்ந்து பாராட்டினர். பாவலரது தமிழறிவும் புலமையும் வெளிப்பட்டது. சமயங் கடந்த சமரச நோக்குடைய சிந்தனையாளர் ஒருவரை நாம் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. தமிழின் ஆழமும் விரிவும் தேடி முழுமையாகத் தோய்ந்து அதன் செழுமைக்கும் வளத்துக்கும் தன்னாலான பங்களிப்பைப் பாவலர் நல்கினார்.

பாவலர் மிகச் சிறந்த தமிழறிஞராக வலம் வந்தார். சமூகமும் அப்படித்தான் இவரை ஏற்றுக் கொண்டது. இவர் எண்ணற்ற நூல்களைத் தமிழில் படைத்துள்ளார். அவற்றுள் 'சம்சுதாசின் கோவை', 'நபிகள் நாயக மான்மிய மஞ்சரி', 'கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை', 'திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி', 'திருநாகூர் திரிபத்தாதி, 'நீதி வெண்பா' போன்ற செய்யுள் நூல்களையும் நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம், சீறா நாடகம் போன்ற உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார்.

'சீறாப்புராணம்' நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இனிய நூலாகும். இதனை உமறுப்புலவர் இயற்றினார். இந்நூல் முழுமைக்கும் பாவலர் தெளிவான உரை எழுதியுள்ளார். இவ்வுரை இவரது அறிவின் ஆழத்திற்கும் ஆராய்ச்சிப் புலமைக்கும் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது மட்டுமன்றி எண்ணற்ற தனிப்பாடல்களையும் பாவலர் இயற்றியுள்ளார்.

இதைவிடத் தனது புலமையை கற்றோர் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்து கருத்தாடல் மரபு செழுமையுடன் வெளிப்படக் காரணமாகவும் விளங்கியுள்ளார். தமிழைச் சமயங்கடந்த சிந்தனைத் தளமாகவும் வாழ்வியல் தளமாகவும் கண்டார். அதனையே போற்றி அதற்காகவே வாழ்ந்தார். இவரது ஆளுமை இன்னும் பல நிலைகளில் கண்டு அவற்றையும் நாம் இணைத்துப் பார்க்கும் பொழுது தான் செய்குத் தம்பிப்பாவலரின் சிந்தனைத் தரிசனம் நமக்கு மேலும் புலப்படும். இவர் 1950 பிப்ரவரி 13ஆம் நாள் இவ்வுலகை நீத்தார். ஆனால் இவரது வாழ்வியல் சுட்டும் வளமும் தளமும் ஊற்றுகளும் ஓட்டங்களும் இன்னும் முழுமையாக அறியப்படாதவையாகவே உள்ளன.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com