சர்க்கரை குறைபாடு
வயதான சங்கரன் பல வருடங்களாக நீரிழிவு நோய்க்கு மருந்துகள் எடுத்து வருகிறார். அமெரிக்காவில் பிள்ளை வீட்டில் தங்கி இருக்கும் போது, ஒரு நாள் மதிய உணவு சற்று தாமதமானது. நினைவு தப்பிவிடுகிறது! உடனடியாக குளூகோ மீட்டரில் சர்க்கரை அளவு பார்க்கப்படுகிறது. சர்க்கரையின் அளவு 30.

54 வயது சரஸ்வதி அம்மாளுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. குறிப்பாக, காலை வேளையில் மிகவும் குறைந்து அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறது. இதனுடன், எடை குறைதலும் வெகுவாக ஏற்படுகிறது. எப்போதும் கையில் சர்க்கரையும் பழச்சாறு மாகவே பயணிக்கிறார். பலமுறை பரி சோதனை செய்தபின் சர்க்கரை அளவு குறைவாகவும், இன்சுலின் அளவு மிக மிக அதிகமாகவும் இருப்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர் செய்யப்பட்ட MRI ஸ்கான் செய்ததில் கணையத்தில் (pancreas) கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

35 வயது குமாருக்கு, சாப்பிட்டு 2 அல்லது 3 மணி நேரத்திற்குப் பிறகு தலை சுற்றல் ஏற்படுகிறது. வியர்வை பெருகுகிறது. சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, பின்னர் பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஏனென்று தெரியாமல், ஆனால் உடனடித் தீர்வுக்கு இனிப்புப் பண்டங்களுடன் வாழ்க்கையை வாழ்கிறார். 5 வருடங்களுக்குப் பின்னர், குமாருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

45 வயதான மேரி மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவ்வப்போது மயங்கி விழுந்துவிடுவார். பரிசோதனையில் நீரிழிவு நோயாளிக்கான மருந்துகளின் அளவு ரத்தத்தில் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது.

75 வயதான வெங்கடேசன், ஒரு நாள் திடுமென்று மயங்கி விழுகிறார். சர்க்கரை அளவு 40. தெரியாமல், தனது நீரிழிவு நோய் மாத்திரைகளை இரண்டு முறை எடுத்துக் கொண்டது தெரிய வருகிறது.

65 வயதான அம்புஜம் அம்மாள் பல வருடங்களாக இன்சுலின் எடுத்து வருகிறார். வழக்கத்திற்கு மாறாக, காலை முக்கால் மணி நேரம் நடந்து சென்றார். மதியம் ஒரு மணி சுமாருக்கு, தொலைக்காட்சி பார்த்த வண்ணம் பேச்சு மூச்சின்றி விழுகிறார். ஒரு பக்கம் பக்கவாதம் போல் இழுத்துக் கொள்கிறது. 911 அழைத்ததில், சர்க்கரை அளவு 20. உடனடியாக இரத்த நாளங்களில் 'dextrose' செலுத்தப்படுகிறது. பக்கவாதம் முற்றிலும் குணமாகிவிடுகிறது.

மேற்கண்ட எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்டது ஒன்றுதான்: ரத்தத்தில் சர்க்கரை குறைந்துவிடுதல்.

நீரிழிவு நோய் பற்றி அறிந்தவர்கள் சர்க்கரை குறைபாடு பற்றியும் அறிய வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்குமே யானால் அது hypoglycemia என்று சொல்லப்படுகிறது. இது பெரும்பாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மருந்து களின் மூலம் ஏற்படும். ஒரு சிலருக்கு நீரிழிவு நோய் இல்லாமலேயே இந்த அறிகுறி ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறி வேறு சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதைப் பற்றி இப்போது விவரமாகக் காணலாம்.

சர்க்கரை குறைபாட்டின் அறிகுறிகள்

உடலில், குறிப்பாக மூளையின் அணுக்கள் சர்க்கரையின் உதவியிலேயே வேலை செய்கின்றன. உடலின் அணுக்களுக்கு சக்தி தருவதற்குச் சர்க்கரையின் அளவு சரியாக இருப்பது அவசியமாகிறது. ஆகவே, சர்க்கரை அளவு குறைந்தால் மூளை வேலை செய்வது பாதிக்கப்படுகிறது. அதற்கான அறிகுறிகள்:

குழறலாகப் பேசுதல்
தலை சுற்றல்
மயங்கி விழுதல்
கண் பார்வை மங்குதல்
வலிப்பு ஏற்படுதல்


இவை தவிர வேறு சில அறிகுறிகளும் ஏற்படலாம்.

இதயத் துடிப்பு அதிகரித்தல்
படபடப்பு
கை உதறுதல்
வியர்வை பெருகுதல்
பசித்தல்

இந்த அறிகுறிகள் ஏற்படுமேயானால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பார்த்தல் உசிதம்.

சர்க்கரை அளவு குறைவது எப்படி?

நாம் உண்ணும் உணவு வகைகளை மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என்று மூவகையாகப் பிரிக்கலாம். இதில், மாவுச் சத்தாகிய கார்போஹைட்ரேட்கள் சர்க்கரை அணுக்களாகச் செரிக்கப்படுகின்றன. இந்த சர்க்கரை பேரணுக்கள் (molecule) உடலின் சதையில் உள்ள செல்களுக்குச் சக்தியைத் தருகின்றன. இந்த சர்க்கரையை செல்கள் உபயோகப்படுத்த இன்சுலின் என்ற இயக்குநீர் (hormone) தேவைப்படுகிறது. இன்சுலின் அதிகமானால் சர்க்கரை வேகமாக உபயோகப்படுத்தப்பட்டு அளவு குறையலாம். ஆக, hypoglycemia ஏற்படுவதற்கு இன்சுலின் அளவு அதிகமாதல் ஒரு முக்கியக் காரணம். இன்சுலின் அளவு குறைவாக இருப்பவர் களுக்கும், இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்குமே நீரிழிவு நேய் உருவாகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு hypoglycemia ஏற்படக் காரணங்கள்:

மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட்ட பின்பு சாப்பிடத் தாமதமாதல்

வழக்கத்தை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தல்

சரியான சமயத்தில் சாப்பிடாமல் இருத்தல் (இன்சுலினில் அதிக நேரச் செயல்பாடு உடையவை உண்டு)

சிறுநீரகக் கோளாறு

ஈரல் கோளாறு (liver failure)

அதிகமாக மது அருந்துதல்

இவை தவிர நீரிழிவு நோய் இல்லாதவர்களிலும் இந்த வகை அறிகுறிகள் ஏற்படலாம்.

கணையம் என்ற நாளமில்லாச் சுரப்பியில் கட்டி ஏற்படுதல் (Insulinoma).

பிட்யூட்டரி, அட்ரினல், தைராய்டு போன்ற சுரப்பிகள் குறைவாக வேலை செய்தல்

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இந்தக் கோளாறு காணப்படலாம். இதை impending Diabetes என்று சொல்வதுண்டு.

வயிறு காலியாக இருக்கும் காலை வேளையில் சர்க்கரை அளவு குறைவதுண்டு. ஆனால் ஒரு சிலருக்கு, சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுரக்கப்பட்ட இன்சுலினின் அளவு தேவைக்கு அதிகமாகி, 'reactive hypoglycemia' ஏற்படுவதுண்டு.

Whipple's Triad

1. அறிகுறிகள் ஏற்படுதல்
2. இரத்ததில் அளவு குறைவாக இருத்தல்
3. சர்க்கரை கொடுக்கப்பட்ட பின்னர் அறிகுறிகள் சரியாகுதல்

இந்த மூன்றும் ஒரு நோயாளிக்கு இருக்குமேயானால், மேலும் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

பரிசோதனைகள்:

1. வெறும் வயிற்றில், 8-12 மணி நேர பட்டினி இருந்தபின் எடுக்கப்படும் இரத்தத்தின் சர்க்கரை அளவு
2. Glucose Tolerance test: சர்க்கரைத் தண்ணீர் அருந்திய பின்னர் 2 மணி நேரத்தில், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவு எடுக்கப்படலாம்.
3. அதே நேரத்தில் இன்சுலின் அளவு எடுக்கப்படும்.
4. தைராய்டு, அட்ரினல் போன்ற மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் அளவுகள்
5. நீரிழிவு நோயின் நிவாரண மருந்துகளின் அளவுகள்
6. வயிற்றுப் பகுதியின் CT ஸ்கேன் அல்லது MRI தேவைப்படலாம்.

நோய் தீர்க்கும் முறைகள்:

உடனடித் தீர்வு: சர்க்கரையின் அளவு குறைவது, மிகவும் ஆபத்தானது. அளவு அதிகரிப்பதை விடவும், குறைவது குறுகிய காலக்கட்டத்தில் உடலில் பாதிப்பு ஏற்படுத்த வல்லது. ஆகையால், இதற்கு உடனடியாக சர்க்கரையை வாய் வழியாகவோ, இரத்த நாளங்கள் வழியாகவோ செலுத்த வேண்டும். உடனடித் தேவைக்கு இனிப்புப் பண்டங்களும், குளிர் பானங்களும் பயன்படும். மாவுச் சத்து உணவு உண்பதால், ஒரு சில மணி நேரத்திற்குப் பலன் ஏற்படும்.

சிகிச்சை: உடனடியாகச் சர்க்கரையின் அளவை அதிகரித்த பின்னர், இந்த அறிகுறிகளுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வை மருத்துவர் கண்டறிவர். மருந்துகள் காரணமாக இருந்தால், அவற்றை மாற்ற வேண்டி வரும்.

கணையத்தில் கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். குறிப்பாக Endocrinologist என்ற நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைதளங்கள்:

www.mayoclinic.com/hypoglycemia
www.hypoglycemia.org

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com