இராமேஸ்வரம் கோயில் பிரகாரம்தான் தென்னகக் கோயில்களிலேயே மிக நீண்ட பிரகாரம். இரண்டாவது மிகப்பெரிய பிரகாரம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயில் பிரகாரம். நாகர்கோயிலுக்கு 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. தாணு என்றால் சிவன்; மால் திருமாலைக் குறிக்கும்; அயன் என்பது பிரம்மாவைக் குறிப்பது. ஆக, மும்மூர்த்திகளும் ஒரே லிங்க வடிவில் காட்சி தரும் தலம் இது.
ஞானாரண்யம் என்ற ஊர்தான் பின்னால் சுசீந்திரம் என்று வழங்கப் படலாயிற்று. சுசீந்திரம் என்ற பெயருக்கும் இந்திரனுக்கும் தொடர்பு உண்டு. இந்திரன் ஒரு காலத்தில் கௌதம முனிவரின் மனைவி அகலிகையிடம் தகாத விருப்பம் கொண்டதன் காரணமாக முனிவரின் சாபத்துக்கு ஆளானான். சாப விமோசனம் பெறுவதற்காக ஞானாரண்யம் சென்று தாணுமாலயனைக் குறித்து நீண்ட காலம் தவம் செய்து சாப விமோசனம் பெற்றான். இவ்வாறு ஞானாரண்யத்தில் இந்திரன் சுத்தி பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்றாயிற்று. சாபம் தீர்ந்த இந்திரன் மும்மூர்த்திகளுக்கும் இங்கு தனித்தனி கோயில்களைக் கட்டினான் என்றும், தினந்தோறும் இந்திரனே வந்து இக்கோயில் அர்த்தஜாம பூஜையை நடத்து வதாகவும் கூறப்படுகிறது.
கோயிலின் தொன்மை
கோயில் தல விருட்சமாக இங்கு காணப்படும் கொன்றை மரத்தின் வயது 2000 ஆண்டு களையும் கடந்தது என்ற ஒன்றே இதன் பழமைக்குப் போதிய ஆதாரம். இம்மரத்தின் அடியில் வீற்றிருக்கும் தாணுமாலயனின் பெருமைக்கும் இது சான்று. கோயில் பிரகாரத்தில் காணப்படும்
கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இக்கோயிலின் தொன்மைக்கு மற்றுமோர் சிறந்த சான்று. வடக்குப் பிரகாரத்தின் கோடியில் ஜயந்தீச்வரர் என்னும் பெயரில் தனித்து ஒரு கோயில் காணப்படுகின்றது. வனவாசத்தின் போது பாண்டவர்களால் வழிபடப்பட்ட கோயில் என்றும் இதற்கு 'பஞ்ச பாண்டவர்' கோயில் என்றொரு பெயரும் உண்டு என்றும் கூறப்படுகிறது.
கோயில் மண்டபங்கள்
கொடி மண்டபம், செண்பகராமன் மண்டபம், கருட மண்டபம், அலங்கார மண்டபம், வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என ஆங்காங்கே மண்டபங்கள் பல அமைந்து இக்கோயிலுக்குப் பொலிவூட்டு கின்றன. இவை பெரும்பாலும் பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் பரம்பரையில் வந்தவர் களால் கட்டப்பட்டன என்று வரலாறு தெரிவிக்கின்றது.
கோயிலில் காணப்படும் சன்னிதிகள்
மண்டபங்கள் பல இருப்பது போலவே இக்கோவிலில் சன்னிதிகளும் நிறையக் காணப்படுகின்றன. விநாயகர், முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், ஐயப்பன், ஸ்ரீராமர், கருடாழ்வார், துர்க்கை, வேணுகோபாலன், குழந்தைக்கண்ணன், மகாதேவர், சங்கரநாராயணன், சண்டிகேசு வரர் என்று பல சன்னிதிகள் இக்கோயிலில் அமைந்துள்ளன. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் எழுப்பப் பட்டவை என்பது இங்குள்ள சிற்பக்கலை அமைப்பைக் கொண்டு அறிய முடிகின்றது. இங்குள்ள மண்டபங்களும் கல்வெட்டுக்களும் இக் கோயிலின் தொன்மைக்குச் சான்று கூறுகின்றன.
கோயிலின் சிற்பக்கலையின் சிறப்பு
சுசீந்திரம் கோயிலின் கதவுகள் மட்டுமே மரத்தாலானவை. மற்ற அமைப்புகள் அனைத்தும் கல்லால் செதுக்கப்பட்டவை என்பது பார்த்து மகிழத் தக்கது. ஊஞ்சல் மண்டபத்தின் நடுவில் ஒரு கல் மேடை. அதைச் சுற்றிலும் நான்கு தூண்கள். ஒவ்வொன்றும் ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்டது. நான்கு தூண்களிலும் அழகிய வேலைப்பாடமைந்த சிற்பங்கள். ஒரு தூணில் தோளில் கரும்பு வில்லேந்தி புஷ்ப பாணம் தொடுக்க நிற்கும் தோற்றத்தில் மன்மதன்; அடுத்த தூணில் கையில் கிளியை ஏந்தியபடி ஒய்யாரமாய் நிற்கும் ரதி; மற்ற இரு தூண்களில் கர்ணன், அர்ஜுனன் என்று செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கண்ணழகு, புருவம், கூந்தலின் வரிகள், ஆடைகளின் மடிப்புகள், ஆபரணங்களில் பதிக்கப்பட்ட கற்களின் வேலைப்பாடுகள், கைகால் விரல் நகங்களின் கூர்மை என்று அங்கம் அங்கமாகத் தங்கள் சிற்பக் கலைத் திறனை வெளிப்படுத்தியுள்ள நம் கலை வல்லுநர்களின் திறமைக்கு இணை ஏது! எல்லாக் கோயில்களிலும் பொதுவாக நவக்கிரகங்கள் கற்சிலை வடிவில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். ஆனால் இங்கு ஊஞ்சல் மண்டபத்தில் கல்லாலான மேற்கூரையில் பன்னிரண்டு இராசிகளும், நவக்கிரகங்களும் செதுக்கப் பட்டிருக்கும் அதிசயத்தைக் காணலாம். நீண்ட பிரகாரத்தில் நேராகக் கோடு கிழித்தாற்போல வரிசையாக அமைந்த தூண்களில் பாவை விளக்கைக் கைகளில் ஏந்திய பெண்களின் உருவங்களும், யாளி, களிறு போன்ற உருவங்களும் செதுக்கப் பட்டிருக்கும் அழகைக் காணலாம்.
வடக்குப் பிரகாரத்தில் செதுக்கப் பட்டிருக்கும் நான்கு இசைத்தூண்கள் மிகப்பிரபலமானவை. இந்நான்கில் இரண்டு தூண்களில் 25 சிறு தூண்களும் மற்ற இரண்டு தூண்களில் 33 சிறு தூண்களும் செதுக்கப் பட்டுள்ளன. இவற்றை விரலால் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஒலிகளைக் கேட்கலாம்.
சித்திர சபையின் வாயிலின் இருபுறமும் மிகப் பெரிய இரு யானைகள் உயிருள்ளவை போலவே மிகவும் நேர்த்தியாகக் கல்லிலே செதுக்கப்பட்டிருக்கின்றன. கருட மண்டபத்தில் ஆறரை அடி உயரத்துக்கு வழவழப்பாகப் பளிங்குபோல் செதுக்கப் பட்டுள்ள கருடாழ்வார் சிலையும், திருமலை நாயக்க மன்னர் சிலையும் சிற்பக் கலை நுட்பத்துக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன. சிலையின் ஒரு காது துவாரத்தின் வழியே ஒரு மெல்லிய கம்பியை நுழைத்தால் அது இன்னொரு காதின் வழியே வெளிவருமாறும் நாசித் துவாரத்தின் வழியாகவும் வெளிவருமாறும் செதுக்கப் பட்டுள்ள அதிசயத்தை வியக்காமல் இருக்க முடியாது. எனவே சுசீந்திரம் ஓர் அருமையான கலைக்கூடம் என்று கூறுவது பொருத்தந்தானே.
டாக்டர். அலர்மேலு ரிஷி |