விசையும் தனி, திசையும் தனி
அன்புள்ள சிநேகிதியே

வணக்கம்.

தொழில்ரீதியாக உங்களை நான் இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன். இப்போது கலி·போர்னியாவுக்கு வந்து இருக்கிறேன். வந்து ஒரு வருடம் ஆகிறது. இந்தத் திட்டப்பணி முடிந்து இந்தியாவுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்த போது எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. அவரும் என்னைப் போலவே இங்கே பிராஜக்டில் வந்து இருக்கிறார். பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்தது எங்கள் திருமணம். எங்கள் குடும்பங்களில் இன்னும் வரதட்சணை விவகாரம் உண்டு. நான் வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். இந்தத் திருமணம் நிச்சயம் ஆகும் நிலைமையில் என்னுடைய பெற்றோர்களைக் கேட்டபோது அவர்கள் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார்கள். நானும் சரி என்று முடிவு செய்து இங்கே நாங்கள் இருவரும் மின்னஞ்சல், தொலைபேசி என்று சந்தோஷமாகத் தொடர்பு வைத்துக் கொண்டோம். என்னுடைய வரதட்சணை கொள்கையைப் பற்றி என்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவருக்கும் தெரியும்.

போன வாரம் நான் இந்தியாவில் இருக்கும் என் சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பெற்றோர்கள் எதற்காக ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்கிற விஷயத்தை உளறிவிட்டாள். வீட்டை வரதட்சணையாகத் தரப் போவதாகப் பேச்சு. நான் உடனே மனம் கொந்தளித்து இவருக்கு போன் செய்து கேட்டேன். அவர் இதைப் பற்றித் தெரிந்தது போலவும் சொல்லவில்லை. தெரியாதது போலவும் சொல்லவில்லை. இதை மிகச் சிறிய செய்தியாக எடுத்துக் கொண்டார். 'இதையெல்லாம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறாய். உன் பெற்றோர் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். என் குடும்பத்தினர் அதை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். பின்னால் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்' என்றார்.

இப்போது முதல் தடவை மனதுக்குள் ஒரு பயம் ஆரம்பித்திருக்கிறது. முன்னால்கூட என்னுடைய பழக்க வழக்கங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் குடும்பத்தில் நான் ஒருத்திதான் வெஜி டேரியன். சாமி பைத்தியம். தியானம் செய்வேன். 'பின்னாலே இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்' என்று சில சமயம் சொல்லியிருக்கிறார்.

நிறைய வேறுபாடுகள் இருக்கும் போல இருக்கிறதே, எங்கே அட்ஜஸ்ட் செய்து கொள்ளப் போகிறோம், யார் அட்ஜஸ்ட் செய்யப் போகிறார்கள் என்ற கவலை யெல்லாம் எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் முடிவு எடுத்துவிட்டேனோ என்று சந்தேகம் கிளம்பிவிட்டது. என்னுடைய நண்பர்களிடம் சொன்னால் 'ஜாக்கிரதையாக இரு. உன் பிடியை விட்டுக்கொடுத்துவிடாதே. நீ எதையும் மாற்றிக் கொள்ளாதே' என்று எனக்கு தைரியம் கொடுப்பது போல பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் இருக்கும் தைரியமும் போய்விடுகிறது. என் பயத்துக்கு என்ன மருந்து. அதாவது உங்கள் பார்வையில்?

இப்படிக்கு,
............

அன்புள்ள சிநேகிதியே...

படகு தயாராக இருக்கிறது கரையோரம், உங்களை ஏற்றிச் செல்ல. துணையும் காத்திருக்கிறது. உங்களுடன் வர. கரையில் இருந்து கொண்டு தண்ணீரைப் பார்க்கும் போது இருக்கும் பாதுகாப்பு உணர்ச்சி, படகில் போகும் போது பரவசத்துடன் விழிப்புணர்ச்சியும் சதா இருந்து கொண்டே இருக்கும். பிறருடைய அனுபவமும், ஆலோசனையும் படகைச் செலுத்துவதில் கை கொடுத்தாலும் எங்கே, எப்படி, எந்த வேகத்தில், எந்த திசை என்பதற்குத் துணையும் ஒத்துழைக்க வேண்டும். இயற்கை ஒத்துழைக்க வேண்டும். நம்மை ஆளும் அந்த மாபெரும் சக்தியும் ஆசி தர வேண்டும்.

உங்கள் வருங்காலக் கணவர் கூறுவதும் ஒரு வகையில் சரியே. நீரின் ஆழத்துக்கும் வேகத்துக்கும் தகுந்தாற் போல நாம் படகை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகிறோம். (சதா அந்த விழிப்புணர்ச்சி). Life is nothing but challenging excitements and compromising adjustments. ஆனால், நீங்கள் ஒரு அழகான கேள்வி கேட்டீர்கள். 'யார் எப்படி அட்ஜஸ்ட் செய்வது' - இது தான் பிரச்னை. இது தான் தீர்வு. தாம்பத்திய உறவை உடல் ரீதியானதாக நினைப்பவர்களுக்கு இது 'பிரச்னை'யாக இருக்கும். இரண்டு ஆத்மாக் களின் சங்கமம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பரிகாரமாக தெரியும். (இது போல நாம் நிறைய பேரைப் பார்க்க முடியாது. வெறும் theoryதான் என்று வைத்துக் கொள்ளுங் களேன்).

அதே சமயம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தத் துணை வேண்டாம் என்று வேறு உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவராகத் தேர்ந்தெடுத்தாலும் வேறு சில விஷயங்களில் adjustment problem இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஆரம்பிப்பது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். எந்த வயதில், யாருடனும், எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் அந்த பயம் இருக்கத்தான் செய்யும். நான் சொல்லும் சில கருத்துக்கள் உங்களுக்கு உதவி செய்கின்றனவா என்று பாருங்கள். உங்கள் துணை

1. அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றனவா?
2. மனிதாபிமானம் உள்ளவரா?
3. விருப்பு, வெறுப்புக்கள் அதிகமாக உள்ளவரா?
4. உங்கள் அறிவையும், தொழிலையும் மதித்து கேள்விகள் கேட்டிருக்கிறாரா?
5. சொல்லும் வாக்கைக் காப்பாற்றுபவரா?

இப்படி 108 நான் எழுதிக் கொண்டே போகலாம். அப்புறம் எந்தப் பெண்ணும் எந்த ஆணும் யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்கள் அறிவு, உங்கள் அனுபவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் முக்கியமாக விரும்பும் 2 குணங்கள் அவரிடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு படகில் குதிக்கவேண்டியதுதான்.

இங்கே ஒவ்வொருவர் படகும் தனி, திசையும் தனி. விசையும் தனி. கொஞ்சம் சவால்களும் இருக்கட்டும், வெறும் பய உணர்ச்சியுடன் மட்டும் ஏறாதீர்கள். அது பின்னால் கசப்பில் கொண்டு விடும்.

உங்களைப் பற்றி முழு விவரம் தெரிந்தாலே எனக்கு தைரியமாக இதை செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. அதுவும் பாதி விவரத்தில் எனக்கு யாரையும் யாருடைய குணாதிசயங்களையும் எடை போட முடியாது. ஆகவே you are the best judge. உங்கள் நல்ல குணத்துக்கு அருமையான வாழ்க்கை அமையும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com