திலீப் குமார்
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் 1970களில் உள்நுழைந்து அடக்கமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திலீப்குமார். ஞானரதம், கணையாழி ஆகிய சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். இருப்பினும் எழுத்து முயற்சிகளில் அசுரவேகம் கொண்டவரல்லர். தேர்ந்த வாசகர். இதுவே படைப்பிலக்கியச் செயற்பாட்டின் தன்மையை நன்கு செதுக்கி வெளிப்படுத்தும் என்பதை உணர்வு பூர்வமாக நம்பி இயங்குபவர்.

இதுவரை மூங்கில் குருத்து (1985), மௌனியுடன் கொஞ்சதூரம் (1992), கடவு (2000) ஆசிய நூல்களையும் மற்றும் 'வாக்' சிறுகதைகள் 1997 (கதா அறக் கட்டளை), மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் (1999) ஆகிய திலீப்குமாரின் நூல்கள் வெளியாகி உள்ளன.

வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்குப் பிழைக்க வந்த குஜராத்திக் குடும்பத்தில் பிறந்து, குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது பதினான்காவது வயதிலேயே கல்வி வாய்ப்பை இழந்தவர். வறுமை காரணமாக அடித்தட்டுத் தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்.

தமிழ் மொழி, கலாசாரம் இவற்றின்மீது ஈடுபாட்டோ டு வளர்ந்து வந்தார். சுய முயற்சியால் தமிழைக் கற்றார். நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொண்டார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளைப் படித்ததன்மூலம் தானும் எழுத வேண்டுமென்று உற்சாகம் கொண்டார். தான் எழுதத் துணிந்தமைக்கு ஒரு காரணமாக திலீப்குமார் இப்படிக் கூறுவார், "பொருளாதாரக் காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே என் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை--இந்தப் பின்புலத்திற்கு எதிர் வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய, சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக எழுத்தை நான் மேற்கொண்டேன்" என்று அவர் குறிப்பிடுவார்.

உண்மையில் திலீப்குமார் நவீன இலக்கியப் பிரக்ஞையுடன் இயங்குவதற்கான மனநிலையை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார். தொடர்ந்த வாசிப்பு, தேடல், கலை இலக்கியம் சார்ந்த உரையாடல் அவரது ஆளுமையைப் பண்படுத்தி வளர்த்து வருகிறது எனலாம். இருப்பினும் எந்தவொரு இலக்கியக் கொள்கையோடும் முழுமையாகத் தன்னை இணைத்துக் கொண்டவர் அல்லர். "ஒரு நல்ல இலக்கியப் படைப்பு உருவாகத் தேவையாக இருப்பது அதன் பன்முகத் தன்மைதான். இதுதான் அடிப்படை. தத்துவத்தின் இழைகளோ அரசியல் இழைகளோ ஒரு படைப்பினூடாகத் தெரிந்தாலும் ஒரு படைப்பு முதன்மையாக ஒரு பொது அக்கறையின் தனித்துவமான வெளிப்பாடுதான்" என்பதை இலக்கியப்படுத்தும் பாங்குதான் திலீப்குமாரின் தனிச்சிறப்பு.

மனித இயல்பின் சாதாரண வினோதங்கள், நிகழ்ச்சிகள், மனிதமனம் படும் பாடுகள் பற்றிய புரிதல், பார்வை ஆகியவை இவரது படைப்பிலக்கியத்தின் வலுவான கூறுகள் எனலாம். மேலும் தனது அனுபவம், அறிவுசார்ந்த எல்லைகளுக்குள் மட்டும் நின்று வாழ்க்கையை நுண்மையாகப் பரிசீலிக்க முற்படுகிறார். இதனை அறம் சார்ந்த கோட்பாட்டாக்கம் செய்யும் பெரும்பணியில் ஈடுபடாமல், வாழ்கையின் விரிதளம் நோக்கிய நகர்வாகவே பயணம் செய்கின்றார். இதன் நுண்தளமாகவே சிறுகதைகள் அமைவு பெற்றுள்ளன.

படைப்பிலக்கியம் தவிர மொழிபெயர்ப்பு, விமரிசனம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றார். குஜராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமைமிக்கவராகவே உள்ளார். படைப்புமொழி சார்ந்து அதன் முழுமையை, நுட்பங்களின் தொகுப்பால் வழிநடத்தப்படும் தன்மைகளைக் கதை சொல்லியின் எடுத்துரைப்பில் இனங்காணலாம். இதைவிட, விமரிசனம்கூடப் படைப்பிலக்கிய மொழியின் தன்மையை உள்வாங்கி வெளிப்படுதல் இவரது தனிச்சிறப்பு.

நவீன தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் திலீப்குமார் எழுத்துக்குத் தனித்தன்மை உண்டு. பன்முகம் கொண்ட தமிழ்ப் படைப்பு வெளியில் திலீப்குமார் தனக்கான பயணத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார்.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com