எந்தரோ மகானுபாவுலூ அந்தரீக்கி வந்தனமுலு' என்ற தியாக பிரும்மத்தின் பாடலை அறியாதவர் இல்லை. அப்பேர்ப்பட்ட தியாகராஜரை மனத்தில் நிறுத்தி சங்கீதம் பயில்பவர்கள் பலர். அவ்வாறு சங்கீதம் பயின்ற, பயில்கின்றவர்களின் இசைத்திறனை வெளிக்கொணர தியாகராஜரின் பெயரி லேயே சிகாகோவில் விழா எடுத்து வருகிறார் டாக்டர் டி.ஈ.எஸ். ராகவன். அந்த அமைப்பின் பெயரே 'சிகாகோ தியாகராஜ உத்சவம்'. 1977ல் தொடங்கி இன்றுவரை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார் ராகவன்.
இல்லினாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணியாற்றும் ராகவன் சங்கீதப் பிரியர் மட்டுமல்ல, தமிழ்ப் பிரியரும்கூட. நம்மோடு சுத்தமான தமிழில் வெகு சரளமாக உரையாடினார். அந்தச் சுவையான உரை யாடலில் இருந்து...
கே: உங்களது பூர்வீகம் எது?
ப: நான் தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த புலவனூரில் பிறந்தேன். தந்தை நரசிம்மாச்சாரியார் சிறந்த சமஸ்கிருத பண்டிதர். சிரோன்மணி. சென்னையிலுள்ள முத்தியால்பேட்டை ஹைஸ்கூலில் சமஸ் கிருதம் கற்பித்தார். நான் படித்தது தமிழிலும் ஆங்கிலத்திலும். ஆனால் வீட்டில் தந்தை யிடம் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டேன். குறிப்பாக கவிச்சக்ரவர்த்தி காளிதாசரின் 'ரகுவம்சம்', 'மேகதூதம்' ஆகியவை எனக்கு மனப்பாடம். என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா இரண்டு தங்கைகள். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்ஸி முடித்த பிறகு ISIயில் பிஎச்.டி. முடித்தேன். 1966-ல் கல்லூரி விரிவுரையாளர் பொறுப்பேற்று லண்டன் சென்றேன். 1969-ல் அமெரிக்கா பிரவேசம். இங்கு இல்லினாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன்.
கே: நீங்கள் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் போல் இருக்கிறதே. அதுவும் நம் ராமனுஜரைப் போல், கணிதத்துறையில்.
ப: ராமானுஜர் எங்கே, நான் எங்கே! 'கேம் தியரி' என்ற தலைப்பில் நான் ஆராய்ச்சி செய்தேன். 1971-ல் 'Some Topics in Two-Person Games' என்ற நூலை எழுதினேன். இதை ரஷ்ய மொழியில் பெயர்த்திருக் கிறார்கள். ஐரோப்பாவில் பல கல்லூரிகளில் பட்ட வகுப்புகளில் பாடநூலாக இருக்கிறது. 1997-ல் 'Non negative Matrices and Applications' என்ற புத்தகத்தை எழுதினேன். இதில் என்னுடன் துணை ஆசிரியராகப் பணி புரிந்தவர் என் மாணவர் திரு பாபட் அவர்கள். அவரே தற்போது ISI தலைவரும் ஆவர். என் மேற்பார்வையில் 11 மாணவர்கள் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
கே: தற்போது நீங்கள் செய்து வரும் ஆய்வு என்ன?
ப: தற்போது மிகவும் பேசப்பட்டு வரும் 'Algorithmic games' என்ற தலைப்பில் அவற்றிற்குத் தீர்வு காணும் விதங்களில் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
கே: கணிதம் எங்கே.. சங்கீதம் எங்கே!
ப: கணிதம், ஆராய்ச்சி ஞானம் மூலம் வந்தது. சங்கீதமோ கேள்வி ஞானம் மூலம் நான் அடைந்த சொத்து. எங்கள் வீடு சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தது. நான் தெய்வ ஈடுபாடு அதிகம் கொண்டவன். அடிக்கடி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலுக்குப் போவேன். அங்கே அரியக்குடி, வேதாரண்யம் வேதமூர்த்தி, ஜிஎன்பி போன்ற பல மேதைகளின் கச்சேரிகளை ரசித்துக் கேட்டிருக்கிறேன். எங்கள் வீட்டின் அருகிலிருந்த பெண்மணிகளும் மிக நன்றாகப் பாடுவார்கள். அதையும் ரசித்துக் கேட்பேன். எனக்கே நல்ல குரல் வளம் உண்டு. ஒருமுறை என் தந்தையார் என்னை வீணை வித்வான் மற்றும் இசை வல்லுனர் எஸ். ராமநாதனிடம் அழைத்துச் சென்றார். பாடம் பயிலத் தொடங்கு முன் எனக்கு சுருதிப் பெட்டி வாங்கிக் கொடுக்கச் சொன்னார். அதை வாங்க வசதியில்லாததால் என் சங்கீதப் பயிற்சி அத்தோடு நின்றுவிட்டது. கேள்வி ஞானமே மிஞ்சியது. 1962-ல் ISIயில் Ph.D படிக்கச் சென்றேன். அங்குள்ள மற்ற மாணவர்களுடன் ஹிந்துஸ்தானி இசையை ரசிக்கக் கற்றுக் கொண்டேன். மேலும் பாலமுரளி கிருஷ்ணா, லால்குடி ஜெயராமன், ஆலத்தூர் சகோதரர்கள், மதுரை மணி இவர்களின் LPக்களையும் கேட்டு ரசிப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் இங்கிலாந்து சென்றேன். அங்கே பல்வந்த் ரெட்டி என்ற அருமையான நண்பர் கிடைத்தார். அவரிடம் ஏராளமான இசைத்தட்டுகள் இருந்தன. அவர் வீட்டில் இல்லாத நேரம் அவர் அனுமதியுடன் ஒரே நாளில் 50 தடவை ஒரே இசைத்தட்டைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டேன். லால்குடியின் மத்தியமாவதி ரொம்பப் பிடிக்கும். பாலமுரளியின் குரலுக்கு நான் என்றுமே அடிமை. அமெரிக்கா வந்த பிறகு இன்னமும் சங்கீத வெறி அதிகமானது. இன்றைய அமெரிக்கா வேறு. அன்றைய நிலைமை வேறு.
கே: அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்..
ப: நான் 1969-ல் அமெரிக்கா வந்தேன். இன்றுபோல் அன்று இத்தனை பொழுது போக்குச் சாதனங்கள் கிடையா. கம்ப்யூட்டர் பிரபலமில்லை. இன்டர்நெட் கிடையாது. வேலை முடிந்தபின் எப்பொழுதும் சங்கீத வேட்டைதான். யாரிடம் எந்த நல்ல இசைத்தட்டு இருந்தாலும் அதன் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொள்வேன். ஊர் ஊராகச் சென்று கேட்டு வாங்குவேன். சிகாகோவிலிருந்து மேடிசன் போவேன். 1971-ல் லால்குடி-ரமணி கச்சேரி கேட்க டெட்ராய்ட் வந்திருக்கேன். இப்படிக் கேட்டுக் கேட்டே ராகங்களைக் கற்றுக் கொண்டேன்.
கே: சிகாகோ தியாகராஜ உற்சவம் உருவானது பற்றி..
ப: தியாகராஜ ராவ் என்று எனக்கு ஒரு நண்பர். தஞ்சாவூர்க்காரர். நல்ல சங்கீத ஞானமுடையவர். முதன்முதலில் 1977-ல் அவரது இல்லத்தில் எளிய முறையில் தியாகராஜ கிருதிகளைப் பாட ஒரு கோஷ்டியை அமைத்து இந்த வைபவத்தைத் தொடங்கினோம். ஒரு வருடம் அவர் வீட்டில், அடுத்த வருடம் என் வீட்டில் என்று மாறிமாறி நடத்தி வந்தோம். 100 பேர் வருவார்கள், அத்தனை பேருக்கும் சாப்பாடு உண்டு. தியாகராஜ ராவ் மேடிசன் சென்று விட்டார். பிறகு நிரந்தரமாக இவ்விழாவை சிகாகோவிலேயே கொண்டாடத் தொடங்கினோம்.
கே: உங்கள் இணையதளத்தைப் பார்த்திருக்கிறேன் (www.tyagaraja-chicago.org). நண்பர்கள் பலரின் குழந்தைகள் இப்போட்டிகளில் பங்கேற்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு பெரிய அசுவமேத யாகம் போல் அல்லவா இவ்விழாவை நடத்துகிறீர்கள்?
ப: ஆம். எங்கள் விழாவின் அளவும் பெரிது. தரமும் பெரிது. 8 பிரிவுகளில் போட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் முதல் பரிசு $250. 2007ஆம் ஆண்டு 150 குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். முதலில் தம் இசையை அவர்கள் சி.டி.யில் பதிவு செய்து குறிப்பிட்ட தேதிக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். அவற்றுள் சிறந்த 30 கலைஞர்களை சங்கீத மேதைகள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்வு பெற்ற குழந்தைகள் அவரவர் ஊரிலிருந்து சிகாகோ வந்து நீதிபதிகள் முன் தம் திறமையை நேரிலேயே காண்பிப்பார்கள். அவற்றுள் தான் இறுதித் தேர்வு நடக்கும்.
கே: ISI மாணவர் என்பதால் தரத்தில் இவ்வளவு அக்கறையோ?
ப: அப்படியில்லை. இப்படி சல்லடை போட்டுத் தேர்வு செய்வதால் மாணவர்கள் இன்னும் சிரத்தையுடன் தம் கலையைப் பயில்கிறார்கள். மேலும் நாங்கள் ஸ்பான்சர்களையே நம்பியிருக்கின்றோம். இந்த உயர் தரத்தை அளிப்பதால் ஸ்பான்சர்களும் தயங்காமல் கொடை அளிக்கிறார்கள். இரண்டு டாக்டர்கள் இவ்விழா நடக்கும் அரங்கிற்கான தொகையை 10 ஆண்டுகள் வரை ஸ்பான்சர் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்கள். விழா தொடங்கிய காலத்தில் இன்று போல் அத்தனை கோவில்கள் கிடையாது. நிறைய பள்ளிகளை அணுகி அங்குள்ள ஆடிட்டோரியத்தில் விழா நடத்துவோம். பள்ளிக்கு காப்பீடு கட்ட வேண்டும். பல இடங்களில் மைக் தொல்லை. இன்று சிகாகோவில் இரண்டு அருமையான கோவில்கள் வந்துவிட்டன. 300க்கு உட்பட்ட மக்களே வருவதென்றால் பாலாஜி கோவில் அரங்கத்தை புக் பண்ணுவோம். பெரிய கூட்டத்தை எதிர்பார்த்தால் ராமர் கோவிலில் ஏற்பாடு செய்வோம்.
கே: பாட்டுக் கச்சேரிக்கு மட்டுமா இவ்வளவும்?
ப: இல்லை. 1978லிருந்து நாங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும் வழங்கி வருகிறோம். 'சாரிஞ்சனை' என்ற தியாகராசரின் பாடலுக்குத்தான் முதன்முதலில் குழந்தைகள் நடனமாடின. இப்போது பல நடன ஆசிரியர்கள் ஆதரவளிக்கிறார்கள். சங்கீத வித்வான்கள் இந்தியாவிலிருந்து வந்து சில நாட்கள் தங்கிப் பயிற்சி முகாம் நடத்து கிறார்கள். இந்த ஆண்டு 'மிஸ்டிக் வுமென் ஆ·ப் இந்தியா' என்ற தலைப்பில் 4 இந்தியப் பெண்மணிகளைப் பற்றி நடன விழா அமைத்தோம். ஆண்டாள், அக்கமஹாதேவி, காரைக்கால் அம்மையார், மீராபாய் ஆகியோரின் சரிதங்களை அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் நடன ஆசிரியைகளாக விளங்கும் நான்கு கலைஞர்களைக் கொண்டு சித்திரித்தோம்.
கே: ஆஹா! இந்தியாவிலிருந்து வித்வான்கள். கனடா மற்றும் அமெரிக் காவில் வசிக்கும் இந்தியர்களின் குழந்தைகள் மற்றும் இசை வல்லுநர்கள். ஒரு வசுதேவ குடும்பத்தையே நீங்கள் ஒன்றாக இணைக்கிறீர்களே...
ப: இது மட்டுமா? நீங்கள் ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது. இத்தனை பேர் கூடி மூன்று நாள் விழா நடத்த இன்னும் எத்தனை பேரின் உதவி தேவையாகும். உணவு பரிமாற ஒரு குழு. நுழைவுச் சீட்டு விநியோகம் செய்ய ஒரு குழு. விழா மலர் தயாரிக்க ஒரு குழு. இதர ஏற்பாடுகளை கவனிக்க ஒரு குழு. நாங்கள் ஒரு கார்ப்பரேட் கம்பெனி நடத்தாதது மட்டும்தான் ஒரு குறை. அந்த அளவுக்கு எங்களிடம் தொண்டர்கள் உள்ளனர். அத்தகைய உயர்தரத்தோடு தான் அவர்கள் வே¨லையும் செய்கின்றனர். ஒரு சிறிய இந்தியாவையே காணலாம். அவர்கள் அத்தனை பேரின் உதவியோடு 31 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஒரு ஆண்டுகூட விழாவை நிறுத்தியதில்லை.
கே: விருந்தோம்பலும் தமிழர் பண்பாடு. அதைத் திறம்படச் செய்கிறீர்களே?
ப: ஆமாம். மூன்று நாட்களும் நாங்களே மூன்று வேளையும் உணவு பரிமாறுவோம். அதுவும் கல்யாண சமையல் சாதம்தான். முதல்நாள் நாங்களே சமைப்போம். இரண்டு, மூன்றாம் நாட்களில் சாப்பாடு வெளியிலிருந்து தருவிப்போம். 125 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமையலில் ஈடுபடுவோம். என் பொறுப்பு நேந்திரங்காய் வறுவல் செய்வது. ஒரு கிரேட் நேந்திரம் வாங்கி, தோல் சீவி, அடுப்பு மூட்டி கிட்டத்தட்ட 9-10 மணி நேரம் நானே வறுவல் செய்வேன்.
1986வரை நானும் என் துணைவியார் உஷாவும் 36 புட்டி ஊறுகாய் மட்டும் தயார் செய்து வந்தோம். என்னைப் பொறுத்தவரை நம்முடைய தனித்துவம், 60 சதவீதம் கலை, கலாசாரம் மூலமும், 30 சதவீதம் வரை உணவு மூலமும், 10 சதவீதம் உடை மூலமும் பிரதிபலிக்கப்படுகிறது. இதைப் பேணிக் காக்க வேண்டும்.
கே: ஆக சங்கீதம் மூலம் நீங்கள் முழுமை யான நிறைவு அடைகிறீர்களா?
ப: சங்கீதம் நிறைவு தரும்தான். ஐயமில்லை. ஆனால் முழுமையான நிறைவு கொடுப்பது நம் குடும்பம்தான். என் மூத்த மகள் ஒரு பி.எச்டி. இளைய மகள் காப்புரிமைச் சட்ட வல்லுனர். மகன் கல்லூரியில் பயில்கிறார். மனைவி உஷா ஒரு சிறந்த இல்லதரசி. நாம் நாடு விட்டு நாடு வந்தாலும் நம் கலாசாரத்தை மறக்கக்கூடாது. இந்தியாவிலிருந்து வரும் இளைய தலைமுறை தாய் தந்தையர் தம் குழந்தைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் கற்று கொடுப்பது. வீட்டில் கிருஷ்ணர் கால் வரைந்து கோகுலாஷ்டமி கொண்டாடுவது போன்ற இந்தச் செயல்களே எனக்கு முழுநிறைவு தரும் விஷயங்கள்.
கே: கொடை எவ்வளவு முக்கியம்?
ப: கொடை ரொம்ப முக்கியம். நான் ஒன்று சொல்லியே தீர வேண்டும். இங்குள்ள சில தெலுங்கர்கள் பெரும் கொடை வள்ளல்கள். தமக்குப் பிடித்த விஷயங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். அமெரிக்க மக்களுக்கோ கொடை என்பது ரத்தத்தில் ஊறிப் போன விஷயம். மார்ச் ஆப் டைம்ஸ் சால்வேஷன் ஆர்மி என்று எத்தனை சங்கங்கள் இயங்கி வருகின்றன. நாமும் நம்மால் முடிந்ததை நன்கொடையாகத் தர முன் வரவேண்டும். கோவிலுக்குக் கொடுப்பது சரியா, ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பது சரியா என்ற சர்ச்சை நம் மனதில் எழ வாய்ப்புண்டு. அவரவர் மனதிற்கு எது தர்மம் என்று தோன்றுகிறதோ அதற்குக் கொடுக்க வேண்டும்.
கே: தமிழில் பிடித்த எழுத்தாளர்கள்?
ப: நான் திருவள்ளுவரின் பரம விசிறி. நிறைய குறள்கள் மனப்பாடம். அர்த்தமும் தெரியும். சுஜாதா, ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், எஸ். ராமகிருஷ்ணன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள். வாலியின் கவிதைகள் எனக்கு உயிர். அவருடைய அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகியவற்றை உரக்கப் படித்து கேசட்டில் பதித்து வருகிறேன். நான் நிறையப் புத்தகங்கள் படிப்பேன். குறிப்பாக சங்கீதம் மற்றும் வரலாற்றுப் புத்தகங்கள் என்றால் உயிர்.
கே: கர்நாடக சங்கீதத்தைப் பேணிக் காக்கும் நீங்கள் தமிழ் இசையை ஏன் வளர்ப்பதில்லை. அதையும் செய்யலாமே?
ப: தமிழ் மேல் பற்றுள்ள நான் தமிழிசையைப் புறக்கணிப்பேனா? சின்ன வயசில் நிறைய தெருக்கூத்துக்களை ரசித்துப் பார்ப்பேன். கடந்த இரண்டு வருடங்களாக ஷேக் சின்ன மெளலானாவின் பேரன் 'சுபான் பாபு' அவர்களைத் தவறாமல் இந்தியாவிலிருந்து அழைத்து வந்து வாசிக்க வைக்கி றேன்.கர்நாடக சங்கீதம் என்றால் ஸ்பான்சர்கள் நிறைய முன் வருகிறார்கள். தமிழிசையை ஆதரிக்க அத்தனை ஸ்பான்சர்கள் முன் வருவதில்லையே. நான் என்ன செய்ய முடியும்?
கே: துணுக்குச் செய்திகள் வாசிக்க உங்களுக்கு மிகவும் பிடிக்குமாமே. அண்மையில் வாசித்த ஒன்றிரண்டைச் சொல்லுங்கள்...
ப: சொல்கிறேனே. ஆரம்ப காலத்தில் குச்சுப்புடி நடனத்தை ஆண்கள் மட்டுமே ஆடி வந்தனராம். பெண்களுக்கு அப்போது அனுமதியில்லை. அடுத்த செய்தி மிக ஆச்சரியமானது: அருணகிரிநாதரின் பூர்வீகம் வங்காளமாம்.
சந்திப்பு:காந்தி சுந்தர் |